கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, May 28, 2019

ஓடும் பஸ்ஸில் ஒரு தண்ணீர் பந்தல்

ஓடும் பஸ்ஸில் ஒரு தண்ணீர் பந்தல்


ஊரிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்த பெண்,மாப்பிள்ளை,பேத்தி ஊருக்கு திரும்பி விட்டார்கள். அவர்களோடு நாங்களும் சென்னை, திருப்பதி, பெங்களூர், சென்னை என்று சுற்றினோம். 

பெங்களூர்-சென்னை, சென்னை-பெங்களூர் சதாப்தியில் எக்சிகியூடிவ் கிளாசில் பயணித்தோம். ஈ.சியில் இருக்கை சௌகரியமாகவும், உயரமானவர்கள் கூட காலை நீட்டி வசதியாக அமரும்படி தாராளமாகவும் இருக்கிறது.  காலை சதாப்தியில் வண்டி கிளம்பியதும், வெல்கம் ட்ரிங்க்(காபி அல்லது டீ, மஃபின், வறுத்த பாதாம்) வந்தது. அதை முடித்த சிறிது நேரத்தில் கார்ன் பிளக்ஸ், ஐந்து நிமிடம் கூட ஆகவில்லை பிரேக்ஃபாஸ்ட் வந்து விட்டது. இதற்கு நேர்மாறக மாலை சதாப்தியில் வண்டி கிளம்பி சிறிது நேரத்திற்குப் பிறகுதான் காபி, மஃபின், விவகாரங்கள் வந்தன. பிறகு திரும்பியே பார்க்கவில்லை. எட்டு மணியை நெருங்கும் பொழுது ரொம்ப சுமாரான சூப் வந்தது. அதன் பிறகு சற்று நேரம் கழிந்து, சப்பாத்தியும், ரசம் போல ஒரு குருமாவும் தயிருடன் வந்தன. சாதாரணமாக சாப்பாடு முடிந்தவுடனேயே ஐஸ் க்ரீம் வந்து விடும். ஆனால் எங்களுக்கு ஐஸ் க்ரீம் வருவதற்குள் கே.ஆர்.புரம் வந்து விட்டது.  கண்டோன்மென்டில் இறங்க வேண்டிய சிலர் அதற்குள் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு படிக்கு அருகில் சென்று விட்டார்கள். 

பயணத்தின்பொழுது படிப்பதற்காக ஆனந்த விகடன், கல்கி, குங்குமம் மூன்றும் வாங்கினேன். பல வருடங்களுக்குப் பிறகு வாங்கியதாலோ என்னவோ குங்குமம் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தது. அதில் போஸ்ட்மார்ட்டம் என்று ஒரு பகுதி. ஆதித்த கரிகாலன் கொலையில் அருண்மொழித் தேவரான ராஜ ராஜ சோழனுக்கும், அவர் சகோதரி குந்தவைக்கும் சம்பந்தம் உண்டோ? என்று கேள்வி எழுப்பி, அதற்கான காரணங்களை அலசியிருந்தது.


உத்தம சோழர் பதவி ஏற்ற பொழுது அவருக்கு ஒரு மகன் இருந்தான். தந்தைக்குப் பின் மகன்தான் பட்டம் ஏற்க வேண்டும், ஆனால், ஏன் அருண்மொழித் தேவர் அரசரானார்?

தன் ஆட்சியில் நடை பெற்ற எல்லா செயல்களையும் கல் வெட்டில் பொறிக்கும் வழக்கமுடைய ராஜராஜன் தன் அண்ணன் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டதற்கான காரணத்தை எந்த கல் வெட்டிலும் பொறிக்கவில்லை. எப்படி கொலைகாரர்கள் கண்டு பிடிக்கப்பட்டார்கள் என்ற குறிப்பாக கூட சொல்லப்படவில்லை.

ராஜராஜ சோழன் காலத்தில் கோவில் நிர்வாகங்களை கவனித்து வந்த உத்தமசோழரின் மகன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கொல்லப்பட்டாராம். தன் மகன் ராஜேந்திரன் பதவி ஏற்க எந்த தடையும் இருக்கக்கூடாது என்று ராஜராஜசோழன் செய்த செயல் இது என்கிறாரகள். 

உத்தம சோழர் பட்டத்திற்கு வந்து மூன்றாண்டுகளில் ஆதித்த கரிகாலன் கொலை தொடர்பாக வந்தியத்தேவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். ஆனால் ராஜராஜன் பட்டத்திற்கு வந்ததும் முதல் வேலையாக பன்னிரெண்டாண்டுகள் சிறையில் இருந்த வந்தியத்தேவனை விடுவித்தாராம். அவர் ஏன் விடுவிக்கப்பட்டார்? அவருக்கும் ஆதித்த கரிகாலன் கொலைக்கும் சம்பந்தமில்லை என்பதற்கு ஆதாரங்கள் ஏதேனும் கிடைத்ததா? போன்ற விஷயங்கள் அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றனவாம்.

அதே போல ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்ததும் காந்தளூர் கடிகையை அழித்தது உள்நோக்கம் கொண்டது என்கிறார். காந்தளூர் கடிகையை நடத்தியவர் ஆதித்த கரிகாலனின் கொலையில் முக்கிய குற்றவாளியான ரவிதாசனின் குருவாம். அவருக்கு நிறைய விவரங்கள் தெரிந்திருக்கலாம் என்பதாலேயே அந்த கடிகை அழிக்கப்பட்டது என்கிறார். 

இந்த ரவிதாசன் பிற்கால சோழ பரம்பரையை நிறுவிய விஜயாலய சோழரின் மகன் முதலாம் ஆதித்ய கரிகாலனின் இரு புதல்வர்களில் ஒருவரான கன்னரத்தேவரின் வம்சத்தை சேர்ந்தவனாம். கன்னரத் தேவருக்கு பட்டம் மறுக்கப்பட்டு அவருக்கு இளையவரான பராந்தகர் அரியணை ஏறினாராம். கன்னரத் தேவருக்கு ஏன் அரியணை மறுக்கப்பட்டது? என்பதற்கான காரணம் தெரியவில்லை.  அதே போல குந்தவை, மூத்தவன் ஆதித்த கரிகாலன் இருக்கும் பொழுது, அருண்மொழித் தேவராகிய ராஜராஜன்தான் அரியணை ஏற வேண்டும் என்று விரும்ப காரணமும் தெளிவாகத் தெரியவில்லை என்கிறார். 



அரசியலும், அவிழ்க்கப்படாத புதிர்களும் இரட்டைப் பிறவிகள் போலிருக்கிறது.  

ஒரு நல்ல விஷயத்தோடு பதிவை முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.


சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தை சேர்ந்த 45 வயதாகும் திருஞானம் என்பவர் மதுரை பணிமணியிலிருந்து திருமயம், புதுக்கோட்டை வழியாக தஞ்சாவூருக்கு இயக்கப்படும் அரச பேருந்தில் நடத்துனராக பணி புரிகிறார். 12 ஆண்டுகளாக நடத்துனராக இருக்கும் இவர் மதுரை, தஞ்சை வழித்தடத்தில் மூன்றாண்டுகளாக பணியாற்றுகின்றாராம். இவரின் வேலை நேரம் முதல்நாள் மதியம் இரண்டு மணி முதல் மறு நாள் மதியம் இரண்டு மணி வரை. தினசரி இருபதுக்கும் மேற்பட்ட பாட்டில்களில் சுத்தமான குடி நீரை நிரப்பிக் கொள்ளும் இவர், பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து முடித்ததும் தண்ணீர் விநியோகம் செய்வாராம். தினசரி 60 லிட்டர் தண்ணீர் வரை வழங்குகிறாராம். கோடை நாளில், கடும் கோடை நேரத்தில் இவர் செய்யும் இந்த சேவை நிச்சயமாக பாராட்டுக்குரியதுதான். 

Saturday, May 11, 2019

எங்கெங்கு காணினும் ஆப்படா..!!

எங்கெங்கு காணினும் ஆப்படா..!

எங்கள் வீட்டில் முன்பு நந்தினி பால் ஒருவர் வினியோகித்து வந்தார். சென்ற வாரத்தில் அவருடன் ஒரு இளைஞர் வந்து, இனிமேல் தான்தான் பால் வினியோகம் செய்யப் போவதாகவும், அதையும் டெய்லி நிஞ்சா என்னும் ஆப் மூலம் செய்வதாகவும் கூறி, அந்த ஆப்பை(செயலி) என் கணவரின் செல் ஃபோனில் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டினார். அதன் வழியே எப்படி ஆர்டர் கொடுப்பது என்றும் சொல்லிக் கொடுத்தார்.

இனிமேல் பால் டோக்கன் போட
வேண்டிய வேலை இல்லை. நம் தேவைக்கேற்ப ஆர்டரின் அளவை கூட்டி, குறைத்துக் கொள்ளலாம். வேண்டாத நாட்களுக்கு பாஸ் போட்டு விடலாம். ஆனால் முதல் நாளே செய்து விட வேண்டும்.

பால் மட்டும் அல்ல, பழங்கள், காய்கறிகளையும் இதன் வழியே ஆர்டர் பண்ணலாமாம். என்ன..? "உனக்கு பிடிக்குமேனு மிதி பாவக்கா எடுத்து வெச்சிருக்கேன், வாழத்தண்டு இளசா இருக்கு, எடுத்துக்கோ.." என்றெல்லாம் நம்மை பிரத்யேகமாக கவனிக்கும் பெண்ணின் கரிசனம் கிடைக்காது.
இன்னும் சில காலத்தில் நம் விருப்பங்களை நாம் ரிஜிஸ்டர் பண்ணி வைத்து விட்டால், அந்த செயலி தெரிவிக்குமோ என்னமோ?
*********************************************************************************

ஊரிலிருந்து விடுமுறைக்கு வந்திருக்கும் மகள், மாப்பிள்ளை, பேத்தியோடு திருப்பதி சென்றிருந்தோம். பேத்திக்கு அங்கு மொட்டை போடும் பிரார்த்தனை.  மே மாதம், கும்பல் அதிகம் இருக்குமே எனறு ஒரு கவலை. போதும் போதாததற்கு மருந்து சாப்பிடும் பொழுது குரங்கை நினைக்காதே என்று எச்சரிக்கப்பட்டவன் கதையாக, திருப்பதி சென்றும் பெருமாளை தரிசிக்காமல் வந்த ஶ்ரீராமின் அனுபவம் வேறு அவ்வப்போது நினைவுக்கு வந்து மிரட்டியது. ஆனால் நினைத்ததற்கு மாறாக, அத்தனை கும்பல் இல்லை. நன்றாக தரிசனம் செய்ய முடிந்தது.  அவரிடம் எப்போதும் எதிர்பாராததைத்தான் எதிர்பார்க்க வேண்டும். பெருமாளை தரிசித்து விட்டு வரும் பொழுது புளியோதரை பிரசாதம் கிடைக்கும் என்று நினைத்தேன். லட்டுதான் கிடைத்தது.

திருமலையில் நிறைய மாறுதல்கள். மாறிக்கொண்டேதான் இருக்கிறது. யாத்ரீகர்களுக்கு நிறைய வசதிகள். 300ம் ரூபாய் டிக்கெட் வாங்கியவர்கள் உள்ளே நுழையும் ஹாலில் இலவசமாக காபி,டீ,பால் முதலியவைகள் வழங்குகிறார்கள். எங்களுக்குத்தான் பருக நேரம் இல்லை. எல்லாம் சரி தரிசனம் முடித்து வெளியில் வந்து கார் பார்க்கிங்கிற்கு செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. நல்ல வேளையாக சென்ற மாதம் திருப்பதி சென்று வந்த என் அக்கா, "காலுக்கு போட்டுக்கொள்ள சாக்ஸ் எடுத்துச் செல்லுங்கள், இல்லாவிட்டால் வெயிலில் நடப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கும்" என்று கூறியிருந்ததை கடைபிடித்தோம், தப்பித்தோம். பாட்டரி கார்  வசதிகளை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கலாம்.

மலை மீது ஏறும் பொழுதும், இறங்கும் பொழுதும் ஏ.சி. போட முடியாததால் வீசிய அனல் காற்றால் தலைவலி. பீமாஸ் உணவகத்தில் கா...ர...மா..ன.. உணவு.  திருவள்ளூரில் மழை, சென்னையில் எப்போதும் போல் புழுக்கம். அதிலிருந்து விடுதலை தருவது மேற்கத்திய உச்சரிப்பில் பேத்தி பாடும் சாயி பஜன், "ரௌடி பேபி..", மற்றும் "மரணம் மாஸு மரணம்.." பாடல்களை கேட்பது. அவளை தமிழில் பேசு, தமிழில் பேசு என்று கூறி அது நடக்காமல் நாங்கள் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்து விட்டோம். என்.ஆர்.ஐ. குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கவே தனி ஆப் இருக்கிறதாமே..??!!


கத்தரியில்  வெய்யில்
கொளுத்துமாம்
கதைக்கிறார்கள் எல்லோரும்
தென்றலல்லவோ என்னைத்
தழுவிக் கொண்டிருக்கிறது!


Thursday, May 9, 2019

வாசிப்பு அனுபவம் (வேத வித்து)

வாசிப்புஅனுபவம் 
(வேத வித்து)

எதற்காகவோ புத்தக அலமாரியை குடைந்த பொழுது சாவி அவர்களின் படைப்பான 'வேத வித்து' கண்ணில் பட்டது. முன்னர் படித்த ஞாபகம் இல்லை. எனவே படிக்கலாம் என்று எடுத்தேன்.



எப்போது எழுதிய கதை என்று தெரியவில்லை. 1990ல் முதல் பதிப்பு வெளியாகியிருக்கிறது. கவிஞர் வைரமுத்து முன்னுரை எழுதியிருக்கிறார்.

விதவா விவாகம், வேதம் படிக்கும் பிராமண பையனுக்கும், கழை கூத்தாடி பெண்ணுக்கும் இடையே துளிர்க்கும் நட்பு இரண்டையும் டீல் செய்திருக்கும் கதை.

ஆரவாரமில்லாத சரளமான நடை.
'நாதஸ்வரக்காரர் நாயனத்தை வீசி வாசிக்க முடியாதபடி குறுகலான சந்து', "பிரம்மச்சாரிகள் வெற்றிலை போட்டுக்கலாமா மாமா?" " ஏன் கூடாது?பிரம்மச்சாரிகள் கல்யாணமே பண்ணிக் கொள்கிறார்கள்"
என்று ஆங்காங்கே வெளிப்படும் சாவிக்கே உரிய நகைச்சுவை. சுவையான வாசிப்பு அனுபவம்.

அவருடைய விசிறி வாழை படிக்க வேண்டும்.


Tuesday, April 30, 2019

மசாலா சாட் - 8

மசாலா சாட் - 8 

Image result for Ki.Va.Ja.



தமிழறிஞர் கி.வா.ஜகன்னாதன் அவர்கள், சிலேடையாக பேசுவதில் வல்லவர் என்பது தெரிந்த விஷயம்தான். நான் அதிகம் கேள்விப் படாத அவருடைய ஸ்லேடைகள் சில:

 மாதுளம் பழமான விளாம்பழம்:


ஒரு நண்பர் வீட்டுக்கு கி.வா.ஜ. போயிருந்த பொழுது நண்பரின் மனைவி விளாம்பழத்தில் வெல்லம் போட்டுப் பிசைந்து, அன்போடு கொண்டு வந்து உபசரித்தார். அதை வாங்கி உண்ட கி.வா.ஜ. “மாதுளங்கனி அருமை!” என்று பாராட்டினார்.
“மாதுளங்கனியா? நான் தந்தது விளாம்பழம் அல்லவோ?” என்று அந்த அம்மையார் குழப்பத்துடன் கேட்க,
“மாது, உளம் கனிந்து கொடுத்த கனி என்று சொன்னேன்” என்றாராம் கி.வா.ஜ.

கடை சிப்பந்தியும், கடைசிப் பந்தியும்:

ஒரு கடை முதலாளியின் வீட்டில் விருந்து. அதில் கி.வா.ஜ.வும் கலந்து கொண்டார். அனைவரும் உணவு உண்ண அமர்ந்திருக்க,கடையில் வேலை செய்யும் ஒரு பையன் மட்டும் இல்லாதது கண்டு, கி.வா.ஜ. அது பற்றி விசாரித்தார்.

“அவன் கடையைப் பூட்டிவிட்டு வந்து அடுத்த பந்தியில் கலந்து கொள்வான்” என்றார் முதலாளி. உடனே, கி.வா.ஜ.”ஓஹோ! கடை சிப்பந்திக்கு கடைசிப் பந்தியா?” என்றாராம்.

பிரகாசிக்கும் கம்மல்: 

இப்படி சிலேடையில் கலக்கும் அவரையே ஒரு பெண்மணி அசத்தினாராம். ஒரு விழாவில் கலந்து கொண்ட அவரை உரையாற்ற அழைத்த பொழுது, "இப்பொழுது வேண்டாம் குரல் கம்மியியிருக்கிறது" என்று அவர் கூறியதும், அந்தப் பெண், “பரவாயில்லை, கம்மல் ப்ரகாசிக்கும்” என்று கூறி அசத்தினாராம்.

வாட்சாப்பில் வந்ததில் ரசித்தது:

மெட்ராஸ்காரனை திருக்குறளுக்கு உரை எழுதச் சொன்னால் எப்படி இருக்கும்? என்று ஒரு கற்பனை: 

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
பொருள்: கஸ்மாலம், ஒயுங்கா படி, பட்சது பட்சாமாறி நட்ந்துக்கடா, பேமானி!

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
பொருள்: டேய், வூட்டுக்கு வந்த விருந்தாளி கைல நல்லா மூஞ்சி குட்து பேசுடா, இல்லைன்னா பய அனிச்சம் பூவ மோந்தா மாரி வாடிவுடுவாண்டா சவாரி, அட, எங் கேப்மாரி.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்ப காய் கவர்ந்தற்று
பொருள்: சோமாறி, கொய்யாப் பயத்த கைல வச்சிக்கினு எவனாவது கொய்யாக்காவ துண்ணுவானாடா? நல்ல வார்த்தையா நாலு பேசுவியா, அத வுட்டுப்புட்டு கெட்டகெட்ட வார்ததையா பேசிக்கினு கீற? காது கொயிய்ன்னுதுடா, கொய்யால!

புறம்கூறி பொய்த்த்யிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும்.
பொருள்: பன்னாட, ஒர்த்தனப் பத்திப் பின்னால போட்டுக் குட்து பொயகறதெல்லாம் ஒரு பொயப்பாடா? அதுங்காட்டி நாண்டுகிட்டு சாவலாம்டா, சனியம் புட்ச்சவனே!

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
பொருள்: எவன் வேணா சும்மா உதார் உடலாம் மச்சி,..த்தா சொன்னா மாரி செஞ்சி பாரு அப்ப தெரியும் மேட்டரு, நெஞ்சில கீற ம்ஞ்சா சோறு எகிறிப்பூடும் பாத்துக்க.

எப்படியோ பொருளை சரியாக உணர்ந்து கொண்டால் சரி.


Friday, April 26, 2019

விளக்கெண்ணெய் வைபவம்


விளக்கெண்ணெய் வைபவம்


எங்கள் காலத்தில், கோடை விடுமுறை என்றால் ஒரு விஷயத்திற்கு யாரும் தப்ப முடியாது. அது எண்ணெய் குடித்தல். விடுமுறைக்கு கிராமத்திற்கு சென்றாலும் சரி, இருக்கும் இடத்திலேயே இருந்தாலும் சரி, ஒரு நாள் விளக்கெண்ணெய் கொடுக்காமல் விட மாட்டார்கள்.

ஒரு நல்ல நாள் பார்த்து(நிஜமாகத்தான்) அன்று எண்ணெய் கொடுக்கலாம் என்று முடிவு செய்வார்கள். மாமா திருக்காட்டுப்பள்ளியிலிருந்து அதற்கான சாமான்கள் வாங்கி வரச்செல்வார். நாங்கள் சாமான்கள் விற்கும் கடை திறந்திருக்க கூடாது, என்று சாமியிடம் வேண்டிக் கொள்வோம். ஏனோ சாமி ஒரு முறை கூட எங்கள் வேண்டுதலுக்கு செவி சாய்த்ததில்லை.

எண்ணெய் கொடுப்பதற்கு முதல் நாள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். மறு நாள் எங்களை எழுப்பி, பல் தேய்த்து விட்டு வரச் சொல்வார்கள். நோ காபி. எண்ணையில் சேர்க்க வேண்டிய கஷாயம் அதற்குள் ரெடியாகியிருக்கும். அதில் சதகுப்பை என்று ஒன்று சேர்ப்பார்கள் என்று தெரியும். அதன் நாற்றம் சகிக்காது. அதைத் தவிர வேறு சில பொருள்களும் சேர்ப்பார்கள். கஷாயம், எண்ணெய் இவைகளை ஸ்வாமிக்கு முன் வைத்து விட்டு, பின் முற்றத்திற்கு கொண்டு வருவாள் அம்மா. உடன் மாமா, மாமிகளும் நார்த்தங்காய் சகிதம் வருவார்கள். எங்களோடு, மாமா குழந்தைகள், அத்தை குழந்தைகள் எல்லோரும் உண்டு.

முதல் போணியை மாமா பையன் ராமகிருஷ்ணன் செய்வான், அடுத்தது நான், பிறகு எங்கள் மூன்றாவது அக்கா. பிறகு மாமாக்கள் மகள்கள். நாங்களெல்லாம் சமர்த்து குழந்தைகள். அதிகம் படுத்தாமல் குடித்து விடுவோம். கொஞ்சம் உவ்வே என்றால் உடனே, "ஊம்ம், நார்த்தங்காயை சாப்பிடு" என்பார்கள்.  எண்ணெய்  குடித்து விட்டு, படுத்துக் கொள்ளக் கூடாது. குதிக்கச் சொல்வார்கள். நாலைந்து முறை வடவண்ட தாழ்வார(வீட்டின் வடக்கு பக்கம் இருக்கும் தாழ்வாரம்)  திண்ணையில் ஏறி கீழே குதிப்போம்,மாமாவின் பெரிய பையன் சம்பத், எங்கள் பெரிய அக்கா போன்றவர்கள் கடகடவென்று குடித்து விட்டு,வாந்தி எடுப்பார்கள். அவர்களுக்கு மீண்டும் வழங்கப்படும்.  

அடுத்த லாட் படுத்தல் லாட். வாந்தி எடுப்பது, முற்றத்தை சுற்றி ஓடுவது, அழுவது, போன்ற அலப்பறைகள் அரங்கேறும். எங்கள் அத்தை குழந்தைகளுக்கு எங்கள் அம்மாவிடம் பயம் உண்டு என்றாலும், ரகளை பண்ணுவார்கள். அதிகம் படுத்துவது அத்தை பையன் கிருஷ்ணன், மற்றும் எங்கள் அண்ணா. பயங்கரமாக அலறி, குடிக்க முடியாது என்று ஓடுவார்கள், மாமாவும், அம்மாவும் விசிறி கட்டை சகிதம் துரத்துவார்கள்.

இரண்டாவது அக்கா, கடைசி அக்கா போன்றவர்கள் ஓட மாட்டார்கள், அழுவார்கள், ஒவ்வொரு மடக்கு முழுங்கிய பிறகும் வாந்தியெடுக்க முயலுவார்கள், யாராவது ஒருவர் அவர்களின் முதுகை தடவி, சரி செய்வார்கள்.

ஒரு வழியாக குடித்து முடித்ததும் சிறுவர்கள் எதிரே இருக்கும் தென்னந் தோப்பிற்கு விரட்டப் படுவார்கள்.  ஒன்பது மணிக்கு சூடாக காபி. பதினோரு மணிக்கு பருப்புத் துவையலோடு ஜீரக ரசம் சாதம். நோ மோர் சாதம்.  இதனாலேயே ஜீரக ரசம், பருப்புத் துவையல் என்றால் அப்போதெல்லாம் பிடிக்காது. எத்தனை முறை வயிற்றை காலி செய்தோம் என்று கணக்கு வேறு சொல்ல வேண்டும். மதியம் மூன்று மணிக்கு மேல் எட்டு முறை ஆகி விட்டது  என்றால் குளிக்கலாம்.

சும்மா சொல்லக்கூடாது, குளித்த பிறகு நிஜமாகவே உடல் லேசானது போல் ஒரு உணர்வு வரும்.

நாங்கள் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது ஒரு முறை எங்களுக்கு விளக்கெண்ணெய் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். "வீட்டிற்கு விலக்கான சமயத்தில் எண்ணெய் குடிக்க கூடாது" என்று நான் என் அத்தைப் பெண்ணிடம் கூற, அவள்,"அப்படியா? நான் வீட்டில் இல்லை", என்று ஒதுங்க,அத்தை அவளை,"இந்தா உனக்கு எப்போ நாள் என்று எனக்கு தெரியும், யார் கிட்ட பொய் சொல்ற?' என்று உள்ளே இழுத்தது ஒரு கிளை கதை.

 



Saturday, April 20, 2019

ஜனநாயக கடமை

ஜனநாயக கடமை


ஏப்ரல் 17ம் தேதி குடும்ப நிகழ்ச்சிக்காக சென்னை வரவேண்டியிருந்தது. அதில் கலந்து கொண்டு விட்டு, அப்படியே ஓட்டும் போட்டு விட்டு வரலாம் என்ற எண்ணத்தில் கிளம்பினோம்.

பெங்களூரிலிருந்து மதியம் பன்னிரெண்டு மணிக்கு பேருந்து. காலை பத்து மணியிலிருந்து ஓலா புக் பண்ண முயற்சித்து கொண்டேயிருந்தோம். மைக்ரோ, மினி, ப்ரைம், ஆட்டோ எதுவுமே இல்லை. எங்கள் நாத்தனார் பெண் மூலம் ஊபர் முயற்சித்தால் அதிலும் பலன் இல்லை. கடைசியில் அவளுக்கு தெரிந்த ஒரு டிராவல்ஸில் ஏற்பாடு செய்து கொடுத்தாள்.  வீட்டிலிருந்து 10:30க்கு கிளம்பினோம், 11:50க்கு மடிவாலாவை அடைந்தோம். அதற்குள் என் கணவர் ஏகத்திற்கு டென்ஷனாகி விட்டார்.

பஸ்ஸில் கொஞ்சம் நகைச்சுவை காட்சிகள் போட்டார்கள். பின்னர் சாமி 2 வில் கொஞ்சம் வயதான தோற்றத்தில் விக்ரம் தான் போலீஸ் இல்லை பொறுக்கி என்றார். திரிஷா ஏற்ற ரோலில் ஐஸ்வர்யா ராஜேஷ். என்னதான் டான்ஸெல்லாம் ஆடினாலும், கவர்ச்சி கோஷண்ட் கம்மி என்பதால் ரசிக்க முடியவில்லை.  சாமி(1)ல் இருந்த பாடல், நகைச்சுவை, விறுவிறுப்பான திரைக்கதை எதுவுமே இதில் இல்லை. அதனால்தான் படம் ஓடவில்லை. நம் ரசிகர்கள் தெளிவுதான்.

அக்கா மாமியாரை ஓட்டு போட அவர்கள் வீட்டுக்கு மிக அருகில் இருக்கும் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அழைத்துச் சென்றேன். மாமியால் நடக்க முடியாது என்பதால் காரில் சென்றோம்.  வாகனங்களை பள்ளி அருகே செல்ல அனுமதிக்கவில்லை என்றாலும் மாமியின் உடல் நிலையை கருதி பள்ளி வாசலில் இறங்கிக் கொள்ள அனுமதித்தனர். ஆனாலும் என்னை  உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என்று ஒரு காவலர் தடுத்தார் இன்னொருவர் அனுமதித்தார். எனவே உள்ளே சென்று மாமியை பூத்திற்குள் செல்லும் வரிசையில் சேர்த்து விட்டு அருகில் காத்திருந்தேன்.

பள்ளி வளாகம் சுத்தமாக இருந்தது. நோ பிளாஸ்டிக் ஏரியாவாம். எல்லா சுவர்களிலும் பொன் மொழிகள் எழுதப்பட்டிருந்தன. அதில் என்னைக் கவர்ந்த வாசகம் அப்துல் கலாமுடையது. பெண்கள் பள்ளியில் பெண்களுக்காக ஒரு வாசகம்



அந்த பள்ளியில் மொத்தம் எட்டு பூத்துகள் இருந்தன. எந்த ஏரியாவுக்கு எந்த பூத் என்று தெரியாமல் வந்தவர்கள் கொஞ்சம் குழம்பினர். ஒரு காவலர்," ஒரு சாக் பீஸ் கொண்டாப்பா, எழுதிடலாம். இல்லன்னா நமக்கு தான் சாயந்திரம் அஞ்சு மணி வரைக்கும் கஷ்டம்" என்று எப்படியோ ஒரு சாக்பீஸை வரவழைத்து, எந்தெந்த தெரு எந்த பூத்தில் என்று எழுதிப்  போட்டார்.

எந்த பத்திரிகையை சேர்ந்தவர் என்று தெரியவில்லை, காமிராவை தோளில் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒருவர் காவலரிடம் வந்து, ஓட்டு போட்டு விட்டு வருகிறவர்களை புகைப்படம் எடுக்க அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று புகார் கூறினார். "வெளியிலிருந்து எடுங்கள்" என்று அவர் கூறியதற்கு, "கையில் மை வைப்பதை எல்லாம் எப்படி சார் வெளியிலிருந்து எடுக்க முடியும்? பூத்திற்குள் வரக்கூடாது என்கிறார், அஜீத்தையெல்லாம் எடுக்கிறோம்.." என்றதும், அந்த காவலர், இந்த பூத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அனுமதி அளித்தார். "உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடப்போகிறது" என்றேன், " ஓட்டு போடுவதைத்தான் எடுக்கக்கூடாது, மை வைப்பதை எல்லாம் எடுக்கலாம் என்றார்.

"ரொம்ப நேரமா இங்கேயே நிக்குறீங்களேமா?" என்று என்னிடம் ஒரு காவலர் வினவினார். நான் துணைக்கு வந்திருக்கிறேன் என்றதும்,"இங்கு நிற்க கூடாதுமா, வெளியே போய்டுங்க" எனறார். சரி என்று வெளியே வந்து காத்திருந்தேன்.

அங்கு தன் தாயோடு துணைக்கு வந்திருந்த ஒரு பையனிடம், காவலுக்கு நின்ற ஆந்திர ராணுவ வீரர் ஹிந்தியில் பேச்சு கொடுத்து கொண்டிருந்தார்.
"ஐ.பி.எல்.லில் ஏன் சி.எஸ்.கே.யை பிடிக்கும்?"
"உங்கள் ஊரில் ஆங்கிலம் பேசுகிறீர்கள், ஹிந்தி பேசுகிறீர்கள், தமிழ் பேச
மாட்டீர்களா?" போன்ற கேள்விகள். தமிழ் தெரியாத அவரோடு அந்தப் பையன் எப்படி தமிழில் பேச முடியும்?



நடிகை தேவயானியும், அவர் கணவரும் ஓட்டு போட்டு விட்டு சென்றார்கள். ஓட்டு போட்டு விட்டு வந்த ஒரு பெரியவர் செல் ஃபோன் வைத்திருந்தார். "செல்ஃபோனை அனுமதிக்கிறார்களா?" என்று கேட்டேன், "யாரும் எதுவும் கேட்கவில்லை" என்றார். பெரும்பான்மையோர் செல்போன் வைத்துக் கொண்டிருந்தனர். அசோக் நகரில் ஓட்டு போட வந்தவர்களில் பெரும்பான்மையினர் முதியவர்களாக இருந்தனர். ராமாபுரத்தில் இதற்கு மாறாக பெரும்பான்மையினர் இளைஞர்களாக இருந்தார்கள்.

எங்கள் பெயர் ஓட்டர்ஸ் லிஸ்டில் இருக்கிறதா என்பதை அங்கிருந்த தேர்தல் அதிகாரி பொறுமையாக அறுபத்தேழு பக்கங்களிலும் தேடிக் கொண்டிருந்த பொழுது  வரிசையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை இன்னொரு பெண் நடுவில் புகுந்து விட்டதாக குற்றம் சாட்ட, அந்தப் பெண் மறுக்க, இருவருக்கும் குழாயடி போல சண்டை வந்தது. ஒரு பெண் காவலர் வந்து விலக்கி விட்டார். எங்கள் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இல்லாததால்   ஓட்டு போடாமல் தான் வந்தோம்.  காத்திருந்த நேரத்தில் பழைய நண்பர்கள் சிலரை சந்தித்தேன்.

 மற்றுமொரு இளம் பெண்ணும் எங்களைப் போலவே அவர் பெயர் ஓட்டர்ஸ் லிஸ்டில் இல்லை என்று தேர்தல் அதிகாரியை சந்தித்து முறையிட்டார். அவர் ஓட்டர்ஸ் ஐ.டிக்காக மூன்று மாதங்களுக்கு முன் விண்ணப்பித்ததாகவும், ஒரு வாரத்தில் வீட்டிற்கு வந்து விடும் என்று சொன்னார்கள், ஆனால் இதுவரை வரவில்லை என்றும் ஆதார் கார்டை வைத்துக் கொண்டு வாக்களிக்க முடியுமா? என்றும் வினவினார். அதற்கு அந்த அதிகாரி வேறு யாருடனோ டெலிபோனில் பேசிவிட்டு, ஓட்டர்ஸ் லிஸ்டில் பெயர் இல்லையென்றால் வாக்களிக்க முடியாது என்று கூறி விட திரும்பிச்சென்று விட்டார். எங்களுக்கும் அதே பதில்தான் கூறப்பட்டது.

இதேபோல் பெயர் விடுபட்டிருந்தாலும் நடிகர்கள் ரமேஷ் கண்ணாவும், ஶ்ரீகாந்தும் மற்ற ஆதாரங்களை காண்பித்து ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர் என்று தொலைக்காட்சி செய்தியில் காண்பித்தார்கள். நாமெல்லாம் சாமானியர்கள்தானே? எனவே ஜனநாயக கடமை ஆற்ற முடியவில்லை





Friday, April 12, 2019

மசாலா சாட் - 7

மசாலா சாட் - 7

இந்த முறை சென்னை விஜயம் கொஞ்சம் சோர்வூட்டக்கூடியதாக  இருந்தது. மைசூரிலிருந்து சென்னை செல்லும் சதாப்தி பெங்களூரிலிருந்து கிளம்பும் பொழுதே பத்து நிமிடம் தாமதம் என்றாலும் காட்பாடி வரை சரியான நேரத்தை கடைபிடித்த வண்டி, அதற்குப்பிறகு அரக்கோணம் வரை நத்தை வேகம், ஆமை வேகம். இரண்டு இடங்களில் வேறு எதற்காகவோ நின்று, 23:30க்கு சென்னை சென்ட்ரலை மன்னிக்கவும், புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையத்தை அடைத்தது. 21:30க்கு அடைந்திருக்க வேண்டும். இரண்டு மணி நேரம் தாமதம். அதன் பிறகு ஓலா கிடைப்பதில் தாமதம், மைலாப்பூரில் இருக்கும் சகோதரி வீட்டை அடையும் பொழுது, 0:30 மணி.

மறுநாள் காலை 4:30க்கு(டெக்நிக்கலாக அன்றே) ஒரு பூஜைக்கு கிளம்ப வேண்டும், அதற்கு விடியர்காலை 3:30க்கு எழுந்திருந்தால்தான் சரியாக இருக்கும். எனவே இரண்டு மணி நேரம்தான் தூக்கம்.

மறுநாள் மீண்டும் சதாப்தியில் பெங்களூர் பயணம், மீண்டும் இரண்டு மணி நேரம் தாமதமாக பெங்களூர் வந்து சேர்ந்தது. வீட்டிற்கு வந்து படுக்கையில் விழுந்த பொழுது மணி 1:30.  காலையில் ஏழே காலுக்கு முன்னால் கண் விழிக்க முடியவில்லை. சென்னையில் கற்பகாம்பாள் தரிசனமும், நீண்ட நாள் நண்பரை சந்தித்ததும் மகிழ்ச்சி.

கற்பகாம்பாள் கோவிலும், கொடி மரமும் 
அக்காவின் வீட்டில் என்னைக்  கவர்ந்த ஒரு விஷயம், வீட்டை அழகாக பெருக்கி, துடைத்த எலெக்ட்ரானிக் மாப். அமெரிக்காவிலிருந்து மகன் வாங்கி வந்ததாக அக்கா கூறினாள். நீங்களும் பாருங்களேன்.





இந்த மிஷினின் அடி பாகத்தில் துடைப்பதற்கான துணியை இணைக்க வேண்டும். அதன் ஒரு பக்கத்தில் இருக்கும் சிறு துளையில், தரை துடைக்கும் திரவத்தை ஊற்றி, மூடி இயந்திரத்தை ஆன் செய்யலாம். இதனோடு இனைந்து ஒரு ஜி.பி.எஸ். உபகரணமும் இருக்கிறது. அது முதலில் வீட்டின் அமைப்பை
படித்துக் கொள்ளும். பின்னர் அதற்கேற்றபடி இந்த மாப்பிற்கு கட்டளை இடுகிறது.  அது பீரோவிற்கு அடியில் எல்லாம் சென்று துடைக்கும் அழகு..!!

இன்னுமொரு சிறப்பு, இதை அலெக்ஸ்சாவோடு  இணைத்துக் கொள்ளலாம். அலெக்ஸ்சாவை செல் போன் மூலம் இயக்கும் வசதி இருந்தால், நீங்கள் வெளியில் செல்லும் பொழுது கூட, வெளியிலிருந்தபடியே அலெக்ஸா மூலம் இயக்க முடியும் "அலெக்ஸா, ஆன் தி மாப், அலெக்ஸா ஸ்டாப் தி மாப்" என்று கட்டளையிட்டால் போதும். வேலை நடந்து விடும்.



இது சார்ஜிங் யூனிட். சார்ஜெரை ப்ளக் பாயிண்டில் இணைத்து விட்டு, இதை நிலையாக ஒரு இடத்தில் வைத்து விட வேண்டும். மாப் தன் வேலையை முடித்து விட்டு, அழகாக இதில் ஏறி அமர்ந்து சார்ஜ் ஆகி விடும்.

திரும்பி வரும்பொழுது சென்னை.பு.த.டா.எம்.ஜி.ஆர். மத்திய ரயில் நிலையத்தில் இரண்டு மூன்று இடங்களில் மாதிரி தேர்தல் பூத்துகள் அமைத்து எப்படி எலெட்ரானிக் மிஷினில் எப்படி வாக்களிப்பது என்று ஒத்திகை அளித்துக் கொண்டிருந்தார்கள்.

பூஜைக்கு போன இடத்தில் பாட்டில்களில் வாங்கப்பட்ட குடிநீரை பானையில் கவிழ்த்து வைத்திருந்தார்கள். ஜில்லென்று டிஸ்டில்லது வாட்டர். நல்ல ஐடியா! நம் வீட்டிலும் பின்பற்றலாம்.





எல்லாவற்றையும் இழந்த பின்னாலும் 
எதிர்காலம் மிச்சமிருக்கிறது என்கிறதோ 
இலைகளை உதிர்த்த இந்த மரம் ?







Thursday, April 11, 2019

என்ன பொருத்தம்!?

என்ன பொருத்தம்!!


சுகுணாவிற்கு கொஞ்சம் படபடப்பாக இருந்தது. இன்று அவள் மகள் காவ்யாவிற்கு பிளேஸ்மென்ட் துவங்குகிறது. நல்ல கம்பெனியில் பிளேஸ் ஆக வேண்டுமே என்று நகவலைபட்டுக் கொண்டே இருந்தாள். 
மாலை வீட்டிற்கு வந்த மகள் பிளேஸ்மென்ட் லெட்டரை நீட்டியவுடன் சந்தோஷமாக இருந்தது. அப்பாடா! நிம்மதி. நல்ல கம்பெனி.  

போஸ்டிங் எங்க? 

இங்கதான்.

அப்பாடா! ரொம்ப நிம்மதி. நான் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தேன். எங்கேயாவது, பெங்களூர், பூனா என்று போட்டு விடக்கூடாதே? 

"அம்மா, எந்த காலத்துல இருக்க? என்று மகள் கேட்க, கணவர் நமுட்டு சிரிப்போடு ஆமோதிப்பாய் தலையசைத்தார். 

"அப்படி இல்லடி, இதே ஊர்னா கவலை இல்ல,வேற இடம்னா உன்னை தனியா எங்க, எப்படி தங்க வைக்கறதுனு யோசிக்கணும், இல்லனா நல்லதா பி.ஜி பார்க்கணும், இப்போ கவலை இல்ல, வரன் தேட ஆரம்பிச்சுடலாம்."

"அம்மா ப்ளீஸ், உடனே ஆரம்பிச்சுடாதே, என்னை கொஞ்சம் ஃப்ரியா விடு"

"அதுதானே, இப்போதான் படிச்சு முடிச்சிருக்கா, அதுக்குள்ள கல்யாணத்துக்கு என்ன அவசரம்? கொஞ்சம் விடேன்" அப்பாவும் துணைக்கு வந்து விட, சுகுணா வாயை மூடிக்கொண்டாள் . 

மகள் வேலையில் சேர்ந்து ஆறு மாதங்கள் ஓடியதும் மீண்டும் திருமண பேச்சை எடுத்தாள். 

"ரிஜிஸ்டர் பண்ணியவுடனே வரன் அமைந்துவிடுமா? இப்போதிலிருந்து பார்த்தால்தான் சரியாக இருக்கும்" என்று சுகுணாவின் வாதத்தை ஒப்புக்கொள்ள, மேட்ரிமோனியல் சைட் ஒன்றில் ரிஜிஸ்டர் செய்தார்கள்.

காவ்யாவின் ஃப்ரொபைல் வெளியான அடுத்த நிமிடத்திலிருந்து டெலிபோன் அழைப்புகள் வரத்தொடங்கின.  இதைத்தவிர இவர்களுக்கு பிடித்த ப்ரொபைல்கள். சுகுணா எல்லாவற்றையும்  ஒரு டைரியில் குறித்து வைத்துக் கொண்டாள். 

அவளுக்கும், அவள் கணவருக்கும் பிடித்த பையன்களின் ஜாதகத்தை தெரிந்த ஜோசியரிடம் காண்பித்து, தன் மகள் ஜாதகத்துடன் பொருந்தும் வரங்களை தேர்வு செய்து, மகளிடம் காண்பித்தால், ஏதோ ஒரு காரணம் சொல்லி தட்டி கழித்தாள். 
"அம்மா, வயதை பார்த்தியா? என்னைவிட ஆறு வயது பெரியவன்..."

"அதனால என்னடி?"    

"என்னடியா?, ஜெனெரேஷனே மாறி விடும். மூன்று வயதிற்கு மேல் போகக்கூடாது."

"என்னமா இவன் தலையில் முடியே இல்லை."

"என்னைவிட ஒரு இஞ்சுதான் கூட, குறைந்தது 5'11ஆவது இருக்க வேண்டும்."

"சம்பளம் போதாது", "சரியான பழமா இருக்கான்", "மாமா மாதிரி இருக்கான்" ... இப்படி என்னென்னவோ காரணங்கள் சொல்லி, தட்டி கழித்தாள். 

பொறுக்க  முடியாமல் சுகுணா மகளிடம்," நீ யாரையாவது லவ் பண்றயா? சொல்லித் தொலை" என்க, 

"என்ன சின்ன காஞ்சீபுரம், ரொம்ப முன்னேறிட்டாயா?" என்றாள் அம்மாவை சீண்ட அம்மாவின் சொந்த ஊரை சொல்லி அழைப்பது மகளின் பழக்கம். 

இப்படியே இரண்டு வருடங்கள் ஓடி விட்டது. மகளுக்கு திருமணம் தகையாத வருத்தத்தில் சுகுணாவிற்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தது. கோவில், ஜோசியர் என்று  அலைந்தாள். 

காவ்யா மேலே படிக்க வேண்டும் என்று அமெரிக்கா சென்று விட்டாள். உடனே சுகுணா பார்க்கும் வரன்களில்  அமெரிக்காவில் இருக்கும் வரன்களுக்கு முன்னுரிமை அளித்தாள். 

அதிலும் எதற்கும் மசியாத மகள் ஒரு நாள் தான் ஒருவனை விரும்புவதாகவும், அவனைத்தான் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் சொன்னாள். 

அந்த ஆதித்தியாவிற்கு தற்சமயம் வேலை இல்லை. படித்துக்கொண்டிருக்கிறான்(அதுதான் நான் சம்பாதிக்கிறேனே, படித்து முடித்ததும் அவனுக்கு நல்ல வேலை கிடைத்து விடும்.)
காவ்யாவைவிட ஏழு வயது மூத்தவன்(அதனால என்னம்மா? அவன் என்னை நன்னா புரிஞ்சுக்கறான். ரொம்ப பொறுமையா எல்லாத்தையும் புரிய வைப்பான்.). தலையில் ஒரு முடி கூட கிடையாது.(திஸ் இஸ் நாட் எ பிக் டீல். இப்போ பாதிப்பேர் பால்டுதான்).

சுகுணாவிற்கு சில கேள்விகள் மனதில் உதித்தன. ஆனால் என்ன கேட்டு என்ன? எல்லவற்றிற்கும் பதிலாக ஒரு மூன்றெழுத்து வார்த்தை இருக்கிறதே. 

Saturday, April 6, 2019

கொடிக்கு காய் பாரமா?

கொடிக்கு காய் பாரமா?

அரசனாக இருந்தாலும், கர்ம யோகியாக வாழ்ந்தவர் ஜனகர். கற்றுக் கொள்வதில் அவருக்கு இருந்த ஆர்வமும், ஒருமுகப்பட்ட கவனிப்பும் அவருடைய குருவிற்கு மிகவும் பிடித்திருந்ததால் அவர் மீது ஒரு தனி பாசம் வைத்திருந்தார். இது மற்ற சீடர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஜனகர் ஒரு அரசனாக இருப்பதால்தான் தங்களுடைய குரு பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்று நினைத்தார்கள், அதை அவ்வப்போது வெளிப்படுத்தவும் செய்தார்கள். ஜனகரின் தன்மையையும், தன்னுடைய நிலைபாட்டையும் மற்ற மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று நினைத்த குரு,ஒரு நாள்,  தன் யோக சக்தியால், அரண்மனை உட்பட மிதிலாபுரி முழுவதும் எரிவது போன்ற ஒரு மாய தோற்றத்தை உருவாக்கினார்.  அந்த காட்சியை கண்ணுற்றதும், எல்லா மாணவர்களும், பாடத்தை அப்படியே பாதியில் விட்டுவிட்டு தங்கள் உடமைகளை பாதுகாக்க ஓடினர். அங்கு சென்றதும்தான் நிஜமாக அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று தெளிந்து திரும்பி வந்தனர். ஜனகரோ கொஞ்சம் கூட பாதிக்கப்படாமல் தன் கற்றலை தொடர்ந்து  கொண்டிருந்தார்.  ஆசிரியர் அவர்களிடம்,"உங்களுக்கும் ஜனகருக்கும் இருக்கும் வித்தியாசம் புரிகிறதா?பெரிதாக சொத்து பத்துக்கள் இல்லாத நீங்கள் எல்லோரும் உங்கள் உடைமைகளை காப்பாற்றிக் கொள்ள ஓடி விட்டீர்கள், ஆனால், இந்த நாட்டுக்கே அதிபதியாக, ஏராள சொத்துக்களுக்கு உடமையாளரான ஜனகனோ, இதனால் பாதிக்கப்படாமல் இருக்கிறான். நான் ஏன் அவனிடம் பிரத்யேக அன்போடு இருக்கிறேன் என்று இப்போது தெரிந்து கொண்டீர்களா?" என்றாராம்.

இந்த கதையை நான் கல்லூரி மாணவியாக இருந்த பொழுது, என் ஆசிரியர்  கூறியதும், நான் அவரிடம் ,"ஒரு ராஜாவாக இருந்துகொண்டு தன் நாட்டில் ஒரு பெரிய தீ விபத்து நிகழும் பொழுது, அவர் அங்கு சென்று, அந்த நெருப்பை அணைக்க  வேண்டாமா?" என்று கேட்டேன். அதற்கு  அவர் சிரித்துக்கொண்டே, " ஒரு நாடு என்றால் அதில் தீயணைப்பு படைகள் இருக்காதா? ஒரு நல்ல நிர்வாகி என்பவன் தானே எல்லா காரியங்களையும் செய்ய வேண்டும் என்னும் நிலையில் வைத்திருக்க மாட்டான். எல்லா துறைகளுக்கும் திறமையான, செயல் திறமை மிக்க ஆட்களை அதிகாரிகளாக நியமித்து, அவர்களுக்கு செயல்படும் அதிகாரமும் கொடுத்து வைத்திருப்பான். அதனால் ஜனகரே ஒவ்வொன்றிற்கும் நேரில் சென்று பார்வையிடும் தேவை இருந்திருக்காது". என்றார்.  

நான் சாதாரணமாகத்தான் இந்த கதையை எழுதியிருக்கிறேன். உடனே நீங்களாகவே, சமீபத்திய அரசியல் நிகழ்வுகளோடு சம்பந்தப்படுத்திக் கொண்டால், அதற்கு நான் பொறுப்பு இல்லை. 

மஹாத்மா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் என்ன 
வித்தியாசம்?
அவர் பாபு(Bapoo), இவர் பப்பு(Pappu) 


பெண்ணின் மனதை தொட்டு படத்தில் வரும் இந்த நகைச்சுவை காட்சி எனக்கு மிகவும் விருப்பமானது. 

அரசியலை விட்டு வெளியே வந்து ஒரு சமூக விஷயத்தைப் பற்றி பேசலாமா? இப்போது பெண்கள் தங்கள் படிப்பு, வேலை இவை காரணமாக திருமணத்தையும், பிள்ளைப் பேற்றினையும் தள்ளிப் போடுகின்றனர். சிலர் திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று முடிவெடுக்கின்றனர். 

என் மகனோடு பணி புரியும் ஒருவர்," குழந்தைகள் எல்லாம் எதற்கு? அனாவசிய செலவு, புடுங்கல், அதனால்   நானும் என் மனைவியும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று தீர்மானித்து விட்டோம்" என்றாராம். மக்கள் இந்த அளவு தற்குறிகளாகி விட்டார்களா? என்று தோன்றியது. 'மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு கிளை பாரமா?
கொடிக்கு காய் பாரமா? பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?" என்றொரு பழைய பாடல் உண்டு. குழந்தையை பாரமாக நினைக்க ஆரம்பித்து விட்டார்களா? கடவுளே!




Friday, April 5, 2019

'விமு' யாரை விட்டது?

'விமு' யாரை விட்டது?

பாக்கியம் ராமசாமி
   
எதிர் ஃபிளாட் விமு கதறக் கதற அழுதுகொண்டு கம்ப்யூட்டர் கிளாசுக்குப் புறப்பட்டான். அவனது பெற்றோர் ஸ்கூட்டரில் அவனை ஸாண்ட்விச் செய்து கொண்டு கிளம்பினர்.

'அவனுக்கு ஒன்னரை வயசாகிறது. ஒண்ணுமே தெரியலை' என்று விமுவின் அம்மா என் மனைவியிடம் அங்கலாய்ப்பட்டாள்.

பாவம், ஒண்ணரை வயசுக் குழந்தை என்னத்தென் கண்டது என்று ஒரு தினம் என் மனைவி கேட்டு விட்டாள்.

அதற்கு அந்த இளம் தாயார் சொன்னாள். "மற்ற ஒண்ணரை வயசுகளுக்கெல்லாம் தெரியறதே மாமி. என்னமாக ஒவ்வொண்ணு பெயிண்ட் செய்யறது, பாட்டுப் பாடறது, ஹாண்ட் வொர்க் செய்யறது, தானே எடுத்துச் சாப்பிடறது, போய்ப் பாருங்கோ."

குழந்தை விமுவை ஒண்ணாம் வயசு முடிந்ததுமே ப்ளே ஸ்கூலில் சேர்த்து விட்டார்கள்.

அந்த ப்ளே ஸ்கூலில் இடம் கிடைப்பது என்பது ரொம்ப ரொம்பக் கஷ்டமாம்.

எப்படியோ விமுவின் அப்பா யார் யாரையோ சிபாரிசு பிடித்து இடம் வாங்கி விட்டார்.

.......எதிர் வீட்டு விமு கதறக் கதற அழுது கொண்டே கம்ப்யூட்டர் கிளாசுக்குப் புறப்பட்டான். அவனுக்கு வயசு ஒன்றரைதான்.

ஆனால் அவன் பெற்றோர் அதற்குள் அவனை கம்ப்பூட்டர் வகுப்பில் சேர்த்து விட்டனர்.

கம்ப்யூட்டர் யந்திரங்களில் பெயர்களைக் கற்றுக் தருவதும் மேற்படி யந்திரங்களைத் தொட்டுப் பார்க்கவும் குழந்தைகளுக்குப் பயிற்சி தருகிற பள்ளியாம்.

பலத்த சிபாரிசின் பேரில் அந்தப் பள்ளியில் இடம் கிடைத்தது. விமுவுக்கு வாரத்தில் மூன்று வகுப்பு.

விமுவுக்கு 'க' எழுத்து உச்சரிக்க வராது. 'விமுக்குட்டி எங்கே போய் வந்தது' என்று விசாரித்தால் 'சம்பூசர் க்ளாஸ்' என்பான்.

"விமுக் கண்ணு! ஸ்கொயர் எது காட்டு" என்றாள் தாயார். ஜன்னலின் சதுர டிஸைனைக் குழந்தை காட்டினான். "ட்ரை ஆங்கிள்" எது? என்றாள் தாய்.

ஒரு வட்ட டிஸைனை குழந்தை தப்பாகக் காட்டியது. அது "ட்ரை ஆங்கிள்டா கண்ணு" என்றாள் தாயார்.

குழந்தை ஜன்னல் கதவைப் படபடவென்று ஆட்டினான்.

"விளையாட்டுப் புத்தி வந்துட்டுது. அவ்வளவுதான்!" என்று அம்மாக்காரி தலையில் அடித்துக் கொண்டாள் எரிச்சலுடன். "இப்படி இருந்தால் எப்படிடா விமு?"

"மூடு சரியில்லை போலிருக்கு..." என்று என் மனைவி நழுவிக் கொண்டு வந்துவிட்டாள்.

மணி எட்டே கால். எதிர் வீட்டுப் பெண்மணியின் அலறல்.

"ஊம்... சாப்பிடு! சாப்பிடு! நீயே சாப்பிடணும்... ஸ்பூனை எப்படிப் புடிக்கறது? நன்னாப் புடிடா... ஏன் இறைக்கிறே? சொல்லிண்டே இருக்கேன். துப்பாதடா... கடன்காரா... உங்களைத்தானே... இங்கே வந்து பாருங்க... என் பிராணனை எடுக்கறான்."

குழந்தையை இடுப்பிலே எடுத்து வைத்துக் கொஞ்சிக் கொண்டு தாயார் சாதம் ஊட்டும் காட்சிகளெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாகி விட்டன.

பூச்சாண்டி காட்டலாம்னா அதற்கும் பஞ்சம். அத்தைக்கு ஒரு வாய். பாட்டிக்கு ஒரு வாய் எல்லாம் சொல்லி தெரியறதில்லை. நேரம் கிடையாது. ஒரு வயசுக்குள் குழந்தையே ஸ்பூனில் எடுத்துச் சாப்பிட்டால் சந்தோஷம். ஒண்ணரை வயசாகியும் விமுவுக்கு அந்த வழக்கம் வரவில்லையென்பதால் பெற்றோருக்குக் கவலை.

இரண்டு நாள் கழித்து விமுவை பகல் பதினொரு மணிக்கு மயிலாப்பூர் கூட்டிப் போனாள் தாய்.

அங்கே 'லிட்டில் மெளத்' என்று ஒரு பிரத்தியேகப் பள்ளியாம். ஒரு வயது பூர்த்தியான குழந்தைகள், தாங்களாகவே ஸ்பூனினால் அழகாக எடுத்துச் சாப்பிடக் கற்றுத் தரும் பள்ளியாம். அதுக்கு ஒரு பிரின்ஸி. நாலு இன்ஸ்ட்ரக்டர்கள். இரண்டு ஆயாக்கள். இரண்டு பியூன்கள். ஒரு டயடீஷியன். ஒரு குக். இரண்டு வாட்ச்மேன். கார் பார்க்கிங் இடம். இப்படியாக ஒரு நிறுவனம். மாசக் கட்டணம். இருநூறு ரூபாய்.

குழந்தை, ஏப்ரன் கட்டிக் கொண்டு வந்து சேர்ந்தது. அம்மாவுக்கு மகா பெருமை.

'அம்மா! நானே சாப்பிட்டுட்டேன்' என்றது.

ஆப்ரனை மட்டும் கட்டிக்கொண்டு பின் பக்க நிர்வாண கோலத்துடன் எல்லா பிளாட்டுக்கும் போய் விமு 'ஆப்பேன் சட்டிண்டு' என்று ஒரு சுற்று போய் வந்தான்.

காலையில் கம்ப்யூட்டர் கிளாஸ், அப்புறம் பிளே ஸ்கூல், அப்புறம் லிட்டில் மெளத்.

விமுவின் பிளே ஸ்கூலிலிருந்து குழந்தையின் டைரியில் வகுப்பு ஆசிரியை அவ்வப்பொழுது ஸ்ரீராமஜெயம் வரிசையாக எழுதுவதுபோல இரண்டு மூன்று வரிகள் எழுதி அனுப்பியிருந்தாள்.

விரல்களால் இறுகப் பற்றிக் கொள்வதில் குழந்தை வீக்காக இருக்கிறான். கவனிப்பது நல்லது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

விமுவின் அம்மாவும் அப்பாவும் அன்று ராத்திரி தூங்கவில்லை. மறுநாள் ஸ்கூலுக்குச் சென்று சம்பந்தப்பட்ட மிஸ்ஸிடம் விசாரித்தார்கள். 'விளையாட்டுச் சாமான்களைக் கீழே இறைத்து விட்டுக் கூடையில் எடுத்துப் போடுகிற சமயம் அடிக்கடி பொருள்களை கீழே போட்டு விடுகிறான்' என்பதாக அவள் சொன்னாள்.

சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்டிடம் உடனே போனார்கள்.

அவர் பல சோதனை செய்து விட்டு "குழந்தை ஆல்ரைட்! விரல்களுக்குச் சிறிது பயிற்சி தருவது நல்லது" என்றார்.

"சப்பாத்தி சாப்பிடுவீர்களில்லையா. சப்பாத்திக்கு மாவு பிசைவீங்களில்லையா? குழந்தைகிட்டே கொஞ்சம் கொடுத்து நல்லா பிசையச் சொல்லுங்க."

சப்பாத்தி மாவைக் குழந்தை விரலில் ஈஷிப் கொண்டது. 'பிசை... பிசை!' என்று தாயாரும் தகப்பனாரும் குழந்தையைப் பிசைந்தார்கள்.

அவன் நடுநடுவே வாயில் மாவைப் போட்டுக் கொண்டு சிரித்தான். 'உருட்டுடா! அழுத்துடா... ஊம்... ஊம்... அப்படித்தான்... அப்படித்தான்...' என்று அவனை ஊக்குவிப்பதும் உருட்டி மிரட்டுவதுமாக ஒரு வாரம் வீட்டிலேயே சப்பாத்தி பிசையும் பயிற்சி தரப்பட்டது. பிசையும்போது அடிக்கடி சப்பாத்தி மாவைச் சாப்பிட்டதால் குழந்தைக்கு நாலு நாள் வயிற்றுப் போக்கே வந்து விட்டது.

ஆகவே பிளாஸ்டிக்கில் இதற்கென்று ஒரு வகை மாவு விற்கிறது. அது எழுபது ரூபாயோ எண்பது ரூபாயோ அதை வாங்கிச் பிசையச் சொன்னார்கள்.

அந்த மாவைத் தின்றால் இன்னும் வியாதி வந்து விடுமே என்று கன்றுக் குட்டிக்கு பால் குடிக்காமலிருக்க வாயில் புட்டுக் கூடை கவிழ்ப்பார்களே அது மாதிரி பயலுக்கு வாயில் ஒரு துணியைக் கட்டி வைத்தார்கள்.

சாயந்திர நேர ஜைனர்கள் மாதிரி பையன் அந்த வாய்க் கட்டுடன் ஜாலியாக இருந்தான். நடுநடுவே தண்ணி என்று உபத்திரம் செய்தால் கட்டை அவிழ்த்து விட வேண்டும்... குடித்ததும் மறுபடி கட்டி விட வேண்டும்.

ஒரு வாரம் மாவு பிசைந்தும் பெற்றோருக்குத் திருப்தியில்லை.
 
வீட்டில் பயிற்சி தருவதை விடக் குழந்தைகளுக்குச் சிறுசிறு பயிற்சி தரும் 'சர்வீஸ் ஓரியண்டட் கிளப் ஃபர் சில்ட்ரன்' என்று ஓர் அமைப்பு இருக்கிறதே, அங்கே சிறு குழந்தைகளுக்கு (இரண்டு வயசுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு) எல்லா வேலைகளும் கற்றுத் தருகிறார்களாம் என்று கேள்விப்பட்டு 'எஸ்.ஓ.சி.சி'யில் பயலை மறுதினமே சேர்த்து விட்டார்கள். அது மதியம் மூன்றிலிருந்து நாலுவரை. கீழ்ப்பாக்கத்தில் அந்த கிளப் இருந்தது.

அங்கே ஓரொரு குழந்தைக்கும் ஒரு ஆயா தனிக் கவனம் செலுத்தி, குழந்தைக்குப் பயிற்சி தந்து வந்தார்கள்.

வீட்டுக்கு விருந்தாளி வந்தால் நீர் டம்ளரை எப்படித் தட்டில் வைத்து நீர் சிந்தாமல் கொண்டு வந்து தருவது, கீழே நீர் சிந்தினால் துணி கொண்டு வந்து தாங்களே துடைப்பது எப்படி? கீழே கிடக்கும் பேப்பர், புஸ்தகம் முதலியவற்றைக் குனிந்து எடுத்து எப்படி அலமாரியில் வைப்பது, கதவைத் தட்டி விட்டு எப்படி உள்ளே செல்லுவது... முதலியவைகளைக் கற்றுத் தந்தார்கள்.

அவனுடைய அம்மாவுக்கு மிகவும் சந்தோஷம். விமு வீட்டுக்கு வந்ததும், "மம்மி! நீர்" என்பான். ஒரு டம்ளர் நீர் அம்மா கொண்டு வந்து ஆசையோடு தருவாள்.

குழந்தை உடனே துணியை எடுத்து வந்து தானே துடைப்பான். முற்றிலும் ஈரம் போகாதென்றாலும், குழந்தை தானாகத் துணியால் தரையை 'மாப்' பண்ணுகிறான் வந்து பாருங்கோ" என்று எங்களை அழைத்துச் சென்று காட்டினாள்.

நவராத்திரி கொலுவுக்கு அழைப்பது போல் எல்லா ஃபிளாட்டுக்கும் சென்று குடித்தனக்காரர்களை அழைத்து 'மாப்'பிள்ளையின் சாமர்த்தியத்தை உலகுக்குப் பரப்பினாள்.

அப்படி வந்த நாலாம் நம்பர் வீட்டு அம்மாள் குழந்தையிடம், "ஏண்டா கண்ணு, உனக்கு ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் தெரியுமோ? எங்கே பாட்டிக்கு சொல்லிக் காட்டு," என்று பகலில் ஸ்டாரைக் காட்டச் சொன்னாள்.

"அவனுக்கு அதெல்லாம் சொல்லித் தரலை. மாண்டிஸோரி மெதாப் ஸ்கூலாக்கும், இவனது..." என்றாள் தாயார்.

அந்த மாமி, "எந்த ஸோரியோ நான் என்னத்தைக் கண்டேன். எங்க வீட்டுப் பிசாசுக்கு ஒரு வயசுகூட இன்னும் ஆகலே, அது சொல்றது ட்விங்கிள் ட்விங்கிள்... ஜாக் அண்ட் ஜில் வெண்ட் அப் த ஸில்... ரெயில் ரெயில் கோ அவே... எல்லாம் சொல்றது" என்றாள்.

விமுவின் அம்மாவும், அப்பாவும் யோசித்தனர்.

அந்த மாமி சொன்னதும் கரெக்ட் என்றாள் தாயார். "இந்த வயசிலே நர்ஸரி ரைம் கத்துக் குடுக்காம எப்போ கத்துத் தரப் போறாங்க தெரியலியே."

"ஏபிஸிடியே தெரியாது நம்ம பையனுக்கு. எனக்கும் கவலையாயிருக்கு. வேற ஸ்கூல் மாத்திடுவோமா!"

"நீங்க கொஞ்சம் பேசாதிருங்கோ. இவுங்க மெதாட் அஃப் டீச்சிங்கே வேற. குழந்தை மூளையிலே எதையும் திணிக்க மாட்டாங்க. அதனுடைய அறிவை லிமிட் பண்ணக் கூடாது என்றது இவங்க பாடத் திட்டம்."

"அது சரி, வயது ஒண்ணரையாறது. ஏபிஸிடி தெரியலேன்னா எப்படி?"

"நாமதான் சொல்லித்தரணும்."

"நம்மகிட்டயெல்லாம் வணங்கி உட்காராது. நமக்கும் ஏது நேரம்? என் பிரண்டு சாந்தினியை விசாரிச்சேன். அவள் பையனுக்கு ஒரு வயசுதான் ஆகிறது. 'ரைம்ஸ் மந்திர்'னு சாந்தோம்லே ஒரு ஸ்கூல் இருக்காம். ஆறே மாசத்துல குழந்தைகளுக்கு சகல ரைம்ஸும் கத்துக் குடுத்துடறாங்களாம்."

மறுதினம் விமு வீட்டுக்கு வர சாயந்தரம் ஏழுரையாகி விட்டது. மாலை ஆறிலிருந்து ஏழுவரை ரைம்ஸ் வகுப்பு.

இதனடுவே பள்ளியின் ஆண்டு விழாவில் விமு கத்தரிக் காயா நடிக்கவேண்டும் என்று பிரின்ஸி எழுதி அனுப்பி, அதற்கான டிரெஸ் தைக்க நூற்றைம்பது ரூபாய் உடன் அனுப்பச் சொல்லியிருந்தாள்.

வெஜிடபிள் டான்ஸ் என்று ஒரு நடன நாடக நிகழ்ச்சி. குழந்தைகளெல்லாம் மாட்டுச் சந்தைக்கு வந்த கன்னுக் குட்டிகள் மாதிரி மிரள மிரள முழித்துக்கொண்டு நிற்கிற ஒரு நிகழ்ச்சி.

ரூபாய் பெரிசில்லை. குழந்தை கத்தரிக்காயாக எப்படி நடிப்பான் என்று கவலைப்பட்டார்கள் பெற்றோர்.

"கவலைப்பட வேண்டாம். அவனை வீட்டில் தினமும் நன்றாகக் குதிக்கச் சொல்லுங்கள். அது போதும்" என்று சொல்லி அனுப்பினாள் மிஸ்.

வீட்டிலே விமுவைக் குதிக்கச் சொன்னால் 'சுதிக்க மாத்தேன்' என்று பிடிவாதம் பிடித்தான். 'சத்திச்சா நாணாம்' என்கிறான் கத்திரிக்காய் வேணாம்.

"குதிடா குதிடா... குதிடா..." என்று பெற்றோர்தான் தினமும் குதித்தார்கள்.

"இவனையொத்த குழந்தைகள் இந்த வயசில் டான்ஸே ஆடுகிறது," என்றான் கணவன்.

மறுநாள் காலையில் அவசரமாக விமுவின் அம்மா என் மனைவியைத் தேடி வந்தாள். "மாமி உங்களுக்கு யாராவது டான்ஸ் மாமி தெரியுமா, க்ரேஷ் ப்ரோக்ராம் மாதிரி கிரேஷ் டியூஷன் எடுக்க வேண்டும். பத்தே நாளில் விமுவுக்கு நன்றாகக் குதிக்கக் கற்றுத் தர வேண்டும். வீட்டுக்கே வந்து சொல்லித் தரணும். முன்னூறு ரூபாய் வரை தரத் தயார்."

"மேலே நூறுன்னாலும் சரி..." என்றான் கணவன்.

என் மனைவி ஒரு காலத்தில் டான்ஸ் கத்துக் கொண்டவள். அடை செய்யும் போது சில அடவுகளும் செய்து காட்டுவதுண்டு.

அவளுடைய அந்தக் கால குரு இந்தக் காலத்தில் நடனபீட அவார்டுக்குரிய முதுமை எய்தி ஏதோ ஒரு சந்து வீட்டில் இருந்தாள்.

அவளை மெதுவாக வரவழைத்து எதிர் வீட்டில் குழந்தை விமுவுக்கு ஸ்கூல் டிராமாவில் குதிப்பது எப்படி என்பதைக் கற்றுத் தந்தார்கள்.

விமு 'சின்னச் சின்ன சத்தரிச்சா' என்று முதல் இரண்டு நாள் பாடியவாறு குதித்தான். அப்புறம் 'நீ பாடாதே' என்று மரியாதை இல்லாமல் குருவை நிந்திக்கத் தொடங்கினான். கிள்ளிக் கூட கிள்ளினான் என்று அரசல் புரசலாகச் செய்தி. 'தடால்' என்று பின்னால் ஓடி வந்து ஆடு முட்டுவது போல் தள்ளி விட்டதாகவும், குருவம்மா பயந்து ஓடிவிட்டதாகவும் தெரிந்தது.

"எதுக்கு இந்தப் பொல்லாத்தனம். வயசு குட்டிச் சுவருக்கு ஆற மாதிரி ஒண்ணரை ஆறது. குதிக்கத் தெரியறதா.." என்று துக்கித்தாள் தாய்.

இதனடுவே பள்ளிக் கூடத்திலிருந்து குழந்தை அழைத்து வரப்போன சமயம் காலை நொண்டிக் கொண்டு வந்தான்.

"என்னடா ராஜா!" என்று துடித்துப் போனாள். அவனைக் கவனிக்கும் மிஸ்ஸிடம் பதட்டத்துடன் விசாரித்தாள். 'அபு' என்ற பையன் (வயது 2) கொஞ்சம் முரடாம். கராத்தே கிளாஸில் சேர்ந்திருக்கிறானாம். எல்லாரையும் எட்டி எட்டி உதைக்கிறானாம். அவனுடைய பேரண்ட்ஸ் யூரோப் டூரிலிருந்து வந்ததும் அழைத்துச் சொல்வதாக இருக்கிறார்களாம்.

தம்பதிகள் தீர்மானித்தனர். "குழந்தையின் பாதுகாப்புக்கு கராத்தே மிகமிக இன்றியமையாதது" என்று தீர்மானித்து எழும்பூரில் ஒரு தனியார் கராத்தே பள்ளியில் சேர்த்து விட்டனர்.

ப்ளே ஸ்கூலிலிருந்து பதினொரு மணிக்கு வந்ததும் பப்பு மம்மு சாப்பிட்டு விட்டு அழகான கராத்தே டிரெஸ் போட்டுக் கொண்டு கராத்தே ஸ்கூலுக்குப் புறப்பட்டாகிடும். ஆட்டோவில் தாயார் கூட்டிப் போவாள்.

"இத்தனை ஸ்கூல், இத்தனை படிப்புப் போட்டுச் சுமத்தினால் அந்தக் குழந்தை தாங்குமா?" என்று ஊரிலிருந்து வந்த பாட்டி சண்டை பிடித்தாள்.

அவன் இன்னும் பஸில்ஸ் போடலை. பெயிண்ட்டிங் கிடையாது. அவனுடைய ஃப்பூச்சரை நினைச்சாத்தான் பயம்மா இருக்கு..." என்றாள்.

பக்கத்திலிருந்த விமுவுக்கு அந்த 'பயம்மா இருக்கு' வார்த்தை ரொம்பப் பிடித்து விட்டது.

"பயம்மா... பயம்மா" என்று சொல்லி எல்லாருக்கும் பூச்சாண்டி காட்டினான்.

விமு பள்ளியில் பரீட்சை என்று ஒன்று கிடையாது. ஆனால் பள்ளி ஆசிரியை அடிக்கடி குழந்தையின் டைரியில் ஏதாவது எழுதி அனுப்பி விடுவாள்.

'குழந்தைக்கு அவசியம் இரவில் பெற்றோர் படுக்கை நேரக் கதைகள் படித்துக் காட்ட வேண்டும். விமு விஷயத்தில் அதைக் கவனிக்கவும்... அவனுக்குக் கதை கேட்பதில் நாட்டம் குறைவாக இருக்கிறது?' என்று எழுதிவிட்டாள்.

அந்தத் தினத்திலிருந்து ராத்திரி எட்டரைக்கு ஒரு பயங்கரப் பிரளயம் எதிர் வீட்டில்.

"குரங்கே! முண்டமே! ஏண்டா தூங்கி வழியறே! கேட்கறியா கேட்கறியா? காதுலே விழறதா... லிட்டில் ரெட் ரைடிங் ஹூட் எங்கேடா போனா? ஃபாரெஸ்டுக்கு..." கேள்வியும் அம்மாவே, பதிலும் அம்மாவே.

"அங்கே யார் இருக்கா... அவனோட கிராண்ட் மதர் இருக்கா... கிராண்ட் மதர்னா யாரு?"

"நீ!" குழந்தையின் பதில். இப்படியாக அரைமணி நேரம் ரகளை...

பள்ளி ஆண்டு விழாவுக்கு இரண்டு நாள் இருந்த போது விமுவின் மிஸ் எதிர் வீட்டுக்கு வந்திருந்தாள்.

பெற்றோர் பயந்து கேட்டனர். "என்ன, எங்க விமுவைப் பத்தி ஏதாவது கம்ப்ளெயிண்ட்டா?"

"ஒரு கம்ப்ளெயிண்ட்டும் இல்லை. ஆனால் ஒரு தகவல் உங்ககிட்டே சொல்லத்தான் வந்தேன். இப்போ கொஞ்ச நாளா விமு ரொம்பப் பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கறான். தானா சாப்பிடறான். தானாக் கை அலம்பிக்கிறான். தரையிலே தண்ணிப்பட்டால் துடைக்கறான். ஸ்டூல் போட்டுண்டு ஏறி ஃபேனை அணைக்கிறான். பசங்களைக் கூட்டி வெச்சிண்டு கதை சொல்றான். கராத்தே கத்துத் தர்ரான். ஆக்டிவிடீஸெல்லாம் ரொம்ப ஓவராயிடுத்துன்னு பிரின்ஸி சொல்லி அனுப்பினாள். ஒண்ணரை வயசுக்குள் இவ்வளவு வளர்ச்சி கூடாதாம். டென்ஸ் ஆயிடுமாம். அதைக் குறைக்கறதுக்கு ஏதாவது பண்ணினால் நல்லது" என்று சொல்லிவிட்டுப் போனாள்.

"எனக்கு இப்படி ஏதாவது வரும்னு தெரியும்," என்றவாறு விமுவின் அம்மா ஒரு பத்திரிகை கட்டிங் எடுத்து வந்தாள்.

வளசரவாக்கத்தில் இ.பி.இ.ஸி எக்ஸ்ட்ரா ப்ரிலியன்ஸ் எக் ஸ்ட்ரேக்டர்ஸ் ஃபர் சில்ட்ரன்'னு ஒரு ஸ்கூல் இருக்கு. அங்கே தான் சேர்க்கணும்... ஃபீஸ் ஐந்நூறு போனாலும் குழந்தை உருப்படணுமே மாமி... அளவு பார்த்து அவர்கள்தான் ப்ரிலியன்ஸைக் குறைப்பா. நாம ஏதாவது பண்ணினால் தப்பாயிடும்," என்று சொல்லி விட்டு, அதிகாலை ஐந்தரை மணிக்கு விமுவை அழைத்துக் கொண்டு அவன் பெற்றோர் வளசரவாக்கம் கிளம்பினர்.

"அரைப் பணம் கொடுத்து அழச் சொல்லிட்டு, ஒரு பணம் கொடுத்து ஓயச் சொன்ன மாதிரி ஆச்சு" என்றாள் என் மனைவி!

*பாக்கியம்  ராமசாமி*........அவர்களின்  பக்கத்திலிருந்து

எனக்கு வாட்ஸாப்பில் வந்தது. படித்து, கண்களில் நீர் மல்க சிரித்து, என் மகனுக்கும் கூட படித்துக் காண்பித்தேன். யான் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற வேண்டாமா? அதனால் வலைப்பூ நண்பர்களோடும் 
பகிர்ந்து கொள்கிறேன். என்ஜாய் மாடி!

Monday, April 1, 2019

ஆஸ்பத்திரி அனுபவங்கள்

ஆஸ்பத்திரி அனுபவங்கள் 


வாழ்நாள் முழுதும் மருத்துவமனைக்கு செல்லாமல் இருக்க முடிபவர்கள் பாக்கியசாலிகள். ஆனால் என்னைப் போன்ற பலருக்கு அது வாய்ப்பதில்லை. நான் சிறு வயதிலிருந்தே மருத்துவமனைக்கு நிறைய படையெடுத்திருக்கிறேன்.

சிறு வயதில் வீசிங் தொந்திரவு இருந்ததால், அடிக்கடி நோய்வாய்ப்படுவேன். இரவெல்லாம் தூங்க முடியாது. அப்போதெல்லாம் எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் முத்துராமய்யர் என்னும் ஒரு டாக்டரிடம் என்னை என் பெரிய அக்கா கூட்டிக் கொண்டு  போவார். நான் சிறு குழந்தையாக இருந்து பொழுது என்னை தூக்கிக்கொண்டும் சென்றிருக்கிறாராம். அந்த டாக்டரை  'ஒன்றரை அணா டாக்டர்' என்பார்கள். காரணம், அவருடைய கன்சல்டிங் ஃபீஸ் வெறும் ஒன்றரை அணாதான்  அவர் ஏதோ சூரணம் கொடுத்து அதை தேனில் குழைத்து சாப்பிட சொல்வார்.  அவருடைய டிஸ்பென்சரிக்கு எதிரே இருக்கும் ஒரு கடையில் சிறு தேன் பாட்டிலும் வாங்கி வருவோம். வீட்டில் வெற்றிலை இருக்கும், அதில் சூரணத்தை போட்டு தேனில் குழைத்து சாப்பிட்டால் பெரும்பாலும் இரண்டு நாட்களில் ஜுரமும், வீசிங்கும் சரியாகி விடும். சரியாகவில்லையென்றால், எங்கள் வீட்டிர்க்கு எதிரே இருந்த பன்னீர்செல்வம் என்னும் டாக்டர் வீட்டிற்கோ, அல்லது குஜிலித்தெருவில் இருந்த ஒரு டாக்டரின்   க்ளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்படுவேன்.

Related image


இதில் பன்னீர்செல்வம் என்பவரின் க்ளினிக்  பச்சை நிற டிஸ்டம்பர் அடிக்கப்பட்டு நிசப்தமாக, இருக்கும். அங்கு வைக்கப்பட்டிருக்கும் பெடஸ்டல் ஃபேன் சுழலும் ஓசை தவிர வேறு ஓசை இருக்காது. சுவரில் வேறு "ஷ்ஷ்ஷ்" என்று வாயில் விரல் வைத்து நம்மை எச்சரிப்பார் ஒரு பெண். மடக்கக்கூடிய இரும்பு நாற்காலிகளில் அமர்ந்திருப்பவர்கள் யாரும் பேச மாட்டார்கள்.  அந்த டாக்டர் பரிசோதித்த பிறகு, "அங்க பார்" என்பார், அப்படி சொன்னால் ஊசி குத்த போகிறார் என்று அர்த்தம். நான் அழாமல் ஊசி குதிக்க கொண்ட சமத்து குழந்தைகளில் ஒருத்தி.

குஜிலித் தெரு டாக்டரின் கிளினிக்கை டாக்டர் வீடு எனலாம். ஏனென்றால் ஹாலில் காத்திருக்கும் நோயாளிகள், சத்தம் போடாதே படம், டோக்கன் கொடுக்கும் கம்பௌண்டர் போன்ற எந்த விஷயங்களும் அங்கு இருக்காது. அது ஒரு வீடுதான். திண்ணையில் ஏறியதும் வரும் ஒரு அறையில், அதை ரேழி என்பது வழக்கம். இரண்டு பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். நோயாளிகள் அதிகம் பேர் காத்திருக்க மாட்டார்கள். ரேழி தாண்டி இருக்கும் சிறிய ஹாலில் வலது பக்கம் ஒரு சிறிய மேஜையில் எக்ஸ் ரேயை பார்க்கும் ஸ்க்ரீனும், பச்சை நிற டெலிபோனும் இருக்கும். பச்சை கலரில் கூட போன் வைத்துக் கொள்ள முடியுமா என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஒரு பெரிய மேஜைக்கு பின்னால் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் டாக்டர் எப்போதும் விஷ்ணு சஹஸ்ரநாமம் படித்தபடி இருப்பார். பார்ப்பதற்கு ஓவியர் மாயா வரையும் டாக்டர் போல இருப்பார். 

நோயாளிகள் வந்தவுடன் அவரே கிடுகிடுவென்று வந்து வாயில் தெர்மாமீட்டரை வைத்து விட்டு, நாடியை பிடித்து பார்ப்பார். ஸ்டெதாஸ்கோப்பால் செக் பண்ணி விட்டு, தெர்மாமீட்டரை எடுத்து டெம்பெரேச்சர் பார்த்து விட்டு, உள்ளே போய் ஒரு ஊசியை கொண்டு வந்து சுருக்கென்று குத்தி விட்டு, மீண்டும் உள்ளே சென்று மாத்திரைகளை கொண்டு வந்து "காலையில் சிவப்பு மாத்திரை, மதியம் வெள்ளை மாத்திரை, ராத்திரி மீண்டும் சிவப்பு மாத்திரையும் இந்த ட்யூப் மாத்திரையும் சாப்பிடு" என்று கூறி அவரே பொட்டலம் மடித்து கொடுத்து "பத்து ரூபாய் எடு" என்பார். புதிய பேஷண்ட் என்றால் ஸ்டெத் வைக்கும் பொழுதே "பத்து ரூபாய் வெச்சுருக்கியா?" என்று கேட்டு உறுதி செய்து கொண்ட பின்தான் வைத்தியம் செய்வார். அறுபதுகளின் இறுதியிலும், எழுபதுகளிலும் இது அதிகம்தான். வியாதியை கண்டறிவதிலும், வைத்தியம் செய்வதிலும் நிபுணராக இருந்த பொழுதிலும் பண விஷயத்தில் அவர் காட்டிய கறார்தனத்தினால் மக்களிடம் அத்தனை நல்ல பெயர் சம்பாதிக்கவில்லை. ஆனால் இவர் வீட்டிற்கும் வந்து பார்ப்பார். 

எங்கள் அம்மாவுக்கும் இரண்டாவது அக்காவுக்கும் இவர்தான் தன்வந்திரி. எங்கள் அப்பாவுக்கு இவரை பிடிக்காது. "பணப்பிசாசு, எல்லோருக்கும் ஒரே மாத்திரையை கொடுக்கிறான்"  என்று தூற்றுவார். "எதைக் கொடுத்தால் என்ன? வியாதி குணமாகிறதா இல்லையா?" என்பது எங்கள் அம்மாவின் வாதம். இவருடைய பரிந்துரையின்படி என் பாட்டிக்கு சில சமயம் ஒரு கோர்ஸ் இன்ஜெக்ஷுன் செய்ய வேண்டி வரும். அப்போதெல்லாம் நானும் என் அக்காவும் எங்கள் வீட்டுக்கு வாடிக்கையாக வரும் அழகிரி என்பவரின் குதிரை வண்டியில் பாட்டியோடு செல்வோம். அந்த கிளினிக் வாசலில்ஒருவர் மசால் வடை போட்டுக் கொண்டிருப்பர். பாட்டி எங்களுக்கு தினமும் மசால் வடை சாங்ஷன் செய்வாள். 

தில்லை நகரில் இருந்த பொழுது எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு மருத்துவரிடம்தான் காண்பிப்போம். அவரிடம் எப்போதும் கும்பல் நிரம்பி வழியும். முதலில் போய் டோக்கன் ஒருவர் வாங்கிக்கொண்டு வந்துவிட்டால் எத்தனையாவது நம்பர் சென்றிருக்கிறது என்று கேட்டுக்கொண்டு அதற்கேற்றார் போல வீட்டிலிருந்து கிளம்பிச் செல்லலாம். இவரும் டயகனாஸ் செய்வதில் திறமை மிகுந்தவர்தான், ஆனால் இந்த இந்த வியாதியாக இருக்கலாம், அந்த வியாதியாக இருக்கலாம் என்று நம்மிடமே கூறி கொஞ்சம் பயப்படுத்தி விடுவார். பணம் கேட்கவே மாட்டார். இரண்டாவது முறை செல்லும் பொழுது ப்ரிஸ்கிரிப்ஷன் கொண்டு செல்லவில்லையென்றால் கோபம் வந்துவிடும். 

நாங்கள் ஸ்ரீரங்கத்திற்கு குடிபெயர்ந்த பொழுது நான் திடமாகி விட்டேன். என் கடைசி அக்காவுக்கு அடிக்கடி ஜுரம் வரும். அப்போதெல்லாம் அவளை ரங்கநகரில் இருந்த ஒரு மருத்துவரிடம் நான்தான் அழைத்துச் செல்வேன். அவர் தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியை க்ளினிக் ஆக மாற்றியிருந்தார். எப்போதும் கும்பல்தான். அங்கு போக வேண்டுமென்றால் நான் கையோடு ஒரு புத்தகத்தையும் எடுத்துச் செல்வேன். வரவு செலவுகளை கவனித்துக் கொண்ட அவருடைய அண்ணன்  நோயாளிகளிடம்," உங்கள் வீட்டில் இன்னும் அறுவது ரூபாய் தர வேண்டி இருக்கிறதே என்று சத்தமாக கேட்டு எரிச்சல் படுத்துவார்.  அங்கிருக்கும் கம்பவுண்டர் ஊசி குத்துவது மிகவும் வலிக்கும். 

இந்த டாக்டர் என்னையும் என் மூன்றாவது அக்காவையும் எப்போதும் குழப்பிக் கொள்வார். மாத்வரான இவர் தமிழ், கன்னடம், ஆங்கிலம் எல்லாம் கலந்து கட்டி பேசுவார். உப்பு ஜலத்தில் காகில் பண்ண வேண்டும் என்பதை,"டேக் லூக் வார்ம் வாட்டர், சுடக்கூடாது, புட் சால்ட், நன்னா மிக்ஸ் பண்ணி, வாயில் விட்டு ஹா ஹா ஹாக்கி துப்பிடுமா" என்பார். 

நாங்கள் மஸ்கட்டிலிருந்து விடுமுறைக்கு இந்தியா வரும்பொழுதெல்லாம் என் மகளுக்கு ஜுரம் வந்துவிடும். நான் கையோடு க்ரோசின் போன்ற மருந்துகள் வைத்திருந்து அவற்றை கொடுத்தாலும், சில சமயம் அதில் சரியாகாமல் பக்கத்தில் இருக்கும் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அப்படி பார்த்த மருத்துவர்களில் மறக்க முடியாதவர் அண்ணா நகரில் இருந்த ஒரு பெண் மருத்துவர். மருத்துவம் பார்த்ததில் குறை ஒன்றும் இல்லை. அனால் மருந்தை கொடுத்து விட்டு விளக்குவார் பாருங்கள்.. "இந்த மாத்திரை காலையில் மட்டும்தான் கொடுக்கணும், மத்தியானமும், இரவும் கொடுக்கக் கூடாது, இதை மதியம் உணவுக்கு பின் கொடுங்கள் இரவும், காலையிலும் கொடுக்க கூடாது, இந்த சிரப்பும், மாத்திரையும் இரவில் சாப்பிடணும், காலையிலும், மதியமும் கிடையாது, என்று குழப்பி விட்டு, கன்ஃபியூஸ் ஆகாதீர்கள்" என்று வேறு சொல்லுவார்.


எங்கள் வீட்டில் என் அண்ணாவுக்கும், எனக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இரண்டு பெரும் ஷார்ட் டெம்பெர்ட், இரண்டு பெரும் வேகமாக பேசுவோம், இரண்டு பெரும் சர்க்கரை நிறைய சாப்பிடுவோம். எங்கள் அம்மா, "நம்மாத்தில் காபிக்கு போட எவ்வளவு சர்க்கரை வாங்க வேண்டியிருக்கிறதோ, அதே அளவு தின்பதற்கும் வாங்க வேண்டியிருக்கிறது" என்பார்.  அதனாலோ என்னவோ சொத்தைப் பல்லும் அதிகம். இதன் காரணமாக சிறு வயதிலிருந்தே நிறைய டெண்டிஸ்டுகளிடம் பல்லைக் காட்டியிருக்கிறேன். இப்படி சொன்னால் ரசக்குறைவாக இருக்கிறதோ?, மண்ணையுண்ட கண்ணனைப் போல பல் வைத்தியர்கள் முன் வாயைத் திறந்திருக்கிறேன். அவர்களுக்கு பிரபஞ்சம் தெரிந்திருக்காது, என் சொத்தை பல்தான் தெரிந்திருக்கும்.  அவ்வப்பொழுது வலி வரும் பொழுதெல்லாம் அம்மா, "கிராம்பு வைத்துக் கொள்" என்பாள். ஓட்டையை அடைக்க முடியும் என்பது என் பெற்றோர்களுக்கு தெரியவில்லையோ என்னவோ? சொத்தைப் பல் பெரிதாகி வலி வந்து, தாங்க முடியாமல் போகும்பொழுது அப்பா ஒரு டாக்டரிடம் அழைத்துச் செல்வார். அப்போதெல்லாம் திருச்சியில் பல் டாக்டர்கள் மிகவும் குறைவு. அந்த பல் டாக்டர் வீடு மாடியில் இருக்கும். அங்கும் என்னை விட பெரிய பையன் ஒருவன் அலற, அந்த டாக்டர் அவனிடம் என்னை காண்பித்து,"பாரு உன்னை விட சின்ன பொண்ணு எப்படி சமர்த்தா இருக்கு, நீ கத்துகிறாய்?" என்று என்னை உதாரணம் காட்டியிருக்கிறார். இன்னும் என் டென்டல் கிளினிக் விசிட்டுகள் நிற்கவில்லை. 

என் மகன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது  கல்லூரிக்காக கால் பந்து விளையாடி கீழே விழுந்து கை  சுளுக்கிக்கொண்ட பொழுது ஒரு கார்ப்பரேட் மருத்துமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு ஆர்த்தோ டிபார்ட்மென்டின் தலைவரும், அந்த மருத்துவ மனையின் நிர்வாக இயக்குனருமான அந்த மருத்துவர் ஒரு எக்ஸெண்ட்ரிக் போல நடந்து கொண்ட விதம் எனக்கு வியப்பளித்தது. 

நான் மஸ்கட்டில் சந்தித்த மருத்துவர்கள் எல்லோருமே," நாம் சொல்வதை காது கொடுத்து கேட்பார்கள். நமக்கு வந்திருக்கும் வியாதி என்ன? அதற்கு என்ன மருத்துவம் செய்யப் போகிறார்கள் என்பதை நம்மிடம் தெளிவாக கூறுவார்கள். 

எப்படி இருந்தாலும் மருத்துவர்கள் நமக்கு அவசியமானவர்கள். இதை உணர்ந்ததால்தான் நாம் எத்தனை ஜோக்குகள் அவர்களை வைத்து எழுதினாலும், அவர்கள் அதை புன்னகையோடு ஏற்றுக் கொள்கிறார்கள். 


  
Related image

ஆபரேஷன் டேபிளில் படுத்திருந்த ஒருவர் டாக்டரிடம், டாக்டர் இந்த சர்ஜரிக்குப் பிறகு என்னால் நடக்க முடியுமா? என்று கேட்டார், "தாராளமாக" என்றார் டாக்டர்.
நோயாளி: "வயலின் வாசிக்க முடியுமா?"
டாக்டர்: "ஏன் முடியாது? நன்றாக வாசிக்கலாமே"
நோயாளி: "ஆச்சர்யமாக இருக்கே?"
டாக்டர்: "இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கு?"
நோயாளி: "எனக்கு வயலின் வாசிக்கவே தெரியாது"



















Tuesday, March 26, 2019

மூர்த்தி சிறிதானாலும்...

மூர்த்தி சிறிதானாலும்...


டீன் ஏஜ் இளைஞர்களும், யுவதிகளும் என்ன செய்வார்கள்? எப்போதும் காதில் இயர் ஃபோனை சொருகிக்கொண்டு, நடப்பார்கள், சதா செல்லை நோண்டிக்கொண்டே இருப்பார்கள். மால்களிலும், பப்களிலும் கடலை போடுவார்கள்.  ஆனால் இங்கே சில வித்தியாசமான இளைஞர்கள் மற்றும் யுவதிகள். 

அப்படி என்ன செய்து விட்டார்கள் அவர்கள் என்கிறீர்களா?  முதலில் கர்விதா குல்ஹாதி என்னும் 19 வயது பெண்னின் செயலைப்  பார்க்கலாம்.

"2015இல்   பெங்களூரில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவிய பொழுது,  உலகம் முழுவதும் வீணாகும் தண்ணீரில், கணிசமான அளவு 
உணவகங்களில் குடிக்காமல் மீதி வைக்கப்படும் தண்ணீர் ஆகும் என்பது தெரிந்தது. ஒருவருக்கு  வைக்கப்பட்ட ஒரு முழு க்ளாஸ் நீரில் அவர் சிறிதளவு குடித்து விட்டு மிச்சம் வைக்கும் நீரை அப்படிய கொட்டி விடுவார்கள் இதன் அளவு ஏறத்தாழ 14 மில்லியன் லிட்டர்  என்னும் செய்தி அறிந்து இதை குறைந்த பட்சம் பெங்களூரில் மட்டுமாவது தடுக்க முடியுமா என்று நினைத்து, அதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று என் தோழர்களோடு 'WHY WASTE' நிறுவனத்தை தொடங்கினேன்.  அதன் முதல் முயற்சியாக ஆரம்பித்ததுதான் 'GLASS HALF FULL' என்னும் திட்டம்." 

"இதற்காக பெங்களூரில் இருக்கும் பல உணவகங்களுக்குச் சென்று வாடிக்கையாளர்களின் டம்பளர்களில் பாதியளவு மட்டும் நீர் நிரப்புமாறு வேண்டுகோள் விடுத்தோம், மிகவும் சிறியவர்களாக இருந்த எங்கள் பேச்சை  கேட்கத் யாரும் தயாராக இல்லை, என்றாலும் விடாமல் முயற்சி செய்து இப்போது தேசிய உணவகங்களின் அமைப்போடு இணைத்துள்ளோம். அதன்கீழ் ஒரு லட்சம் உணவகங்கள் வருகின்றன. இதனால் எங்கள் குறிக்கோள் எளிதாக நிறைவேறும் என்று நினைக்கிறோம்." 

பத்தொன்பது வயதாகும் கர்விதாவின் 'வொய் வேஸ்ட்'? நிறுவனத்தில் எல்லோருமே 20 வயதிற்கு உட்பட்டவர்கள்தானாம்.

அனு வர்மா என்னும் ஹரியானவைச் சேர்ந்த  பெண் 500 குழந்தை தொழிலாளர்களை படிப்பை தொடர உதவியிருக்கிறார். இவர் வகுப்புத் தோழிகள் வீட்டு வேலைகளுக்குச் செல்வதால் சரியாக படிக்க முடியமால் இருந்ததால் அது குறித்து பெற்றோர், ஆசிரியர் சந்திப்பில் பேசச் சொன்னாராம். தங்கள் குழந்தைகள் படிப்பில் மிகவும் பின்தங்கி உள்ளனர் என்பதை கேட்ட அந்தப் பெண்களின் பெற்றோர்கள் அதை ஒரு  மானப் பிரச்னையாக கருதி தங்கள் குழந்தைகளை வீட்டு வேலைகளுக்கு அனுப்பாமல் படிப்பில் மட்டும்  கவனம் செலுத்த வைத்தார்களாம்.  இரண்டு பெண் குழந்தைகளுக்கு உதவ முடிந்தது போல் மற்ற பெண் குழந்தைகளுக்கும் உதவலாமே என்று தன்  பெற்றோர்களுக்குத் தெரியாமல் கிராமத்தில் பல பெற்றோர்களை சந்தித்து பேசி அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பச்செய்தாராம்.

அவருடைய என்.ஜி.ஓ.வான 'புலன்ட் உடான்' உதவியால்  இப்போது இவர் கிராமத்தில் குழந்தை தொழிலாளர்கள் கிடையாதாம். ஹரியானாவை குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக்க வேண்டும் என்பதுதான் பதினாரே வயதான இவர் கனவாம். பதினாறு வயதினிலே என்ன ஒரு ஒரு சிந்தனை பாருங்கள்!

சம்பா குமாரி என்னும் ஜார்கண்டை சேர்ந்த பதினான்கு வயது பெண் மைக்கா சுரங்கத்தில் வேலை பார்த்து வந்தார். பஜ்பன் பச்சாவோ அந்தோலன்(BBA) என்னும் என்.ஜி.ஓ.உதவியால் படிக்கும் வாய்ப்பை பெற்றார். இவர் தந்தை முதலில் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை, அவருடைய சகோதரர்கள் தந்தையோடு வாதாடி இவரை படிக்க சொன்னார்களாம். பால பஞ்சாயத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு ஜெயித்த இவர்,உள்ளூர் தலைவர்களோடு சேர்ந்து குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்கும், குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு வருகிறாராம்.

பெண்கள் கொஞ்சம் தீவிரமாக இருக்க ஆண்கள் மக்களின் மென்மையான உணர்வுகளுக்காக சில விஷயங்களை செய்கிறார்கள்.

ஆரியமான் லஹோட்டியா என்னும் கொல்கத்தாவை சேர்ந்த பதினேழு வயது  இளைஞர் குழந்தைகளுக்காக 'டாய் பேங்க்'(toy bank)ஒன்றை தன் வயதையொத்த உறவினரோடு சேர்ந்து   துவங்கி யிருக்கிறார்.  

"எனக்கு 14 வயதும் என் அத்தை மகளுக்கு 16 வயதும் இருந்த பொழுது, தான் விளையாடி அலுத்த தன்னிடம் இருக்கும் நல்ல பொம்மைகளை பிறருக்கு அளிக்க விருப்புகிறவர்களுக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் எங்கே, எப்படி துவங்குவது என்று தெரியவில்லை. முகநூலில் உங்களிடம் நல்ல நிலையில் உள்ள பொம்மைகள் உள்ளதா? எங்களுக்கு தெரிவியுங்கள் என்று ஒரு விளம்பரம் கொடுத்தோம். அப்படி இருக்கும் பட்சத்தில் அதை எங்கே சேர்ப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டோம். உள்ளூர் என்.ஜி.ஓ.க்கள், மற்றும் அனாதை ஆஸ்ரமங்கள் இவற்றோடு தொடர்பு கொண்டு இதுவரை 15000 பொம்மைகளை விநியோகித்துள்ளோம். பிறந்த குழந்தைகளுக்கான பொம்மைகளிலிருந்து , டீன் ஏஜ் பருவத்தினருக்கான பொம்மைகள் வரை இதில் அடக்கம். இந்தியா முழுவதிலும் எங்களுக்கு ஏழு சென்டர்கள் இருக்கின்றன. விரைவில் இன்னும் இரண்டு நகரங்களில் இரண்டு சென்டர்களை துவங்க உள்ளோம்." என்கிறார். இதை யாரும் என்ன விளையாட்டுத்தனமா இருக்கு? என்று கூறி விட முடியாது. 

ஹைதராபாத்தை சேர்ந்த இருபத்தியொரு வயதாகும் சபி கான் என்னும் இளைஞர் தன பாக்கெட் மணியைக் கொண்டு நாய்கள் காப்பகம் ஒன்றை துவங்கி உள்ளார். 

"பிராணிகள் மீது உள்ள பிரியத்தால் பதிமூன்று வயதிலிருந்தே மிருகங்களின் நலனுக்காக போராடும் என்.ஜி.ஓ. ஒன்றில் தொண்டாற்றி வந்தேன். எனக்கு 16 வயது ஆனா பொழுது, கவனிக்கப்படாத, மற்றும் பாதிக்கப்பட்ட நாய்களுக்கான சரணாலயம் ஒன்றை தொடங்க வேண்டும் என்று தோன்றியது. என் 18வது பிறந்தநாள் அன்று, 'A PLACE TO BARK' என்னும் நிறுவனத்தை தொடங்கினேன். 

எங்கள் வீட்டிற்கு அருகிலேயே ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து அங்கு கவனிக்கப்படாத, தாக்கப்பட்ட நாய்களை வைத்து பராமரிக்க தொடங்கினேன். தினசரி காலை 4 மணிக்கு எழுந்து ஏதாவது நாய் தெருவில் அடிபட்டு கிடக்கிறதா என்று பார்க்க கிளம்புவேன். பின்னர் பள்ளிக்கு செல்லும் முன் அவைகளுக்கு உணவளித்து விட்டு செல்வேன். எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்த பொழுது, இவை பாதிக்கப் பட்டதால் என் காப்பகத்தை கல்லூரிக்கு அருகிலேயே வைத்துக் கொள்ள அனுமதி கேட்டேன், அவர்களும் என் தீவிரத்தை உணர்ந்து அதற்கு அனுமதி அளித்தனர். என்று கூறும் இவர், விரைவில் ஹைதராபாத்தில் விலங்குகளுக்கான சரணாலயம் ஒன்றை அமைக்க இருக்கிறாராம். 

நல்லது செய்ய வயது ஒரு தடையல்ல என்பதைத்தானே இவர்கள் உணர்த்துகிறார்கள்?  


Courtesy: Times of India

Wednesday, March 20, 2019

மசாலா சாட்

மசாலா சாட் 


படித்தவைகளில் பிடித்தவை:


*பிரசவத்திற்கு இலவசம் என்று   எழுதப்பட்ட ஆட்டோக்களை பார்த்திருப்போம். பிரசவமே இலவசமாக பார்க்கப்படும்  என்கிறார் புனேயைச்சேர்ந்த ஒரு மருத்துவர். ஒரே ஒரு கண்டிஷன் பிறக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருக்க வேண்டும். அந்த பட்சத்தில் பிரசவக்கட்டணம் மட்டுமல்ல, முழு மருத்துவ செலவுகளும் இலவசம். இதைச் செய்பவர் புனேயை சேர்ந்த டாக்டர் கணேஷ். இதற்கு இவர் சொல்லும் காரணம், பெண் சிசுக்கொலை தடுக்கப்பட வேண்டும் என்பது.

"பெண் சிசுக்கொலைகளால் இன்று ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு தொள்ளாயிரத்து பதினான்கு பெண்களே இருக்கின்றார்கள். ஒரு ஆஸ்பத்திரியில், "ஒரு நோயாளி இறந்து விட்டான்  என்று சொல்வதை விட,  கடினமான செயல் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று சொல்வது. ஆண் குழந்தை பிறந்தால் குடும்பமே அதை கோலாகலமாக கொண்டாடும், ஆனால் பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று சொன்னால் அத்தனை பெரும் வெளியேறி விடுவார்கள்" என்று கூறும் இவர் தன் மருத்துவமனையில் பெண் குழந்தைகள் பிறகும் பொழுதெல்லாம்,  குடும்பத்தினர் அந்த குழந்தையை கொண்டாடும் விதமாய் கேக் வெட்டி, பிறந்த நாள் பாட்டு பாடி  உலகிற்கு அந்த குழந்தையை வரவேற்க ஏற்பாடு செய்கிறாராம். இதுவரை அவர் மருத்துவமனையில் 464 பெண் குழந்தைகள் பிறந்துள்ளனவாம். வாழ்க நீ எம்மான்! என்று வாழ்த்த தோன்றுகிறது. 

#இது ஒரு வகை என்றால், இன்னொரு அசத்தல் செய்தி சிந்து என்னும் சிறுமியைப் பற்றியது. சோளிங்கர் திருத்தணி நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ அருட்சாய் மெட்ரிக் பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவியான சிந்து என்னும் மாணவி கண்களை கட்டிக்கொண்டு ரூபாய் நோட்டுகளின் நிறம் மற்றும் அதில் உள்ள எங்களை சரியாக சொல்கிறாளாம். மேலும் புத்தகத்திற்குள் என்னென்ன தலைப்பில் பாடங்கள் உள்ளன என்பதையும் தெரிவிக்கிறாளாம். இதெல்லாம் எப்படி சாத்தியமாகின்றன? மூன்றாவது கண், அல்லது ஃபோகஸ் மைண்ட் என்னும் பயிற்சிதான் காரணமாம். 

மனதை ஒரு நிலைப்படுத்தும் பயிற்சி போன்ற இது மூன்று கட்டங்களை கொண்டதாம். முதலில் கண்களைக் கட்டிக்கொண்டு, தொடுதல்,வாசனை, சப்தம் இவை மூலம் ஒரு பொருளை உணரும் பயிற்சி, பிறகு ஒரு பேப்பரில் நாம் எழுதினால், அதை அப்படியே வாசிக்கும் பயிற்சி, இதைக் கடந்தால், சிறப்பு பயிற்சி, அதில் கண்களை கட்டிக் கொண்டு செஸ் விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது போன்ற பயிற்சிகள் அளிப்பார்களாம். 

இதில் சேரும் சிலர் தொடர முடியாமல் பாதியில் விட்டு விட்டு சென்று விடுகிறார்களாம், காரணம் இந்த பயிற்சி எடுக்க சில நிபந்தனைகள் உண்டு, முதலாவது, அசைவம் சாப்பிடக் கூடாது, இரண்டாவது தொலைக்காட்சி பார்க்கக்கூடாது, மூன்றாவது மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது. நமக்கெல்லாம் கொஞ்சம் கஷ்டம் இல்லையா?

அடுத்த செய்தி அநேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். வாட்ஸாப்பில் வந்து கொண்டிருக்கிறதே. எ.பி. வாட்சாப்பிலும் வந்தது. இருந்தால் என்ன? நல்ல விஷயங்களை மீண்டும் மீண்டும் சொல்லவதில் தவறில்லையே?

பால் கவர்களை கட் பண்ணும் முறை பற்றிதான்.

நாம் சாதாரணமாக கட் பண்ணுவது போல் மூலையில் கட் பண்ணி அந்த சிறு துணுக்கை கீழே போடும்பொழுது அது டன் கணக்கில் சேர்ந்து விடுகிறதாம், அழிப்பதும் கடினமாம் எனவே அப்படி செய்யாமல் நீள் வாக்கில் கேட் பண்ணுங்கள் என்கிறார்கள். இதை நாம் பால் பாக்கெட்டுகளுக்கு மட்டுமல்லாமல் எல்லா பிளாஸ்டிக் கவர்களுக்கும் பின்பற்ற வேண்டும்.

தவறான முறை











சரியான முறை 



 வாட்ஸாப்பில் வந்தது:


28.3.19 தேடியிட்ட குமுதம் சிநேகிதியில் வெளியாகியுள்ளது.
# பிப்ரவரி 16-28 மங்கையர் மலரில் வெளியாகியுள்ளது.