என் பின்னூட்டங்கள்
பெரும்பாலும் என் பின்னூட்டங்கள் கடைசியில்தான் வரும். காரணம் எனக்கு கிடைக்கும் சொற்ப நேரத்தில் பதிவுகளை படித்து முடிக்கவே நேரம் சரியாக போய் விடும். பிறகு தனியாக பின்னூட்டம் இடுவேன். சில சமயம் ரொம்ப நாளாகி விட்டது, இனிமேல் பின்னூட்டம் அளித்தாலும், அதை எழுதியவரே படிப்பாரோ மாட்டாரோ என்ற தயக்கம் எழுத விடாது. சில சமயங்களில் போன் வழியாக அனுப்பும் பின்னூட்டங்கள் போய் சேரவே சேராது :((
எதற்கு இவ்வளவு வியாக்கியானம்? கீதா அக்காவின் யார் யாரை மன்னிப்பது என்னும் பதிவிற்கு பின்னூட்டம் எழுத நினைத்தேன், ஆனால் நாட்கள் மிக அதிகமாகி விட்டதால் தனி பதிவாகவே எழுதி விடலாம் என்று தோன்றியது. நீங்களும் என் பதிவை படிக்கும் முன் கீதா அக்காவின் மேற்படி பதிவை ஒரு முறை படித்து விட்டால், தொடருவது சுலபமாக இருக்கும்.
கீதா அக்கா தன்னுடைய பதிவில் ராமன் ராவண வாதத்திற்குப் பிறகு சீதையை தீக்குளிக்கச் சொன்னதை தவறு கிடையாது என்று நியாயப்படுத்தி இருக்கிறார். மேலும், தனக்கு கம்ப ராமாயணத்தில் அத்தனை பரிச்சயம் கிடையாது என்றும், வான்மீகி ராமாயணம் மற்றும் துளசி தாஸரின் ராமா சரித மாநஸ் படித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். இன்னும் துளசி தாசரும், கம்பரும் ராமனை தெய்வமாகவே சித்தரித்திருக்க, வான்மீகி மட்டுமே ராமனை ஒரு மனிதனாக கண்டுள்ளார் என்றும் கூறியிருக்கிறார்.
இதிலெல்லாம் எனக்கும் உடன்பாடுதான். என்னுடைய ஒரே சந்தேகம் சீதை அக்னி பிரவேசம் செய்தாள் என்றால் நிஜமாகவே நெருப்பில் புகுந்து எந்த வித சேதாரமும் இல்லாமல் வெளிப்பட்டாளா? என்பதுதான். ராமனையும், சீதையையும் அவதாரங்களாக கருதினால் இதை மறு பேச்சில்லாமல் ஒப்புக் கொள்ளலாம்,அப்படி இல்லாமல் சாதாரண மனிதர்கள் என்னும் பொழுது இது சாத்தியமா? என்று சந்தேகம் வருகிறது.
எனக்குத் தெரிந்த ஒரு பேராசிரியர்,"புராணங்களை படிக்கும் பொழுது சில விஷயங்களை ஓவர் லுக் செய்ய வேண்டும், சில விஷயங்களை நுட்பமாக ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும், சிலவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பார். லக்ஷ்மணன் பதினான்கு வருட வனவாசத்தில் தூங்கவே இல்லை என்பதை ஓவர் லுக் செய்ய வேண்டும், அவன் அப்படி கண்ணும் கருத்துமாக ராமனை கவனித்துக் கொண்டான் என்பதுதான் அதற்குப் பொருள் என்பார். இந்த அக்னி பிரவேச விஷயமும் அப்படிப்பட்ட ஒன்று என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
ஒவ்வொரு கால கட்டத்திலும் சில சொற்கள், அல்லது pharseகள் புழக்கத்தில் இருக்கின்றன. இப்போது, "அவனை செஞ்சுடணும்", "வெச்சு செய்யணும்" என்றெல்லாம் கூறினால், அது நல்லவிதமானது அல்ல. அதைப் போல, ''கேக் வாக்" என்றால் மிகவும் சுலபமானது என்றுதானே பொருள் கொள்வோம். நிஜமாகவே கேக்கின் மீது நடப்பது கிடையாதே. அதைப் போல அந்த கால கட்டத்தில் எதிர் கொள்ள மிகவும் கடினமாக இருப்பதை அக்னி பிரவேசம் என்று குறிப்பிட்டிருக்கலாம். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய அரசியல் வாழ்க்கையை பற்றி கூறும் பொழுது, "நெருப்பு ஆற்றில் நீந்தி வந்தேன்" என்றதை எப்படி புரிந்து கொண்டோம்?
இப்படி abstract ஆக பல விஷயங்கள் நம் புராணங்களிலும், இதிகாசங்களிலும் உண்டு. ஒரு முறை திரு.ஜெய ராமா சர்மா அவர்கள் ராமாயண பிரவசனம் ஒன்றில் அகலிகையின் சாபத்தை பற்றி கூறும் பொழுது, "அகலிகையை கல்லாக போகும்படி கௌதமர் சபித்தார் என்றால், நாம் எல்லோரும் நினைக்கும்படி அவள் உணர்ச்சிகள் அற்ற வெறும் பாறையாக சமைந்து விடவில்லை. அவளுக்கு எல்லா உணர்வுகளும் இருக்கும் ஆனால், அனுபவிக்க முடியாது. பசிக்கும், சாப்பிட முடியாது, தாகம் எடுக்கும், தண்ணீர் அருந்த முடியாது, நகர வேண்டும் போலிருக்கும் ஆனால் இயலாது(அப்பா எத்தனை கொடுமை?) என்றார். காரணம், தன்னோடு இருப்பது தன் கணவர் அல்ல என்று அகலிகைக்கு தெரிந்து விடுகிறது, ஆனாலும், சரீர சுகத்தை விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல் அவள் இருந்ததால் சரீர சுகம் எதையும் அனுபவிக்க முடியாமல் கல் போல கிடக்க வேண்டும் என்று சபித்தாராம் கௌதமர்.
மஹா பாரதத்தில் குந்தியும், மாதுரியும் surrogate motherகளாக இருந்து பாண்டவர்களை ஈன்றிருக்கிறார்கள் என்பது விஞ்ஞானம் வளர்ந்து இருக்கும் இந்த கால கட்டத்தில் நமக்கு புரிகிறது. துரோணரின் பிறப்பு பரிசோதனை குழாய் குழந்தையின் பிறப்பை ஒத்து இருக்கிறது. அதே சமயத்தில் திரௌபதி ஐவரை மணந்து கொண்டதை அப்படியேதான் ஏற்றுக் கொள்கிறோம்.
மஹாபாரத யுத்தத்தின் பொழுது துரோணரை கொல்வதற்காக அவரிடம் தர்மபுத்திரர்,"அஸ்வத்தாமா அதஹா:குஞ்சரஹ:(இறந்தது அஸ்வத்தாமா என்னும் யானை) என்று கூறியவுடன் அதுவரை தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த அவருடைய தேர் தரையில் இறங்கியது. என்கிறார் வியாசர். இதன் உட் பொருள் என்ன? அவருடைய தேர் அத்தனை நாட்கள் பரந்து கொண்டா இருந்தது? இல்லை, அதுவரை நடை முறை உலகில் இல்லாமல் ஒரு லட்சிய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த தர்மபுத்திரர் நடை முறை உலகிற்கு இறங்கி வருகிறார் என்பதுதானே. இப்போதும் நாம் லட்சியவாதிகளை பார்த்து "பூமியில் கால் ஊன்றி நில்" என்றுதானே சொல்கிறோம்? இந்துமதி, 'தரையில் இறங்கும் விமானங்கள்' என்று ஒரு அருமையான நாவல் எழுதியிருக்கிறார்.
ராமனை விட்டு விட்டு கிருஷ்ணனை நோக்கி வருவோம். பெரும்பாலோனோர் கிருஷ்ணனை பற்றி கூறும் ஒரு குற்றச்சாட்டு அவன் ஒரு ஸ்த்ரீ லோலன் என்பதாகும். கோபிகைகளோடு ராஸக்ரீடை புரிந்ததவன், அவர்கள் குளிக்கும் பொழுது அவர்கள் ஆடைகளை கவர்ந்து சென்றவன் என்றெல்லாம் கிருஷ்ணனை பழி கூறுகிறார்கள். உண்மையில் கிருஷ்ணன் ஒரு வாலிபனாக இதைச் செய்யவில்லை. சிறு குழந்தையாக இருந்த பொழுதுதான் இந்த லீலைகளை செய்திருக்கிறான். சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியும் எல்லா குழந்தைகளும் செய்வதுதான் இது போன்ற விஷமங்கள் என்பது. மகா பெரியவரே இதைப் பற்றி, " இப்போதெல்லாம் கிருஷ்ணனை ஒரு வாலிபனாக சித்தரித்து,அவன் கோபியரோடு ராசக்ரீடை செய்வது போல காலண்டர் போடு- கிறார்கள், அது தவறு" என்று கூறியிருக்கிறார்.
மேலும் ஸ்ரீ கிருஷ்ணன் பிரமச்சாரி என்பதற்கு பாகவதத்தில் உள்ள சாட்சி பரீக்ஷித்தின் பிறப்பு. மகாபாரத யுத்த சமயத்தில் உத்தரையின் கர்ப்பத்தில் இருந்த சிசு ப்ரம்மாஸ்திரத்தால் தாக்கப்பட, பிறக்கும் பொழுதே இறந்துதான் பிறக்கிறது. அந்த குழந்தைதான் பாண்டவர்களின் ஒரே வாரிசு.அதுவும் இப்படி ஆகி விட்டதே என்று எல்லோரும் துக்கத்தில் இருக்க, அங்கு வரும் வியாசர் நைஷ்டிக பிரமச்சாரி ஒருவர் இந்த குழந்தையை தொட்டால் அது உயிர் பெரும் என்கிறார். நாரதர் உட்பட யாருக்கும் அந்த பிண்டத்தை தொடும் தைரியம் வரவில்லை. அப்போது குழந்தையை பார்க்க வரும் கிருஷ்ணர் உயிரில்லாத அந்த பிண்டத்தை தீண்ட அது உயிர் பெற்று விடுகிறது. அப்போதுதான் குந்தி, கிருஷ்ணரிடம்,"எங்களுக்கு எப்போதும் துன்பத்தையே தா, அப்போதுதான் நாங்கள் உன்னை மறக்காமல் இருப்போம் என்று வேண்டுகிறாள். நிறைய பெண்களை மணந்து கொண்ட கிருஷ்ணன் எப்படி பிரும்மச்சாரியாக இருக்க முடியும் என்ற கேள்விக்கு,"அந்த பெண்களை அடைய வேண்டும் என்று கிருஷ்ணர் விரும்பி அவர்களை மணக்கவில்லை. அந்த பெண்கள் கிருஷ்ணனை அடைய வேண்டும் என்று விரும்பி அவனை அடைந்தார்கள். எனவே மனதால் அவன் ப்ரம்மச்சாரிதான். என்று கூறப் படுகிறது. ஒரு விஷயத்தை செய்வதை விட எப்படி செய்கிறோம் என்பதுதான் முக்கியம் என்பதை வலியுறுத்த இந்த நிகழ்ச்சி கூறப் பட்டிருக்கலாம்.
இப்படி பல விஷயங்கள்.. சொல்லிக்கொண்டே போகலாம். சாதாரணமாக விநாயகரில் ஆரம்பிப்பதுதான் நம் மரபு. நாம் விநாயகரோடு முடிக்கிறேன். ஜி.எம்.பி. அவர்கள் விநாயகர் அகவலுக்கு பொருள் எழுதியிருந்தார். அதில் வரும் "மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்தே" என்பதை பூடகமாக விளக்குவதுதான் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைத்தார்கள் என்னும் கதை. பாற்கடலை கடைந்த பொழுது காமதேனு, கற்பக விருட்சம், அப்சரஸ்கள், லட்சுமி, சரஸ்வதி, தன்வந்திரி போன்ற பல விஷயங்கள் வெளி வந்தன. ஆல கால விஷமும் வந்தது, இறுதியில் அமுதமும் வந்தது. இவை எல்லாமே குறியீடுகள்தான். இதன் பொருளை பின்னர் கூறுகிறேன். இந்த பதிவு மிகவும் நீண்டு விட்டது.
படங்கள் நன்றி Google





























