கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, June 8, 2022

அலைக்கழித்த ஆட்டவா!

 அலைக்கழித்த ஆட்டவா!

மே.23 விக்டோரியா தினம் என்பதால் கனடாவில் அன்று விடுமுறை. அது எந்த கிழமையில் வந்தாலும் லாங் வீக் எண்ட் கிடைக்க வேண்டும் என்பதற்காக 23ம் தேதியை தொடர்ந்து வரும் திங்கள் கிழமை விடுமுறை அளிக்கப்படுமாம். இந்த வருடம் மே 21,22,23 அப்படிப்பட்ட விடுமுறை நாட்களாக அமைய

ஆட்டவாவிற்கும், மாண்ட்ரியாலுக்கும் சென்று வரலாம் என்று என் மகளும், மருமகனும் முடிவுசெய்து ஹோட்டல் அறைகள், பார்க்க வேண்டிய இடங்களில் நுழைவுச்சீட்டு போன்ற முன்பதிவுகளை ஒரு மாதத்திற்கு முன்பே செய்து விட்டனர். 

21ம் தேதி சனிக்கிழமை காலை கிளம்ப வேண்டும். வெள்ளி மாலை முதல் என் இடது காலில் வாயு பிடிப்பு போல வலிக்க ஆரம்பித்தது. காலை நீட்டினால் சரியாகும் என்று என் மகள் சில பயிற்சிகளை கூறினாள். அவைகளை செய்ததும் வலி பொறுக்க முடியாத அளவிற்கு அதிகமாகி விட்டது. நான் பட்ட அவஸ்தையைப் பார்த்த என் மாப்பிள்ளை டூர் ப்ரோகராமை கான்சல் செய்து விடலாம் என்றார். 

வலியை குறைக்க மாத்திரை போட்டுக் கொண்டு என் மகளை விட்டு பிராணிக் ஹீலிங் செய்யச் சொன்னேன். அதன் பின்னர் வலி நன்றாக குறைந்து விட மறுநாள் கிளம்பினோம்.

இந்த வசந்த காலத்தில் ஆட்டவா வில் துலிப் ஃபெஸ்டிவல் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழா இந்த வருடம் மே 13 முதல் 23 வரை பதினோரு நாட்கள் நடந்தது. ஒரு பூங்கா முழுவதும் கலர் கலராக துலிப் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த வருடம் (2022) எழுபதாவது வருடமாகிய பிளாட்டின விழாவாம்.

துலிப் மலர்கள் நட்பிற்கான மலர்களால் அறியப்படுகின்றன. இதற்கு காரணம் இரண்டாம் உலகப் போரின் பொழுது ஜெர்மனிய படையெடுப்பில் தப்பி கனடாவிற்கு அடைக்கலமாக வந்த டச்சு அரசு குடும்பம் இரண்டு வருடங்கள் இங்கே தங்கி யிருக்கிறார்கள். பிறகு நாடு திரும்பியதும் தங்கள் அன்பையும், நட்பையும் வெளிப்படுத்தும் விதமாக 100,000 துலிப் கன்றுகளை டச்சு அரசி கனடாவிற்கு அனுப்பி வைத்தாராம். இன்றளவும் அந்த வழக்கம் தொடர்கிறதாம். டௌஸ் ஏரிக்கரையை ஒட்டியிருக்கும் கமிஷனர் பார்க்கில்தான் இந்த துலிப் திருவிழா நடைபெறுகிறது. 

இதற்கு நுழைவு கட்டணம் கிடையாது. ஆனால் காரை நிறுத்த இடம் கிடைக்க வேண்டுமே என்று கவலையாக இருந்தது. நல்ல வேளை அதிகம் நடக்கத் தேவையில்லாமல் காரை நிறுத்த முடிந்தது. 





தோட்டத்திற்குள் பtல வண்ண மலர்கள், பல வண்ண மனிதர்கள். துலிப் மலர்களுக்கு நடுவே புகைப்படம் எடுத்துக் கொள்ள ஏதுவாக பாத்திக்கு ஊடாக வழி அமைத்து கொடுத்திருக்கின்றனர். 

ஆங்காங்கே உணவு கடைகள், புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொள்ள தோதாக அமைப்புகள். குழந்தைகள் ஏன் பெரியவர்களும் விளையாட பெரிய அளவில் செஸ் போர்ட், சைனீஸ் செக்கர்ஸ் போன்ற உபகரணங்கள். 


இரவில் வாண வேடிக்கைகளும் இருக்குமாம்.

பூங்காவில் நாங்கள் நடக்கும் பொழுது நல்ல வெய்யில். தண்ணீர் குடித்து மாளவில்லை. மதிய உணவை ஆர்டர் செய்து வாங்கிக் கொண்டு காரிலேயே சாப்பிட்டோம். ஆலு பராத்தாவும், வெஜிடபிள் பிரியாணியும், ராய்த்தாவும் ருசியாகவே இருந்தன. 

அதன் பிறகு அலெக்ஸாண்ட்ரா பாலத்தில் நடந்து விட்டு ரைடு கால்வாயில்(Rideau canal) படகுசவாரியை முடித்துக் கொண்டு ஹோட்டலுக்கு சென்று கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொண்டு பிறகு பைவார்ட் மார்க்கெட் செல்லலாம் என்று ஏற்பாடு. ஆனால் எங்கள் திட்டத்தை தவிடு பொடியாக்கினார் வருண பகவான்.


- தொடரும்





Saturday, June 4, 2022

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

மனிதர்கள், விலங்குகள் பறவைகள், தாவரங்கள் எல்லாவற்றிர்க்கும் அழகு இருப்பது போல் ஊர்களுக்கும் அழகு உண்டு. 

ஒரு இடம் இயற்கையாக அமைந்த விதத்தால் உண்டாகும் அழகு, நிர்மாணிக்கப்பட்ட விதத்தில் உண்டாகும் அழகு என இரண்டு வகை அழகுகள் உண்டு. 

மலை வாசஸ்தலங்கள் இயற்கை அழகில் மிளிரும். அப்படி பல மலைகள் இருந்தாலும் ஊட்டியைத்தானொ 'மலைகளின் ராணி' என்கிறோம். அதன் அழகு அப்படிப்பட்டது. 

நான் பார்த்தவரை அழகான ஊர்கள் என்றால் திருச்சி, மதுரை, புனே, மைசூர், டில்லி, மஸ்கட் இவைகளைச் சொல்வேன். 



இப்போது திருச்சிக்கு செல்லும் பொழுதெல்லாம் நாம் பிறந்து வளர்ந்த திருச்சி இதுவல்ல என்று தோன்றும். என் சிறு வயதில் நகரத்தின் நடுவிலேயே வயல்கள் இருக்கும். இப்போது கரூர் டர்னிங்கிலிருந்து பிரிந்து ஒரு ரோடு தில்லை நகருக்கு முன்னால் வந்து சேருகிறதே அவையெல்லாமே வயல்கள்தான். காவேரிப்பாலம் தாண்டி விட்டால் வயல்களும், தோப்பும் துரவுமாக ஒரே பசுமை!

கோட்டை ஸ்டேஷனுக்கு செல்லும் பாதையில் நரிக்குறவர்களின் கூடாரம் இருக்கும். அங்கு இரவில் வெட்டவெளியில் அடுப்பு மூட்டி அவர்கள் சமைக்கும் நெருப்பு, மரத்தில் கட்டப்பட்ட தூளிகளில் ஆடும் குழந்தைகள்... ஒரு ஓவியம் போல இன்னும் என் மனதில் இருக்கிறது. 

ஒரு நகரத்தின் சௌகரியம், கிராமத்தின் அமைதி, அழகு இதுதான் திருச்சியாக இருந்தது. நவீனமயமாக்குதலில் இவை எல்லாம் மாறி விட்டன. 




பின்கொசவம் வைத்த புடவை கட்டிக்கொண்டு, தலையை பிச்சோடா போட்டு, பூவைத்துக் கொண்டிருக்கும் மாத்வ பெண்மணியைப் போன்ற அழகு மதுரைக்கு என்று லா.ச.ரா. எழுதியிருப்பார்.   எனக்கு மைசூர் அப்படித் தோன்றும். கோவிலை மையமாகக் கொண்டு வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கப்பட்ட எதினிக் சிட்டியான மதுரை ஸ்மார்ட் சிட்டி ஆவதற்காக இப்போது நிறைய மாறி விட்டது என்கிறார்கள். மைசூர் மாறியிருக்காது என்று நினைக்கிறேன். 



பெங்களூர், புனே, டில்லி எல்லாமே பெருகி வரும் மக்கள் தொகை, அதிகரித்து வரும் வாகன நெரிசல் இவைகளை சமாளிக்க மேம்பாலங்கள் கட்டவும், மெட்ரோ ரயிலுக்காகவும் பல மரங்களை இழந்து புது கோலத்தை ஏற்றிருப்பது காலத்தின் கட்டாயம். எப்படி இருந்தாலும் அழகான ஊர்கள்தான். 

வெளிநாடுகளில் மக்கள்தொகை குறைவாக இருப்பதாலோ என்னவோ பழைய அழகை இழக்காமல் வளர்வது சாத்தியமாகிறது. அங்கெல்லாம் சில இடங்களில் நகரம் நியூ சிட்டி, ஓல்ட் சிட்டி என்று இரண்டு பகுதிகளாக இருக்கும். ஓல்ட் சிட்டி பழமையை அப்படியே மெயின்டெய்ன் பண்ண, நியூ சிட்டி அடுக்கு மாடி குடியிருப்புகளோடு நவீனமாக இருக்கும். 

 
கண்டாப் பீச் - மஸ்கட் 

பாலைவனமான மஸ்கட், துபாய் போன்றவை பார்த்து பார்த்து அழகூட்டப்பட்டிருப்பது சந்தோஷம் அளிக்கும் விஷயம். ஓமானில் மன்னராக இருந்த சுல்தான் காபூஸ் அவர்களுக்கு அழகுணர்ச்சி அதிகம். பால்கனியில் 
கொடியில் தொங்கும் துணிகள் பார்வைக்கு நன்றாக இருக்காது என்பதால் அங்கு கலர்கலராக துணிகளை பால்கனியில் உலர்த்த முடியாது. அதே போல் ஏ.சி.யிலிருந்து வெளியேறும் தண்ணீர் சுவற்றில் வழிந்து கறை உண்டாக்கு -வதையும் அனுமதிக்க மாட்டார்கள்.  அங்கிருக்கும் கடற்கரைகளையும் மிக அழகாக்கி விட்டார்கள். 
 






சமீபத்தில் தன் அழகால் என்னைக் கவர்ந்த ஊர் மாண்ட்ரியால். அங்கிருக்கும் கலைநயமிக்க பிரும்மாண்டமான கட்டிடங்களும், வயலும், ஆறும் மனதை கொள்ளை கொண்டன. 

முகநூலில் பெண் சக்தி என்னும் குழுவில் 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' என்ற தலைப்பில் கட்டுரை கேட்டிருந்தார்கள், அதற்கு நான் எழுதிய கட்டுரை இது.

Sunday, May 29, 2022

சூடாக ஒரு கப் டீ!

சூடாக ஒரு கப் டீ!


காலை எழுந்தவுடன் சூடாக அருமையான ஃபில்டர் காபி குடித்த வாயோடு மத்யமரில் உமா சஷிகாந்தின் டீ பற்றிய பதிவை குடித்தேன் , சாரி ஃபார் த  டங்க் ஸ்லிப் படித்தேன். சிறிது நேரத்திலேயே அருணா ரகுராமனின் டீ பற்றிய பதிவு. என் பங்கிற்கு ஒரு கப் சாய்!

என்ன இருந்தாலும்  மதராஸிகளிடம் காபியா? டீயா? என்று கேட்டால் காபி என்றுதான் கூறுவோம். திராவிட மாடல்! அதுவும் வீட்டில். மாடு இருந்து, கறந்த பாலில் காபி குடித்து பழகிய என்னைப் போன்றவர்கள் காபி பிரியர்களாகத்தானே இருக்க முடியும்?

ரயில் பயணங்களில் தமிழ் நாடு எல்லையைத் தாண்டினால் காபி கிடைக்காது. திரும்பி வரும் பொழுது "காபி காபி.." என்னும் குரல் கேட்டால் இன்பத்தேன் வந்து பாயும் காதினிலே.

எங்கள் வீட்டில் டீ வாங்கியதே இல்லை. அப்போதெல்லாம் டீ என்றால் ஒரு சின்ன சாஷேயில் கட்டி தொங்கவிடப் பட்டிருக்குமே அதுதான். எங்கள் உறவில் இரண்டு பெண்மணிகள் மஹா பெரியவரின் பக்தைகள். அவர் காபி குடிக்க கூடாது என்று சொன்னதால் காபியை துறந்து டீயை பற்றிக் கொண்டவர்கள்.  அவர்கள் மற்றவர்கள் வீடுகளுக்குச் செல்லும் பொழுது டீ பாக்கெட்டுகளோடு டீ வடிகட்டியும் கொண்டு வந்து விடுவார்கள்.

என் மூன்றாவது அக்கா கருவுற்றிருந்த பொழுது அவளுக்கு காபி பிடிக்கவில்லை, டீ குடிப்பாள். அப்போதுதான் எங்கள் வீட்டில் டீ வாங்க ஆரம்பித்தோம். எனக்கும் இதே கதை.  கருவுற்றிருந்த பொழுது காபி ஒரு துளி கூட உள்ளே தங்காது. அப்போதுதான் டீ குடிக்க ஆரம்பித்தேன். இருந்தாலும் நான் போடும் டீ எனக்கு அவ்வளவு திருப்தி தந்ததில்லை. பலவிதமான காம்பினேஷன்கள் முயற்சி பண்ணினேன். 

மஸ்கட்டில் இருந்த பொழுது சிலோன் டீ என்று கிடைக்கும் பிராண்ட்தான் என் சாய்ஸ். இந்தியா திரும்பிய பிறகு நட்ஸ் & ஸ்பைஸில் கிடைக்கும் ஒரு பிராண்ட் டீ நான் போட்டால் கூட நன்றாக இருக்கும். 

ஒரு முறை பெங்களூர் மால் ஒன்றில் சாய் பாய்ண்ட் என்னும் டீக்கடையில் என் மகன் இஞ்சி டீ வாங்கித் தந்தான். லோட்டா போன்ற பெரிய கப்பில் வந்த சூடான, காரமான அந்த டீயை குடிப்பதற்குள் வியர்த்து, விறுவிறுத்து விழி பிதுங்கினேன்.

டீயோடு கொஞ்சம் பூஸ்ட் அல்லது கோகோ சேர்த்த பூஸ்ட் டீ எனக்கும் என் மகளுக்கும் பிடிக்கும். 

தோழி ஒருத்தி லைட்டான டீ டிகாஷனில் பனங்கல்கண்டு சேர்த்து தந்த பிளாக் டீ அருமையாக இருந்தது. நானும் அவ்வப்பொழுது அந்த பிளாக் டீ குடிப்பதுண்டு. அதில் புதினா இலைகளும் போடலாம்.

லெமன் டீ குடித்தால் உடல் இளைக்குமாம். கொழுப்பு குறைகிறதோ இல்லையோ, சில நாட்கள் கேரா இருக்குமே, அப்போது லெமன் டீ நல்ல பரிகாரம். 

டில்லியில் எங்கள் சம்பந்தி வீட்டில் வேலை செய்யும் பெண்மணி டீயில் கொஞ்சமாக உப்பு சேர்த்து அருந்துவார்.

டீயை குடிப்பதற்கு மட்டுமல்லாமல், தலைக்கு ஹேர் பேக் போடவும் பயன்படுத்துவார்கள்.

சரித்திரத்தில் ஒரு முக்கியமான சம்பவம் அமெரிக்க சுதந்திர போரோடு சம்பந்தப்பட்ட பாஸ்டன் டீ பார்ட்டி என்னும் நிகழ்வு.


ஜப்பானிய கலாசாரத்தில் சனோயூ அல்லது சாடோ எனப்படும் க்ரீன் டீ தயாரித்து வழங்கும் தேநீர் சடங்கு ஒரு முக்கியமான விஷயம். இதற்கு நிழலில் வளர்க்கப்பட்டு, நிழலிலேயே உலர்த்தப்பட்ட மாச்சா என்னும் பச்சை நிற தேயிலைத்தூளே பயன்படுத்தப் படும். 

கனடாவில் டொரொண்டோவில் ஒவ்வொரு வருடமும் ஜனவரியில் தேநீர்த் திருவிழா கொண்டாடப்படுமாம். பலவிதமான தேநீரை அங்கே சுவைக்க முடியுமாம். ஆனால் மூன்று வருடங்களாக கொரோனா காரணமாக அந்நிகழ்ச்சி நடைபெறவில்லை. கனடாவில் சில மால்களில் 'சாய் டீ' என்ற அறிவிப்பை பார்த்தேன். இங்கே இருப்பவர்கள் தேநீரில் பால் சேர்க்காமல்தான் அருந்துவார்கள். பால்சேர்த்த இந்திய தேநீர் தான் சாய் டீ என்ற விளக்கம் கிடைத்தது.

நம் நாட்டில் அஸ்ஸாமிலும் நவம்பரிலிருந்து ஜனவரிக்குள் இப்படி ஒரு டீ ஃபெஸ்டிவல் உண்டு.

பிரிட்டிஷ் கலாசாரத்தில் முக்கியமானது 'ஹை டீ'. இதில் ஸ்பைஸி உணவுகளோடு டீ பரிமாறப்படும். உணவை விட அரட்டையும், உரையாடலும் முக்கியம் என்றாலும் எந்த விதமான பாத்திரங்களை பயன்படுத்தவேண்டும், எப்படிப்பட்ட மேஜை விரிப்புகள், திரைச்சீலைகள் இருக்க வேண்டும் என்று  பலவித கோட்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு தங்கள் அந்தஸ்தை வெளிப்படுத்தும் விஷயமாக ஆனது. 

ஒரு கப் சாறோடு உலகத்தையே சுற்றி  விட்டேன் போலிருக்கிறது. 



என் தளத்திற்கு வருகை தந்து படிக்கப் போகும் அனைவருக்கும் நன்றி. பிளாக்கர் பிரச்சனையினால் கருத்திட முடியவில்லை. மன்னிக்கவும் 🙏🙏


Friday, May 20, 2022

திக் திக் நிமிடங்கள்

 திக் திக் நிமிடங்கள்

வாழ்க்கை என்பது அனுபவங்களால் ஆனது. சிறியதும், பெரியதும், நல்லதும் கெட்டதுமான அனுபவங்களே வாழ்க்கை. நல்ல அனுபவங்கள் மகிழ்ச்சியையும், மோசமான அனுபவங்கள் படிப்பினையையும் தருகின்றன. அன்று நான் ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். 

இது நாங்கள் சென்னையில் ராமாபுரம் தில் இருந்த பொழுது நடந்த நிகழ்ச்சி.  என் பெரிய பேத்திக்கு அப்போது ஒன்றரை வயத. சென்னையில் ஒரு முதியோர் இல்லத்தில் இருந்த என் நாத்தனாரின் கணவர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அவருக்கு செவித்திறன் மிகவும் குறைவு. 

அன்று காலை மணி ஒன்பதரை இருக்கும். திடீரென்று மின்சாரம் துண்டிக்கப் பட்டது. ஒரு வேளை பராமரிப்புக்காக காலை ஒன்பது மணி  முதல் மாலை ஐந்து மணி வரை நிறுத்தப் பட்டிருக்கிறதோ? என்று முதல் நாள் செய்தி தாளை எடுத்து பார்த்ததில் அப்படி எதுவும் இல்லை. அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் மின்சாரம் இருப்பது தெரிய வந்தது. ஏன் நம் வீட்டில் மட்டும் இல்லை என்று குழம்பிய பொழுது, மூன்றாம் மாடியில் வசிக்கும் சிறுமி, காசு கட்டிடீங்களா ஆண்டி? எங்க வீட்டுல கூட காசு கட்டல என்று கரெண்டை கட் பண்ணிட்டாங்க." என்றாள். 

"கட்டியாச்சே.." என்றதும், ஆன் லைனில் கட்டுகிறீர்களா? அப்படீன்னா ரெபரென்ஸ்  நம்பர் கேக்கறாங்க. வாசலில் செகூரிடி அருகில் ஒரு ஈ.பீ. ஆபீஸ் ஆள் உட்கார்ந்திருக்கார் சீக்கிரம் போய் காட்டுங்க" என்றாள்.(தெளிவுதான்)

மின்சார கட்டணம், தொலை பேசி கட்டணம் எல்லாவற்றையும் என் மகன்தான் கட்டுவது வழக்கம். அவன் இப்போது வெளியூர் செல்வதற்காக விமான நிலையத்தில் அல்லவா இருப்பான். என்ன செய்வது? என்று குழம்பினேன். 

என் மகள் அவனை கை பேசியில் அழைத்துப் பார்க்கலாம் என்று முயற்சி செய்ய, ஏதோ ஒரு நல்ல காலம் அவன் பதில் அளித்தான். என் மகள் அவனுக்கு விவரங்களிச் சொல்லி, TNEB receipt ஐ அவள் மெயில் ஐடிக்கு அனுப்ப சொல்ல அவனும் அப்படியே செய்ய, அதை ஈ.பீ. அலுவலகத்தில் சென்று காண்பிக்க உடனே மின்சாரம் வந்து விட்டது. இதுதான் என் அனுபவம் என்று அவசரப் பட்டு முடிவுக்கு வந்து விடாதீர்கள். முக்கியமான விஷயம் இனிமேல்தான் வருகிறது. 

என் மகளின் ஆதார் அட்டையில் அவளுடைய கை பேசி எண் தவறாக குறிக்கப் பட்டிருக்கிறது. அதை திருத்த வேண்டுமென்றால் குறிப்பிட்ட வார்டின் கார்பரேஷன் கிளை அலுவலகத்திற்கு நேரே சென்றுதான் விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்று கூறப் பட்டதால் அலுவலகத்திற்கு விடுப்பான நேற்று அந்த வேலையை முடித்து விடலாம் என்று அதற்காக கிளம்பிக் கொண்டிருந்தாள். இடையில் ஏற்பட்ட மின்சார தடையால் தன்னுடைய கைப் பையை எங்கள் வீட்டிலேயே வைத்து விட்டு சென்று விட்டாள். அதையும், அவளின் டூ வீலர் சாவியையும் கீழே கொண்டு வந்து தருமாறு என்னிடம் கூறினாள். 

அப்போதுதான் அடுப்பில் குக்கரை வைத்திருந்த நான் அவள் கேட்ட பொருள்களை எடுத்துக் கொண்டு,  என் காலை கட்டிக் கொண்டு அழுத என் பேத்தியையும்  தூக்கிக் கொண்டு( நல்ல வேளையாக) கீழே சென்ற பொழுது எப்போதும்  செய்வது போல் ஸ்டாப்பரை போடாமல் வாசல் கதவை முக்கால் வாசி திறந்து வைத்து விட்டு சென்றேன். என் பெண்ணிடம் அவள் கேட்டவற்றை கொடுத்து விட்டு மேலே வந்து பார்த்தால்... ஆட்டோ லாக் கதவு பூட்டிக் கொண்டு விட்டது. என்னிடம் சாவி கிடையாது.  

உள்ளே எண்பத்தாறு வயது நிறைந்த எங்கள் அத்திம்பேர் (நாத்தனாரின் கணவர்) இருந்தார். ஆனால் அவருக்கு 90% காது கேட்காது. ஹால் சோபாவில் உட்கார்ந்திருந்தாலாவது பெல் சத்தம் கேட்கலாம், உள்ளே படுத்துக் கொண்டிருக்கிறார், நான் வாசலில் நின்றபடி காலிங் பெல்லை அடித்துக் கொண்டே இருக்கிறேன்.. ம் ஹூம்..! அவருக்கு காது கேட்டால்தானே கதவை திறப்பார்? சமையல் அறையில் இருந்து குக்கர் ஒரு விசில், இரு விசில் என்று ஒலி  எழுப்ப, எனக்கு பிரஷர் எகிற ஆரம்பித்தது.

இன்னொரு பக்கமோ வியர்வை தாங்க முடியாமல் குழந்தை அழ ஆரம்பித்து விட்டது. 

என் கையில் செல் போனும் இல்லை. பக்கத்து வீட்டிற்க்குச் சென்று 

என் மகளுக்கும், கணவருக்கும் போன் செய்தால், அவர்கள் எடுத்தால்தானே..? என்னோடு என் பக்கத்துக்கு வீட்டுகாரர்களும் சேர்ந்து கொண்டு கதவை இடித்தார்கள், பெல் அடித்தார்கள். இந்த கலாட்டா சத்தம் கேட்டு எதிர் வீட்டுக்காரர்களும் வந்து விட்டார்கள். அவர்களும் அவர்கள் பங்கிற்கு கதவை தட்டினார்கள். எதற்கும் பலன் இல்லை. இப்போது குக்கர் எங்கேயாவது வெடித்து விடப் போகிறது என்னும் பயத்தோடு, அத்திம்பேருக்கு காது கேட்காததால்தான் திறக்கவில்லையா? அல்லது முதியவரான அவர் மயங்கி விழுந்து விட்டாரா? என்னும் கவலையும் சேர்ந்து கொண்டது. 

எங்கள் வீட்டின் வாசல் கதவிற்கு மூன்று சாவிகள் உண்டு. ஒன்று என் கணவரிடமும், ஒன்று என்னிடமும், மற்றொன்று என் மகளிடமும் இருக்கும். இப்போது என் சாவி வீட்டினுள் மாட்டிக்கொண்டு விட்டது. என் கணவரோ, மகளோ வந்தால் கதவைத் திறந்து விடலாம். "ஆண்டி, அங்கிள் அங்கே வரார்.. வண்டு ஒன்று கூவ, மேலே இருந்த படியே," வீட்டு சாவியை சீக்கிரம் கொடுங்கள் என்று கூவினேன். "சாவியா? நீங்கள் எல்லாம் வீட்டில் இருக்கிறீர்களே என்று நான் சாவியை எடுத்துக் கொண்டு செல்லவில்லை" என்றாரே பார்க்கலாம்.. போச்சுடா! ஒரே கதி என் மகள்தான்.

"சுபா எங்கே போய் இருக்கிறாள் என்று சொல்லுங்கள். நான் கண்ணனை விட்டு சாவியை வாங்கி வரச் சொல்லுகிறேன்". பக்கத்துக்கு வீட்டு பெண்மணி உதவ முன் வந்தார். 

"ராமாவரம் லக்ஷ்மி நரசிம்மர் கோவிலுக்கு  அருகேதான் இருக்கு என்று 
கூகுளில் பார்த்து விட்டு சென்றுருக்கிறாள், சரியாகத் தெரியாது.."

"பால்கனி கிரில் திறந்துதானே இருக்கும்? ஒரு ஏணி வைத்து யாரையாவது பால்கனி வழியாக உள்ளே நுழையச் சொல்லலாமே..?"

எதிர் வீட்டு நவநீதாவின் ஆலோசனை. 

"இல்லையே.. பால்கனி கிரில் பூட்டிதான்  இருக்கும்".

போச்சு.. ஒரு ஒரு கதவாக மூடிக்கொண்டே வருகின்றதே..!

இல்லை இல்லை எல்லா கதவுகளும் மூடவில்லை, அத்திம்பேர் படுத்திருக்கும் பெட் ரூம் ஜன்னல் திறந்து இருக்கிறது. அங்கிருக்கும் நெட்லானை அலம்ப வேண்டும் என்பதற்காக கழட்டிய பொழுது ஜன்னலை திறந்து வைத்திருக்கிறோம்.

"ஓ!வெரி குட்! நந்து நீயும், கண்ணனும் கீழே போய் பின்னால் ஏணி இருக்கும் அதில் ஏறி அந்த தாத்தாவை கூப்பிட்டு கதவை திறக்கச் சொல்லுங்கள்". என்று தெளிவாக உத்தரவு பிறப்பித்து விட்டு, 

"நீங்கள் ஏன் வெளியில் நிற்கிறீர்கள்? உள்ளே வாருங்கள் என்று எங்களையும் அவர் வீட்டிற்க்கு அழைத்துச் சென்றார் நவநீதா. நாங்கள் அவர் வீட்டிற்க்குள் சென்று தண்ணீர் குடிக்க கேட்டோம். தண்ணீர் வருவதற்குள் 'க்ளிக்' என்ற ஓசையோடு எங்கள் வீட்டு கதவு திறந்தது. 

அப்பாடா!... என் கணவர் ஓடிப்போய் அடுப்பை நிறுத்தினார். 

"யாரோ ஒரு பையன் தாத்தா, தாத்தா என்று கூப்பிட்டு கதவை திறக்கச் சொன்னான். ரொம்ப நேரமா தட்டுகிறீர்களா?"

"சீ! சீ! அதெல்லாம் இல்லை". ஒரு வயதான விருந்தினரிடம் வேறு என்ன சொல்ல முடியும்? 

சரி இதிலிருந்து என்ன கற்று கொண்டாய்? என்கிறீர்களா? 

வீட்டின் ஒரு சாவியை அக்கம் பக்கத்தில் யாரிடமாவது கொடுத்து வைக்க வேண்டும். பால்கனி கிரில்லை தினசரி பூட்ட வேண்டியதில்லை. ஐந்து நிமிடமோ, பத்து நிமிடமோ சாவியை மறக்க கூடாது என்பது கோல்டன் ரூல். பதிமூன்று வருடங்கள் மறக்காமல் இருந்தது பெரிய விஷயமில்லை, ஒரு முறை மறந்ததுதான் பெரிய விஷயம்.

ப்ளசிங் இன் டிஸ்கைஸ் என்பது போல அன்று சாதம் நன்றாக குழைந்து விட்டதால் பேத்தி லபக் லபக்கென்று முழுங்கி விட்டாள்.

Saturday, May 14, 2022

திரைப்படங்கள் சொல்லும் செய்திகள்.

திரைப்படங்கள் சொல்லும் செய்திகள்.

திரைப்படம் என்பது சக்தி வாய்ந்த ஒரு ஊடகம். நம் நாட்டைப் பொறுத்தவரை அரசியல், சமூக மாற்றங்களுக்கே திரைப்படங்கள் காரணமாக இருந்திருக்கின்றன. என்னதான். தொழில் நுட்ப வளர்ச்சி சினிமாவின் நடப்பவை நிஜமல்ல என்னும் தெளிவை ஓரளவுக்கு மக்களுக்கு அளித்தாலும் இன்றும் தங்களுடைய அபிமான கதாநாயகன் நடித்த படத்தை முதல் காட்சி பார்க்க வேண்டும் என்பதற்காக 1500 ரூபாய் வரை செலவழிக்க தயாராக இருக்கும் ஒரு கூட்டம் இருந்து கொண்டு தான் இருக்கிறது அப்படி இருக்கும் பொழுது சினிமாக்கள் சொல்லும் செய்திகளில் கவனமாக இருக்க வேண்டாமா?

இங்கும் அங்குமாக நடக்கும் விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டும் பொழுது பலருக்கு அந்த கதாநாயகன் செய்யும் செயலை தானும செய்யலாம் தவறில்லை என்னும் எண்ணம் வந்துவிடாதா?

இப்போது வரும் திரைப்படங்கள்,  அவை சொல்லும் செய்திகள் மிகவும் அச்சமூட்டுகின்றன. நற்பண்புகளக்கு
 உறைவிடமானவன்தான் கதா நாயகன் என்னும் நிலை மாறி எல்லா துர்குணங்களும் கொண்டவன்தான் கதாநாயகன் என்னும் நிலைக்கு வந்து விட்டது. 

குறிப்பாக வெங்கட் பிரபு படங்களில் கதாநாயகனும், அவன் தோழர்களும் மது அருந்தாத காட்சி கிடையாது. 

சமீபத்தில் வெளியாகியிருக்கும் அவருடைய 'மன்மத லீலை' படத்தில் கதாநாயகன் பாத்திரப் படைப்பு மிகவும் வருத்தம் கொள்ள வைத்தது. 

திருமணத்திற்கு முன்பே ஆர்குட் மூலம் நட்பு கொள்ளும் ஒரு பெண்ணின் அழைப்பின் பேரில் அவளைக் காணச் செல்லும் அஷோக் செல்வன் கை நிறைய பியர் பாட்டில்களை எடுத்துச் செல்கிறார். இருவரும் எல்லை மீறும் தருணத்தில் அந்தப் பெண்ணின் தந்தை (ஜெய பிரகாஷ்) வந்து விடுகிறார். அவர் அவளுடைய தந்தை இல்லை, கணவர் என்பது தெரிய வருகிறது. அசோக் செல்வனுக்கும் ஜெய பிரகாஷிற்கும் நடக்கும் கை கலப்பில் ஜெ.பி. இறந்து விட, அதை தற்கொலை என்பது போல
 ஜோடித்து, அவர் பணத்தை திருடிக் கொண்டு, தன்னோடு வரும் அந்தப் பெண்ணையும் கொலை செய்து விட்டு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஜாலியாக இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகாவது திருந்தினாரா? என்றால் இல்லவே இல்லை. அவருடைய மன்மத லீலை தொடர்கிறது. இவருடைய வீக்னெஸை தெரிந்து கொண்ட, அவரால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் முன்னாள் காதலன் அவரை பழி வாங்குவதற்காக,  ஒரு பெண்ணை அனுப்பி அவரோடு பழக வைத்து, அதை செல் ஃபோனில் படமெடுத்து அவரை பிளாக் மெயில் செய்கிறான். கில்லாடியான அஷோக் செல்வன் அவர்களையும் தன்னுடைய ஃபார்ம் ஹவுஸிற்கு அழைத்துச் சென்று கொலை செய்து, அங்கேயே புதைத்து விட்டு ஜாலியாக இருப்பதை தொடர்கிறார். 

என்னவிதமான பாத்திரப் படைப்பு இது? என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எதற்கும் தண்டனை கிடையாது. தவறு செய்தவன் வாழ்க்கையில் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருப்பான் என்று கூறும் படங்கள் என்னவிதமான செய்தியை கடத்துகின்றன? 

வெங்கட் பிரபு போன்ற திறமையான இளைஞர்கள் இதை யோசிக்க வேண்டும். அவருடைய மங்காத்தாவும் நெகடிவ் மெசேஜைத்தான் தந்தது. நளன் குமாரசாமியின் சூது கவ்வும் படமும் இந்த வகையைச் சேர்ந்தது தான். இந்தப்படங்கள் மிகவும் ஸ்வாரஸ்யமாக எடுக்கப் பட்டிருந்தன என்பதில் சந்தேகம் கிடையாது. மிகவும் ருசியான விஷம் என்பதை உண்ண கொடுக்கலாமா? பொழுது போக்கைத் தாண்டி சமுதாயப் பொறுப்பு கலைஞர்களுக்கு இருக்க வேண்டாமா?

ஆண்கள்தான் கெட்டழிய வேண்டுமா?  பெண்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது  என்று நினைத்து எடுத்தது போல் 'அச்சம், மடம்,நாணம், பயிர்ப்பு' என்னும் படம். 

மூன்று இளம் பெண்களில் ஒருத்தி அப்பர் மிடில் கிளாஸை சேர்ந்த பிராமணப் பெண்(அக்ஷரா ஹாசன்), வீட்டின் கண்டிப்பு, கட்டுப்பாடுகளால் மன உளைச்சலுக்கு உள்ளாகிறாளாம். பெற்றோர்கள் வீட்டில் இல்லாத ஒரு நாளில் காதலனோடு உறவு கொள்ள தூண்டுகிறாள் தான் ப்ளஸ் டூ படித்த காலத்திலிருந்தே பல நண்பர்களோடு உறவு கொண்டிருப்பதாகக் கூறும் அவள் தோழி. பாதுகாப்பான உறவிற்கு காண்டெமும் வாங்கித் தருகிறாள். 

ஒரு நாள் மீன் சாப்பிட்டு விட்டதால் குற்ற உணர்ச்சியில் தவிக்கும் அவளை,"எனக்கு பிடிக்காது நான் சாப்பிடவில்லை. உனக்கு பிடித்திருந்தால் நீ தாராளமாக சாப்பிடு" என்று கூறி தேற்றும் பாட்டி இன்னொரு நாள் மீன் பரிமாறுகிறார். ஒரு தளை உடைகிறது. 

ஆனால் முதல் முறையாக அசைவம் சாப்பிட்ட பொழுது வந்த குற்ற உணர்ச்சி கூட திருமணத்திற்கு முன்பே காதலனோடு உறவு கொள்ளும் பொழுது அவளுக்கு வரவில்லை. தளைகள் உடைந்த சந்தோஷத்தில் திளைக்கிறாள். என்னவொரு முற்போக்கு! 

"டோண்ட் ஜட்ஜ் மீ...  ஃபிஷ்ஷையும், சிக்கனையும் வெஜிடேரியின் லிஸ்டில் சேர்க்க மனு போடப் போகிறேன்.." என்று அவள் பாடி ஆடுவதோடு படம் முடிகிறது. இதுதான் பெண்ணியம் என்று வலியுறுத்துவதைப் போன்ற கருத்து. 

டீன் ஏஜ் என்பதே உணர்வுகள் அறிவை மழுங்கச் செய்யும் பருவம் அந்த நேரத்தில் இப்படிப்பட்ட படங்கள் எப்படிப் பட்ட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை படைப்பாளிகள் உணர வேண்டும்

Thursday, May 5, 2022

எங்களையும் பீடித்த...

 எங்களையும் பீடித்த...

பள்ளியிலிருந்து வந்து என் பேத்தி 'நோஸ் ப்ளாக்' என்றாள். கொஞ்சம் இருமலும் இருந்தது. அவளும் நானும் ஒரே படுக்கையில் படுத்துக் கொள்வோம். எனக்கும் தொண்டையில் இரிடேஷன். உடனே உப்பு நீரில் கொப்பளித்தேன். மறுநாள் ஒன்றும் இல்லை, அதற்கடுத்த நாள் மீண்டும் தொண்டையில் இரிடேஷன். கடுமையான கை, கால் வலி சரியாக தூங்க விடாமல் செய்தது.

என் மாப்பிள்ளை வியாழன், மற்றும் ஞாயிறு ஸ்கார்பரோ ஸாயி சென்டருக்குச் செல்வார். அங்கு சிலர் இப்போதுதான் பாதிப்பிலிருந்து மீண்டிருந்தார்களாம். ஏப்ரல் 24 சாயி பாபாவின் ஆராதனை தினம். அதற்கு எல்லோருமே சென்றோம்.

மறுநாள் மாப்பிள்ளைக்கு தொண்டை கரகரப்போடு உடல் வலியும் சேர்ந்து கொண்டது. இந்த பாதிப்புகள் அடுத்த நாளும் நீடிக்க, கோவிட் டெஸ்ட் எடுத்து விடலாம் என்று டெஸ்ட் எடுத்ததில் அவருக்கு பாஸிடிவ் என்று வந்தது. 

உடனே என் மகள், நான் இருவரும் டெஸ்ட் எடுத்துக் கொண்டோம். மகள் பாஸிடிவ், எனக்கு நெகடிவ். ஆனால் மதியத்திற்கு மேல் எனக்கு நல்ல குளிர், கடுமையான தலைவலி எல்லாம் வந்து விட்டன. 

டைலனால் மாத்திரை, ஆவி பிடிப்பது, உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது என்று எல்லாவற்றையும் கடை பிடித்தோம். குழந்தையை பள்ளிக்கு அனுப்பவில்லை.

இரண்டு நாட்களுக்குப் பிறகும் எனக்கு மூக்கடைப்பு சரியாகவில்லை. வாசனை தெரியவில்லை. இதற்கிடையில் சின்ன குழந்தைக்கும் மூக்கு ஒழுகுவது, இருமல் போன்றவை வந்தன. வெள்ளியன்று காலை குழந்தை பால் குடிக்க கஷ்டப்படுவதை பார்த்த என் மகள்  மருத்துவரை டெலிபோனில் தொடர்பு கொண்டு, அவருடைய ஆலோசனையின் பேரில் அருகிலிருக்கும் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றாள்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் செஸ்ட் கிளியராக இருப்பதாகவும், குழந்தையின் சுவாசக் குழாய் 'குரூப்' என்னும் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதால் லேசாக வீங்கியிருப்பதாகவும் அதற்கு ட்ரீட்மெண்ட் இல்லை,  தானே சரியாகி விடும், நிறைய நீராகாரம் கொடுங்கள், என்று கூறிவிட்டு எதற்கும் ஸ்டீராய்டு கொடுக்கிறோம், இரண்டு மணி நேரம் அப்சர்வேஷனில் இருக்கட்டும், பிறகு பார்த்து விட்டு சொல்கிறேன் என்றாராம். இவை போதாதா? நம்மை கவலைப்    படுத்த? 

உடனே கூகுளாரை சரணடைந்தால் அவர் epiglottitis என்ற தலைப்பில் கிலியூட்டினார். மகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவள் ஃபோனில் சார்ஜ் குறைவாக இருந்ததால் டேட்டாவை துண்டித்திருக்கிறாள். மூன்று மணிக்கு அவள் வீடு திரும்பிய போது குழந்தை சாதாரணமாக விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தைக்கு சளி, இருமல் இருக்கிறதே என்று தயிரை கூட சூடு பண்ணி கொடுத்துக் கொண்டிருந்தோம். மருத்துவமனையில் தொண்டைக்கு இதமாக இருக்கும் என்று பாப்ஸிகல் எனப்படும் குச்சி ஐஸ் கொடுத்திருக்கிறார்கள்!!!

நாங்களும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறோம். அசதி அதிகமாக இருக்கிறது. எனக்கு இன்னமும் வாசனைத் தெரியவில்லை. 

சூரியனையும், சந்திரனையும் பிடிக்க வேண்டும் என்று துரத்திக் கொண்டு வரும் ராகுவிடமிருந்து தப்பித்து ஓடிக்கொண்டே இருக்கும் ரவியும், சோமனும் எப்போதோ ஒரு முறை அதனிடம் மாட்டிக்கொண்டு விடுவார்கள். சற்று நேரம் ராகுவின் ஆதிக்கத்திற்குள்  இருந்து பின்னர் வெளிப்படுவார்கள் என்று கிரகணத்தைப் பற்றி வேடிக்கையாக சொல்வார்கள். அப்படியே இந்த கொரோனா அனைவரையும் பீடிக்காமல் விடாது போலிருக்கிறது. 

அச்சுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத் நஸ்யந்தி சகலா ரோகா சத்யம் சத்யம் வதாம்யஹம்








 

Wednesday, April 27, 2022

நடிகர்களும், அரசியலும்

 நடிகர்களும், அரசியலும்


தமிழ்நாட்டில் சினிமா நடிகர்கள் அரசியலில் பிரவேசிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் திராவிட கட்சிகள் நாடகம், சினிமா இவற்றை அரசியலுக்கு பயன்படுத்தியதாக இருக்கலாம். குறிப்பாக எம்.ஜி.ஆருக்கு கிடைத்த வரவேற்பு பலருக்கும் அந்த ஆசையைத் தூண்டியது. ஆனால் என்னதான், "ராமசந்திரன் கட்சிக்கு ஒரு விலாசம்" என்று அண்ணாவால் புகழப்பட்டாலும், அவருடைய முக விலாசத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த கட்சி அவருக்கு கட்சியில் பெரிய இடத்தை கொடுத்து விடவில்லை. அவரை கட்சியிலிருந்து வெளியேற்றும் தவறான செயலை தி.மு.க. செய்ததுதான் எம்.ஜி.ஆரை புது கட்சியை ஆரம்பிக்க வைத்தது. "ஜாடிக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பூதத்தை கருணாநிதி திறந்து விட்டு விட்டார்" என்று சோ அதை வர்ணித்தார். 

எம்.ஜி.ஆர் அடைந்த வெற்றியைப் பார்த்து கட்சி தொடங்கிய சிவாஜி நஷ்டப்பட்டதுதான் மிச்சம்.  ஏன் அதற்குப் பிறகு கட்சி ஆரம்பித்த விஜயகாந்த், சரத்குமார் போன்ற யாருமே அந்த அளவு வர முடியவில்லை. கட்சி ஆரம்பித்த கார்த்திக் காமெடி பீஸாகி விட்டார். 

எதிர் கட்சி தலைவராகும் அளவிற்கு உயர்ந்த விஜயகாந்த் ஏனோ சோபிக்கவில்லை. உடல் நலமும் ஒத்துழைக்கவில்லை.  கமல்ஹாசன் மையமாக ஏதோ செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 

எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர் ஜெயலலிதா. சினிமா கவர்ச்சி அவருக்கு 1% கூட உதவவில்லை. எதிர்வினைதான் ஆற்றியது.   அவரும் ஒரு முழுமையான அரசியல்வாதியாகத் தான் இருந்தார்.  அரசியலுக்கு வந்த வைஜயந்தி மாலா, ஜமுனா, ஹேமமாலினி,  ஜெயபாதுரி, ஜெய் ப்ரதா போன்றவர்களை விட அவர் சிறப்பாகவே செயல்பட்டார். 

எம்.ஜி.ஆருக்குப் பிறகு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தைப் பெற்றவர் ரஜினி காந்த்.  அவருக்கும் அரசியலில் ஆர்வம் இல்லை, அவர் ரசிகர்களும் அதை எதிர்பார்க்கவில்லை. அவருடைய மாஸ் அப்பீலையும், கரீஷ்மாவையும் பயன் படுத்திக்கொள்ள அரசியல்வாதிகள் குறிப்பாக பி.ஜே.பி.யினர் விரும்பினர். 
அதற்காக அவரை அரசியலுக்கு இழுக்க வாஜ்பேயி முதல் மோடி வரை பல முயற்சிகள் எடுத்தனர். சோ, குருமூர்த்தி போன்ற அறிவுஜீவிகளும் தயானந்த சரஸ்வதி போன்ற ஆன்மீக பெரியவர்களும் கூட அதற்கு முயன்றனர். (1996 தேர்தலில் சுவாமி தயானந்த சரஸ்வதி கேட்டுக் கொண்டதன் பேரிலேயே ரஜினிகாந்த்,"இந்த தேர்தலில் அ.தி.மு.க.விற்கு ஓட்டளித்தால் பிறகு தமிழ்நாட்டை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது" என்று செய்த பிரசாரம் அ.தி.மு.க.வின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.) ரஜினியால் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று இவர்கள் எல்லோரும் அவர் ரசிகர்கள் களை விட அதிகமாக நம்பினர். 

ரஜினியை அரசியலுக்கு இழுக்க பத்மவிபூஷன், பத்மவிபூஷன் போன்ற  மதிப்பு மிக்க விருதுகள் வழங்கப் பட்டன.  ஏன்? தான் சார்ந்திருக்கும் சினிமா உலகின் முன்னேற்றத்திற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத அவருக்கு தாதா சாகிப் பால்கே விருது கூட வழங்கப்பட்டது.  நடிகர்களின் சம்பளத்தை லட்சங்களிலிருந்து கோடிக்கு உயர்த்தியதுதான் திரையுலகில் இவர் சாதனை.  ஆனாலும் ரஜினி மதில் மேல் பூனையாகவே இருந்தார். சீர்கெட்டு வரும் அவருடைய உடல் நலம் அரசியலுக்கு வர வேண்டாம் என்று அவரை முடிவெடுக்க வைத்திருக்கிறது. ரஜினி ஒதுக்கிய பிறகு அஜீத்துக்கு வலை வீசத் தொடங்கி யிருக்கிறார்கள். இதையெல்லாம் செய்வது அயசியல்வாதிகள் தானேயொழிய ரசிகர்கள் அல்ல.

மற்றபடி உதயநிதி அரசியலில் ஈடுபடுவது வாரிசு அரசியல். வசதி இருப்பதால் சினிமா எடுத்து அதில் நடிக்கவும் செய்கிறார். மற்றபடி
உதயநிதியையெல்லாம் நடிகர் என்று சினிமா பார்க்காதவர்கள் வேண்டுமானால் கருதலாம். அவரை விட அவர் கஸின் அருள்நிதி பெட்டர் ஆக்டர். அவர் ஆசைக்கு அவர் நடிக்கிறார் அவர் அபாபா வின் பேராசை அவரை அரசியலுக்கு உந்தி தள்ளியிருக்கிறது. இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். 



Sunday, April 24, 2022

தமிழணங்கு

தமிழணங்கு



முக நூலில் திடீரென்று தமிழணங்கு என்று ஒரே படங்களாக வந்த பொழுது ஒன்றும் புரியவில்லை. அப்புறம்தான் நம் நாட்டிற்குள் இணைப்பு மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று அமித் ஷா கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கிய பிம்பம் அது என்பது. உடனே வலதுசாரிகள் தமிழன்னை இப்படித்தானிருப்பாள் என்று சில படங்களை வெளியிட்டார்கள். 

என்னுடைய ஒரு தோழி, "ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழன்னையிடம் நேட்டிவிட்டி இருக்கிறது. ஏன் தமிழன்னை கருப்பாக இருக்கக் கூடாதா? விரிந்திருக்கும் அந்த கூந்தல் கோபத்தை காட்டுகிறது,ஹிந்தி மீது இருக்கும் கோபம்" என்றார். எல்லாவற்றுக்கும் உள்ளர்த்தம்(significance) சொல்லலாம் போலிருக்கிறது. 

சென்னை கே.கே.நகரில் இருக்கும் அம்மன் கோவிலில் தமிழன்னை சிலை உண்டு. எனக்கென்னவோ  தமிழை ஒரு மொழியாக பார்த்தால் போதும் என்று தோன்றுகிறது.
_____________________________________________

Sunday, April 17, 2022

மாப்பிள்ளையின் சமையல்

மாப்பிள்ளையின் சமையல்

இந்த வாரம் இங்கே லாங் வீக் எண்ட். குட் ஃப்ரைடே, சனி, ஞாயிறு, ஈஸ்டர் (. சண்டே வரும் ஈஸ்டருக்கு மண்டே விடுமுறை, என்ன லாஜிக்கோ?) என்று நான்கு நாட்கள் விடுமுறை. மகளுக்கு இரண்டு நாட்கள்தான். என் மாப்பிள்ளைக்கு போர் அடித்தது போலிருக்கிறது. நேற்று லன்ச் தான் செய்யப் போவதாக் கூறினார். வெஜிடபிள் பிரியாணி‌யும், ராய்தாவும் மெனு. அவருடைய தயாரிப்பு வித்தியாசமாக இருந்ததால் அதை புகைப்படமெடுத்தேன். 

பிரியாணியில் போட வேண்டிய காய்களையும் (குடை மிளகாய், கேரட். வேண்டுமானால் உருளைக் கிழங்கும், பீன்ஸும் போடலாம்) பனீரையும் சற்று பெரிய துண்டங்களாக நறுக்கி தயிர், காரப்பொடி,. உப்பு சேர்த்த கலவையில் 20 நிமிடங்கள் ஊற வைத்தார். 


இரண்டு ஆழாக்கு பாஸ்மதி அரிசியையும் கழுவி பத்து நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் வேக வைத்து அரை வேக்காடு வந்ததும் தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொண்டார். 



ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி ஏலக்காய், கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, அனாசிப்பூ, சீரகம், சோம்பு இவைகளை தாளித்து,  பெரிதாக ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி, அதில் சேர்த்து கொஞ்சம் காரப்பொடி, கரம் மசாலா பொடிகளையும், கொஞ்சம் உப்பையும் சேர்த்து வதக்கினார். 


பின்னர் ஒரு பெரிய தக்காளியையும் சேர்த்து வதக்கி, அவை நன்றாக வதங்கியதும் இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்து தயிரில் ஊறிய காய்கறி கலவையை சேர்த்து வதக்கி, பின்னர் அரை வேக்காட்டு அரிசியை அதில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து மூடி விட்டார். பத்து நிமிடங்களில் பிரியாணி ரெடியாகி விட்டது. அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து அடியோடு பிரட்டிக் கொடுத்து வெள்ளரிக்காய் ராய்தாவோடு (இதை மகள் செய்தாள்) சாப்பிட்டோம். கொஞ்சம் காரம் என்றாலும் சுவையாக இருந்தது.




Sunday, April 3, 2022

சித்திரம் பேசுதடி(ரயில் பயணம்)

ரயில் பயணங்கள் எனக்கு புதிது கிடையாது. எத்தனை முறை பயணித்திருக்கிறேன். சிறு வயதில் விடுமுறைக்கு ஊருக்குச் சென்றதெல்லாம் ரயிலில்தான். 

அப்போதெல்லாம் ரயிலில் மூன்று வகுப்புகள் உண்டு. மூன்றாம் வகுப்பில் ஜன்னலில் கம்பிகள் இருக்காது. பிளாட்பாரத்தில் ரயில் வந்து நின்றதும் ரயில் ஏற்றிவிட வந்த அப்பா என்னையும், தம்பியையும் தூக்கி ஜன்னல் வழியே உள்ளே தள்ளுவார்.  அதற்குள் தங்கையோடும், பெட்டியோடும் உள்ளே வந்த வந்த அம்மா எங்கேயாவது இடம் கிடைத்தால் உட்காருவாள் அல்லது வழியில் பெட்டியையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு உட்கார்ந்து கொள்வாள். ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால் கண்ணில் கரி விழும்.  டீசல் என்ஜின் வந்தபிறகு அது மாறியது. 

கல்லூரிக்குச் சென்றது ரயிலில் தான்.  ஸ்ரீரங்கத்தில் ஏறி ஜங்ஷனில் இறங்கி நேஷனல் காலேஜுக்கு நடந்து செல்வோம். டவுன் ‌‌ஸ்டேஷனில் இறங்கும் எஸ்.ஆர்.காலேஜ் பெண்களைக் கவர ஃபுட் போர்டில் பயணிப்பது, ஓடும் ரயிலில் ஏறுவது போன்ற சாகசங்களைச் செய்வோம்.  

வேலை கிடைத்து சென்னைக்கு வந்ததும் தாம்பரம் சானிடோரியத்திலிருந்த வீட்டிலிருந்து கோடம்பாக்கத்திலிருந்த அலுவலகத்திற்கு மின்சார ரயிலில் கும்பலில் கசங்கி பயணம். எல்லாமே இரண்டாம் வகுப்பில் தான். 

திருமணத்திற்குப் பிறகுதான் ரயிலில் முன்பதிவு என்று ஒன்று உண்டு என்று தெரிந்தது. என் மனைவிக்கு 58 வயதானதும் என் மகள், "அப்பா, அம்மாவுக்கு இனிமேல் கன்செஷன் உண்டு,  அதனால் ஏ.சி.கோச்சில்‌ அழைச்சுட்டு போங்கப்பா" என்றாள்.

"எனக்கு ஃபுல் ஃபேர் குடுக்கணுமே? எனக்கும் அறுபது வயதாகட்டும்" என்றேன். 

சென்ற மாதம்தான் எனக்கு அறுபது வயது நிறைந்தது. இனி நிறைய ஊர்களுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். என் மனைவிக்கு ஒரு முறையாவது ஏ.சி.கோச்சில் செல்ல வேண்டும் என்று ஆசை. அவள் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

அவளுடைய ஆசைப்படி இப்போது ஏ.சி. கோப்பில் பயணிக்கப் போகிறோம். ஆனால் அது எனக்கு கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.  ஏனென்றால் நாங்கள் பயணிப்பது கேன்சர் நோயாளிகளுக்கான கன்செஷனில்.

எங்கள் அறுபதாம் கல்யாணத்திற்குப் பிறகு என் மனைவிக்கு அடிக்கடி இருமல் வந்தது. தொண்டை கரகர வென்றானது. ஒரு நாள் இருமியவள் துப்பிய பொழுது ரத்தம் வந்தது. பயந்து போய் இ.என்.டி. நிபுணரிடம் அழைத்துச் சென்றேன். பரிசோதனைகள் செய்து விட்டு தொண்டை புற்றுநோய் என்று குண்டைப் 
போட்டார். 

தெரிந்தவர்கள் பலரும், "அடையார் புற்றுநோய் மருத்துவ மனைக்கு செல்லுங்கள். குறைந்த செலவில் நல்ல மருத்துவம்" என்றார்கள். 

அதுமட்டுமல்ல கேன்சர் நோயாளிகள் மருத்துவம் செய்து கொள்ள பயணிக்கும் பொழுது இரண்டாம் வகுப்பென்றால் 100 சதவீதம் சலுகையும், இரண்டாம் வகுப்பு ஏ.சி.கோச்சில் பயணிக்க 75சதவீதம் கன்செஷனும் உண்டு. அதில்தான் அவளை அழைத்துச் செல்கிறேன். ஒரு சந்தோஷ தருணத்தில் அவளை ஏ.சி.கோச்சில் அழைத்துச் சென்றிருக்கலாம். 

பி.கு:

மேற்படி ஓவியத்திற்கு கதை எழுதச் சொல்லி மத்யமரின் சித்திரம் பேசுதடி என்னும் பகுதியில் கேட்டிருந்தார்கள். அதற்கு நான் எழுதிய கதை. 

Tuesday, March 29, 2022

நியாயம்

 நியாயம்


கீர்த்திக்கு அலுப்பாக இருந்தது. சிங்க் முழுவதும் பாத்திரங்கள். வந்திருந்த விருந்தினர்கள் சென்றாகி விட்டது. இப்போது பாத்திரங்கள் அத்தனையையும் தேய்த்து, துடைத்து வைத்து விட்டு படுக்கைக்குச் செல்ல ஒரு மணிநேரம் ஆகி விடும். 

"இதை அப்படியே போட்டுவிட்டு படுத்துக் கொள். காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்றான்" ராஜீவ். 

"அப்படியே போட்டுவிட்டு வந்தால் கரப்பு வந்து விடும்".

"சரி அப்போ நான் தேய்க்கிறேன், நீ அலம்பி துடைத்து விடு" என்று ராஜீவ் பாத்திரங்களை துலக்கத் தொடங்கினான். வேலை சீக்கிரம் முடிந்ததில் இருவரும் சீக்கிரம் படுக்கைக்குச் செல்ல முடிந்தது. 

ராஜீவ் அப்படித்தான். "நாளைக்கு என் ஃப்ரெண்ட்ஸ் நாலு பேரை டின்னருக்கு கூப்பிடலாமா? உனக்கு ஓ.கே.தானே? என்று அவளின் சௌகரியத்தை அனுசரிக்கும் அக்மார்க் அமெரிக்க ஆண்மகன். அதோடு அவளுக்கு கறிகாய்கள் நறுக்கி கொடுப்பது போன்ற  உதவிகளும் செய்வான்.

எல்லா பெண்களையும் போல கீர்த்தியும் திருமணமாகி அமெரிக்கா செல்லப் போகிறோம் என்பதில் த்ரில்லிங்காக உணர்ந்தாள். அங்கு சென்றதும் தான் அந்த ஊரின் சில அசௌகரியங்கள் புரிந்தன. இந்தியா போல வீட்டு வேலைகளில் உதவி செய்ய ஆட்கள் வைத்துக் கொள்வது காஸ்ட்லி சமாச்சாரம். அவர்களே தான் எல்லாம் செய்து கொள்ள வேண்டும். 

அவர்கள் இருந்த அபார்ட்மெண்டில் டிஷ் வாஷர் இல்லை. வாஷிங் மெஷினும் கீழே லாண்ட்ரி ரூம் என்பதில் மொத்தம் எட்டு மெஷின்களும், எட்டு ட்ரையர்களும்  இருந்தன. இவர்கள் வாரம் ஒரு முறை துணிகளை அங்கு சென்று துவைத்து, காய வைத்து எடுத்து வருவார்கள். அதற்கும் சில சமயங்களில் ராஜீவ் செல்வான். அதைப்போல வீட்டை அவள் பெருக்கினால், ராஜீவ் மாப் போட்டு விடுவான். 

திருமணத்திற்கு முன்பு வரை கீர்த்தி சமையல் ஓரளவிற்கு செய்வாளே தவிர வீட்டு வேலைகள் செய்து பழக்கமில்லை. அவளை விட இரண்டே வயது மூத்தவளான அவளுடைய அண்ணிக்கு கூட திருமணமாகி வந்த பொழுது வீட்டு வேலைகள் தெரியாமல்தான் இருந்தது. கீர்த்தியின் அம்மா மருமகளை ஒரே வருடத்தில்  நன்றாக பயிற்றுவித்து விட்டாள். மகன் வீட்டு வேலைகள் செய்வது கீர்த்தி யின் அம்மா, அப்பா இரண்டு பேருக்குமே பிடிக்காது. ராஜீவ் தனக்கு வீட்டு வேலைகளில் உதவுவதை அம்மாவிடம் சொன்ன பொழுது பதில் சொல்லாமல் கேட்டுக் கொண்டாள்.

ஒரு நாள் ராஜீவ் மாப் போடுவதையும், பாத்திரம் துலக்குவதையும் செல்ஃபோனில் படமெடுத்து, தங்களுடைய குடும்ப வாட்ஸாப் க்ரூப் பில் கீர்த்தி பகிர்ந்து கொண்ட பொழுது யாரும் எந்த கருத்தும் அனுப்பவில்லை. அன்று இரவு அவளுடைய அப்பா அவளுக்கு தனியாக கீழ்க்கண்ட மெஸேஜ் அனுப்பியிருந்தார்.

" உனக்கு மூளை இருக்கிறதா இல்லையா? உன் அண்ணியை நீயே தூண்டி விடுகிறாயா?

Monday, March 21, 2022

சில காணொளிகள்

 இன்று சில காணொளிகள்.



முதல் காணொளி எங்கள் குடும்ப நண்பரின் குழந்தைகளின் யூ ட்யூப். என்னதான் அவர்களுக்கு இப்போது திருமணமாகி குழந்தை, குட்டி என்ற குடும்பஸ்தர் களமாக ஆகி விட்டாலும் என் பார்வையில் குழந்தைகள்தான். நாம் பார்த்து வளர்ந்த குழந்தைகள் சில விஷயங்கள் செய்யும் பொழுது சந்தோஷம் வரத்தானே செய்கிறது. அந்த சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 

இன்னொன்று நானும் என் மகளும் பாடியது. மத்யமரில் சிலர் தைரியமாக பாடி பதிவேற்றுவதை கேட்கும் பொழுது நாம் கூட பாடலாம் போலிருக்கிறதே என்று தோன்றும். 

மற்றது வெள்ளி பாத்திரங்களை வீட்டிலேயே பளிச்சிட வைக்கும் டெக்னிக்.


பாருங்கள், கேளுங்கள், கருத்திடுங்கள். நன்றி. 

கருத்திடுங்கள் என்றதும் ஒரு விஷயம் சொல்லத் தோன்றுகிறது. பல சமயங்களில் மற்றவர்களின் பதிவுகளுக்கு நான் அனுப்பும் கருத்து போய் சேர்வதில்லை. நான் எல்லோருடைய பதிவுகளையும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம். __/\__ __/\__

Monday, February 28, 2022

மஹா சிவராத்திரி

மஹா சிவராத்திரி

மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி மஹா சிவராத்திரியாகும். ஒவ்வொரு மாதத்திலும் வரும் தேய்பிறை சதுர்த்தசி மாத சிவராத்திரி என அழைக்கப்பட்டாலும், சிவ வழிபாட்டுக்கு உகந்த மாதமான மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மஹா சிவராத்திரி. 

அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த பொழுது தசமி வரை பாற்கடலை  கடைந்தும் அமிர்தம் கிடைக்காததால் மன சோர்வுற்ற தேவர்கள் ஏகாதசியன்று உபவாசம் இருந்து துவாதசியில் பாற்கடல் கடைவதை தொடர, *ஆலகால விஷம் வெளிப்பட்டு அவர்களை துரத்துகிறது சிவபெருமானை வலம் வரும் அவர்களை எதிர் திசையில் வந்து மறிக்கிறது அதிலிருந்து தப்பிக்க அவர்கள் பிரதட்சிணத்தை முடிக்காமல் வந்த வழியிலேயே திரும்பி ஓடுகிறார்கள். மீண்டும் எதிர் திசையில் வந்து ஆலகால விஷம் மறிக்க,  மறுபடியும் வந்த வழியிலேயே திரும்பிச் செல்கிறார்கள். இப்படி மூன்று முறை பிரதட்சணம் செய்த பிறகு சிவ பெருமான் அந்த விஷத்தை அருந்துகிறார். அம்பிகை அந்த நஞ்சை சிவபெருமானின் தொண்டையிலேயே நிறுத்தி விட விஷத்தின் பாதிப்பால் அம்பிகையின் மடியிலேயே சற்று கண்ணயரும் பெருமான் கண் விழித்த நாள்தான் சதுர்த்தசியான சிவராத்திரி. 

விஷத்தை அருந்தியதால் உஷ்ணமாகிவிட்ட சிவபெருமானை குளிர்விக்க அவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. 

மனோகாரகனான சந்திரன் முழு கலையில் இருக்கும் பௌர்ணமி அம்பிகையை வழிபட உகந்த நாள் என்றால்,  சந்திரகலை குறைவாக இருக்கும் சதுர்த்தசி சிவபெருமானின் வழிபாட்டிற்கு உரிய நாள். நம்முடைய மனம் அடங்கி இறையனுபவத்தில் லயிப்பதை இது குறிக்கலாம்.

சிவராத்திரி அன்று உபவாசம் இருந்து, இரவு முழுவதும் உறங்காமல் இறை சிந்தனையிலேயே கழிக்க வேண்டும் என்பது நியதி.  உணவையும், உறக்கத்தையும் கட்டுப்படுத்தும் பொழுது, புலன் உணர்வு கட்டுப்படும். அதனால்தான் இறைவனுக்கு உகந்த நாட்களில் இவை இரண்டையும் வலியுறுத்துகிறார்கள். 

சில பெருமானுக்கு ஆசுதோஷி என்று ஒரு பெயர் உண்டு. சுலபத்தில் சந்தோஷமடைபவர் என்று அதற்கு பொருள். சிவனுக்கு உகந்த சிவராத்திரியன்று, நமக்கு தெரிந்த சிவ துதிகளை (லிங்காஷ்டகம், மார்க்கபந்து ஸ்லோகம், சிவ புராணம், தேவார, திருவாசக பதிகங்கள்)சொல்லி வழிபட்டு இறையருள் பெறலாம்.ஓம் நமசிவாய 🙏🙏

*அதனால்தான் பிரதோஷ நேரத்தில் சிவாலயங்களில் நந்திக்கு முன் தொடங்கி கோமுகி வரை சென்று பின்னர் திரும்பி நந்தி வரை வந்து பிரதட்சிணம் செய்வார்கள். 

Tuesday, February 22, 2022

ஹ்ருதயம்

 ஹ்ருதயம் 

(மலையாள திரைப்படம்)


பிரணவ் மோகன்லால், தர்ஷனா ராஜேந்திரன், கல்யாணி பிரியதர்ஷன் நடித்து, வினீத் ஶ்ரீனிவாசன் இயக்கியிருக்கும் படம். ஒரு கல்லூரி மாணவன் குடும்பஸ்தனாக மாறுவதை எவ்வித ஸ்வாரஸ்யமும் இல்லாமல் சொல்லியிருக்கும் படம்.

கேரளாவிலிருந்து சென்னைக்கு இன்ஜினீயரிங் படிக்க வரும் பிரணவ் மோகன்லாலும் அதே வகுப்பில் படிக்கும் தர்ஷணாவும் காதல் வசப்படுகிறார்கள். ஆனால் அந்த காதல் முறிய, கவனம் சிதறும் பிரணவ் கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி எக்கச்சக்க அரியர்ஸ் வைக்கிறார். திடீரென்று படிப்பில் ஆர்வம் வந்து செல்வா என்னும் சக தமிழ் மாணவன் நடத்தும் க்ரூப் ஸ்டடியில் சேர்ந்து ஒரே முயற்சியில் 18 பேப்பர்களையும் கிளியர் பண்ணுவதோடு வகுப்பில் ஐந்தாவது மாணவனாக வருகிறாராம் (ஏ அப்பா!). படிப்பு முடியும் பொழுது கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைத்து விடுகிறது. சரி படம் முடிந்து விட்டது என்று நினைக்கிறோம். அப்போதுதான் இண்டர்மிஷன், எண்டே குருவாயூரப்பா!

இதற்கு நடுவில் படத்தோடு துளியும் ஒட்டாத  ஏழை குடும்பத்திலிருந்து வந்து நன்றாக படித்து, படிப்பில் பின்தங்கியிருக்கும் மற்ற மாணவர்களுக்கு உதவும் ஏழை மாணவன் செல்வாவின் கதை. 

கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைத்தது என்கிறார்கள், ஆனால் அவர் அந்த வேலைக்குச் சென்றதாக தெரியவில்லை. இவண்ட் ஃபோட்டோகிராஃபராகி திருமணங்களில் புகைப்படம் எடுக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன் என்று சொன்னார்களே, எங்கே அவரைக் காணோம் என்று நினைத்தால் இப்போதுதான் அவர் அறிமுகம்! ஒரு திருமணத்தில் கல்யாணியை பார்க்கும் பிரணவிற்கும் கல்யாணி க்கும் காதல்,  திருமணம், குழந்தை பிறப்பு. ஒரு திருமணத்திற்காக சென்னை வரும் பிரணவ், தன்னுடைய கல்லூரிக்குச் சென்று ‌அவர்கள் படித்த பொழுது கிறுக்கிய சுவற்றில் நான் இன்று இப்படி இருப்பதற்கு காரணம் நீ என்று எழுதுவதோடு படம் முடிகிறது. உஸ்.. அப்பாடா..!
 
படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் பிரணவ்! பார்க்க நன்றாக இருக்கிறார், நடிக்கவும் வருகிறது. இன்னும் கொஞ்சம் பட்டை தீட்டப்பட வேண்டும். கல்யாணி க்யூட்! ஆனால் அவரை விட முக்கியத்துவம் தர்ஷணா ராஜேந்திரனுக்குத்தான். அவரும் மிக சிறப்பாக செய்திருக்கிறார். கல்லூரி மாணவியாக அந்த துள்ளல், பிற்பகுதியில் மெச்சூர்ட் நடிப்பு என்று கலக்கியிருக்கிறார். 

பாடல்கள் இனிமை. சினிமாடோப்போகிராஃபி அட்டகாசம்! படம் நீ...ள...ம்..! நீங்கள் 90 கிட்டாக இருந்தால் ரசிக்க முடியுமோ என்னவோ.

Saturday, February 19, 2022

ரைட்டர் (திரை விமர்சனம்)

 ரைட்டர் (திரை விமர்சனம்)




திருவெறும்பூர் போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டராக பணியாற்றும் சமுத்திர கனி காவலர்களுக்கு யூனியன் ஏற்படுத்த முயற்சி எடுப்பதால் பனிஷ்மெண்ட் டிரான்ஸ்ஃபரில் சென்னைக்கு மாற்றப்படுகிறார். அங்கு ஒரு ஆராய்ச்சி மாணவன் எந்த காரணமும் இல்லாமல் கைது செய்யப்பட்டு தனியாக ஒரு லாட்ஜில் காவலில் வைக்கப்படுகிறான். சமுத்திர கனி எழுதிக் கொடுக்கும் கிரைம் சீன் உதவியால் அவனை வெளியே விடுவது போல விட்டு, அவன் மீது குற்றத்தை ஏற்றி மடக்கி பிடிக்கிறது போலீஸ். குற்ற உணர்ச்சியால் தவிக்கும் சமுத்திரகனி அவனுக்கு உதவுவதற்காக ஒரு வழக்கறிஞரை நாட, அந்த மாணவனைப் பற்றிய விவரங்கள் தெரிய வருகிறது. போலீஸில் பணியில் இருந்த பொழுது தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்களைப்பற்றி அவன் ஆராய்ச்சி செய்வதுதான் பிரச்சனைக்கு மூல காரணம். அதோடு தான் செய்யும் செயலின். வீரியம் தெரியாமல் "ஏதாவது ஸ்கூப் கொடுங்கள்" என்று கேட்கும் பத்திரிகை ஆசிரியருக்கு சமுத்திரகனி கொடுக்கும் ஒரு தகவல் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை மிகவும் யதார்த்தமாகவும், அதிகார வர்க்கம் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதையும் தீர்மானமாக சொல்லியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் நாம் பார்க்கும் கதா பாத்திரங்கள் எல்லோரும் நிஜ வாழ்க்கையில் நாம் சந்திப்பவர்கள். ரத்தமும் சதையுமாக நம் முன் உலவுகிறார்கள். 

சமுத்திரகனியின் மற்றொரு முக்கியமான படம். மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். ஆராய்ச்சி மாணவராக வரும் ஹரிகிருஷ்ணன் கிராமத்திலிருந்து வரும் அப்பாவி இளைஞனை அப்படியே கண்முன் கொண்டு நிறுத்துகிறார். அவர் சகோதரனாக நடித்திருப்பவர், பெண் போலீஸாக வரும் இனியா,  போலீஸ் ஸ்டேஷனிலேயே வசித்துக் கொண்டு அஙகுள்ளவர்களுக்கு எடுபிடி வேலைகள் செய்து கொண்டு வாழும் முன்னாள் கைதியாக வருபவர் எல்லோருமே குறிப்பிடத்தக்க வகையில் தங்கள் பங்கை செய்திருக்கிறார்கள். 

"பிரிட்டிஷ்காரன்  காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராக யாரும் செயல்பட கூடாது என்பதற்காக தோற்றுவிக்கப்பட்டது காவல்துறை. இன்னும் அப்படியேதான் இருக்கு. இங்கே நீ ஒரு அடியாள், நான் ஒரு அடியாள். இதற்காக இதை விட்டு ஓடக்கூடாது. நமக்கிருக்கும் அதிகாரத்தை வைத்துக் கொண்டு மக்களுக்கு உதவ வேண்டும்" என்று சமுத்திரகனி ஒரு காட்சியில் சொல்கிறார். 

பிரும்மாண்டம் என்ற பெயரில் படாடோபமான செட்டுகள், வெள்ளை வெளேர், சைரஸ் சீரோ கதாநாயகிகள், கையை நீட்டிய மாத்திரத்தில் வில்லன்களை பறந்து போகச் செய்யும் ஹீரோயிசம் இப்படிப்பட்ட படங்களுக்கிடையே யதார்த்தமாக வரும் ரைட்டர் போன்ற படங்களும் வருவது ஆறுதல்.

Saturday, February 12, 2022

திரை விமர்சனங்கள்

நரை எழுதும் சுயசரிதம் 

ஜெய் பீம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மணிகண்டன் எழுதி இயக்கியிருக்கும் படம். 

ஒரு அலுவலகத்தில் பணியாற்றிய, ரிடையர்மெண்ட் வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒருவரை (டெல்லி கணேஷ்) கம்பெனியை கம்ப்யூடரைஸ் செய்யப் போகிறோம் என்ற காரணம் கூறி நிர்வாகம் கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்பி விடுகிறது. ஓய்விற்குப் பிறகு வீட்டில் தான் புறக்கணிக்கப்படுவதாக புழுங்கும் அவர் ஒரு நாள் தான் பணியாற்றிய அலுவலகத்திற்குச் செல்கிறார். அங்கும் அவமானப் படுத்தப்பட விரக்தியில் முதல்  முறையாக குடித்து விட்டு, மணிகண்டன் மீது டூ வீலரை மோதி இருவருக்கும் கைகலப்பாகிறது. பின்னர் அவர்களிடையே பூக்கும் நட்பால்  அவர்கள் அணுகுமுறையிலும், வாழ்க்கையிலும் ஏற்படும் மாறுதல்கள்தான் திரைப்படம். 

அதுவரை சிடுமூஞ்சியாக, பேத்தியோடு கூட பேசாதவராக இருந்தவர் கலகலப்பாக மாற முயற்சிக்கிறார். பேத்தியோடு விளையாடி, நெருங்குகிறார். 'ஓட ஓட ஓட பாதை முடியல..' என்னும் பாடலை மகன் ரசிக்கும் பொழுது திட்டியவர் அதே பாடலை மிகவும் ரசித்து பாடத்துவங்குகிறார்.

அதே போல் பரட்டை தலை, தாடி, மீசையோடு இருக்கும் மணிகண்டன் டெல்லி கணேஷ் உதவியோடு பளிச்சென்று மாறுகிறார். இந்த மாற்றங்களால் விளைவது என்ன? குடும்பத்தின் ரியாக்ஷன் என்ன? என்பது க்ளைமாக்ஸ்.

படத்தில் பாடல் கிடையாது, தனி காமெடி ட்ராக் கிடையாது. சண்டை கிடையாது ஏன் கதாநாயகியே கிடையாது. டெல்லி கணேஷ்தான் படம் முழுக்க. எப்போதும் போல கிடைத்த வாய்ப்பை செம்மையாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். மனைவி மீது கோபித்துக் கொண்டு நான்கு நாட்களாக பேசவில்லை என்றவரை மணிகண்டன் திட்டி மனைவியோடு பேசச் சொன்னதும், "பேசி விட்டேன்" என்று மணிகண்டனிடம் வெட்கப்பட்டுக் கொண்டே சொல்லும் இடம் ரசனைக்குரியது. 

இந்த படத்தில் ஒரு குறை இது திரைப்படமா? குறும்படமா? என்ற சந்தேகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. ஓ.டி.டி.யில் வெளியாகி விருதுகளை குவித்திருக்கிறது இந்தப்படம்.

Bro Daddy(மலையாள திரைப்படம்)

மலையாள நடிகரான பிருத்விராஜ் நடித்து இயக்கியிருக்கும் 'ப்ரோ டாடி' என்னும் நகைச்சுவை படத்தில் மோகன்லால், மீனா, லாலு அலெக்ஸ், கனிகா, கல்யாணி பிரியதர்ஷன் என்று பலரும் நடித்திருக்கிறார்கள். 

பெங்களூரில் ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலை பார்க்கும் பிரித்விராஜுக்கும், ஐ.டி. ஊழியரான கல்யாணி பிரியதர்ஷனுக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று குடும்ப நண்பர்களான அவர்களுடைய பெற்றோர்கள் பேசுகிறார்கள். அவர்களிடம் பிடி கொடுக்காமல் பேசும் பிரித்வியும், கல்யாணியும் மூன்று வருடங்களாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது பெற்றோர்களுக்குத் தெரியாது. 

திருமணமாகமலேயே கருவுறம் கல்யாணிக்கு கருவை கலைக்க மனம் வரவில்லை, இதற்கிடையில் பிரித்வியை அவசரமாக ஊருக்கு வரச்சொல்லும் மோகன்லால் தன் மனைவி மீனா அதாவது பிருத்வியின் தாயார் கருவுற்றிருப்பதாக கூறுகிறார். அவரிடம் தன்னுடைய காதல் கதையை பிரித்வி கூற மகன் காதலியை கை பிடிக்க லாலேட்டன் எப்படி உதவுகிறார் என்பதை நகைச்சுவையாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.

நடிப்பில் யாருமே குறை வைக்கவில்லை. மோகன்லாலுக்கு இதெல்லாம் ஜுஜுபி!. ஊதி தள்ளிவிட்டார். வில்லனாக நான் அறிந்திருந்த லாலு அலெக்ஸ் இதில் காமெடியிலும் கலக்கியிருக்கிறார். மீனாவுக்கும், கனிகாவுக்கும் பெரிதாக வேலை இல்லை. சின்ன ரோலாக இருந்தாலும் சார்லி நிறைவாக செய்திருக்கிறார். அதைப்போல வெட்டிங் இவெண்ட் மேனேஜ்மென்ட் செய்பவராக வருபவரும் சிறப்பாக செய்திருக்கிறார். கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.

இப்போது வரும் படங்களில் பெண்கள் குடிப்பது போலவும், லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் காண்பிப்பது கவலை அளிக்கிறது. நம் நாட்டில் மதிப்பீடுகள் அத்தனை குறைந்து விட்டதா? அல்லது எனக்கு வயதாகி விட்டதா? 

Monday, January 31, 2022

ரிச்மாண்ட்ஹில்(கனடா) சித்திவிநாயகர் கோவில்

ரிச்மாண்ட்ஹில்(கனடா) சித்திவிநாயகர் கோவில்

நேற்று மாலை கனடாவின் ரிச்சமாண்ட் ஹில் என்னும் இடத்தில் இருக்கும் சித்திவிநாயகர் கோவிலுக்கு சென்றிருந்தோம். சித்திவிநாயகர் கோவில் என்று அழைக்கப்பட்டாலும் விநாயகர், முருகன், சிவன், வெங்கடாசலபதி பெருமாள், துர்க்கை என்று எல்லா  தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. 

இங்கே இப்போது நல்ல குளிர் போகும் வழியெங்கும் மலை மலையாக குவிக்கப்பட்டிருந்த பனி எனக்கு திருவிளையாடல் படத்தை நினைவூட்டியது.

இந்த ஊரில் கோவில்களிலும், பொது கூடங்களிலும் நுழைந்ததும் நம்முடைய ஓவர் கோட்டை கழற்றி மாட்ட ஹாங்கர்கள் இருக்கும். மற்றவர்கள் ஓவர் கோட் டை அவிழ்த்தார்கள். நான் அவிழ்க்க வில்லை, காலில் சாக்ஸையும் அணிந்து கொண்டுதான் உள்ளே சென்றேன். எனக்கு இணையாக சிலர் இருந்தனர். 

வடக்கத்திய பாணியில் சலவைக் கல் விக்கிரகங்களை எதிர்பார்த்துச் சென்ற எனக்கு முற்றிலும் தென்னிந்திய பாணியில் அமைந்திருந்த அந்த கோவில் இனிய ஏமாற்றத்தை தந்தது. 

உற்சவர் விநாயகர்

உற்சவர் முருகன்

பிரும்மாண்டமாண கூடத்தில் விநாயகர், முருகன், வெங்கடாசலபதி சன்னதிகளுக்கு தனித்தனியாக கொடிமரத்துடன் தோரணவாயில். பாண்டிச்சேரி கற்பக விநாயகரை நினைவுபடுத்தும் விநாயகர், டில்லி மலையகத்தின், பெங்களூர் திப்பசந்திரா பாலமுருகன் கோவில்களில் இருப்பதை போன்று நின்ற கோலத்தில் மேலிரண்டு கரங்களில் வேல், மயில், கீழ் வலது கரத்தில் தாமரை மலரோடு பிரும்மாண்ட முருகன். எதிரில் வள்ளிக்கு தனி சன்னதி. 

பெருமாள் உற்சவர்

வெங்கிடாசலபதி சன்னதிக்கு நேரே தனி சன்னதியில் அமர்ந்த கோலத்தில் மஹாலட்சுமி.  பெருமாளுக்கு அருகில் சக்கிரத்தாழ்வார்.

 ராம,லட்சுமண்,சீதாவோடு ஆஞ்சநேயர் மற்றும் ஆழ்வார்கள் தனியே எழுந்தருளியிருக்கிறார்கள். 





இதைத்தவிர அமர்ந்த கோலத்தில் சரஸ்வதி, நின்ற கோலத்தில் துர்க்கை, சிவலிங்கத்திற்கு அருகில் நடராஜர், திரிபுரசுந்தரி, பைரவருக்கு தனி சன்னதிகள் மற்றும் நவக்கிரகங்களும் இருக்கின்றன. 


நேற்று (சனி)பிரதோஷம் என்பதால் சுவாமி புறப்பாடு முடிந்து நந்திக்கும், ஸ்வாமிக்கும்  பூஜை நடந்து கொண்டிருந்தது. தீபாராதனை பார்த்து விட்டு கிளம்பினோம். மிகவும் திருப்தியாக இருந்தது. 


பிரதோஷ பூஜையில் பக்தர்கள்

சேஷ வாகனம்

ஹனுமந்த, கருட வாகனங்கள்

கோவில் வாசலில் பேத்தியோடு நான்

Saturday, January 29, 2022

ஆயிரம் பொய் சொல்லி ஒரே ஒரு பொய் சொல்லி ஒரு கல்யாணம்

ஆயிரம் பொய் சொல்லி 

ஒரே ஒரு பொய் சொல்லி ஒரு கல்யாணம்


"தீர்க்க சுமங்கலி பவ

ஆயுஷ்மான் பவ, ஷேமமா இருக்கணும்.. சீக்கிரம் மாப்பிள்ளை வரட்டும்.."
தன்னை நமஸ்கரித்த சீதாராமனையும், அவன் மனைவி ஜானகியையும் ஆசிர்வதித்தார் ராம சுப்பு. 

எழுந்திருந்தவர்களிடம் "சக்குவோட ஜாதகம் எடுத்துட்டியா?"  

"எடுத்தாச்சு.. ஆனா ஒண்ணும் சரியா அமையல, ரெண்டு மூணு பேர் வந்து பாத்துட்டு, நிறம் மட்டுனு சொல்லிட்டு போயிட்டா, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌இவளுக்கு
அப்புறம் இன்னும் ரெண்டு பேர் இருக்கா" கவலையோடு சீதாராமன் சொன்னார்.

"என்ன வயசாறது?"

"பதினெட்டு நடக்கறது.."

"எப்படி பாக்கற..?"

"நல்ல குடும்பமா இருக்கணும், அதான் முக்கியம்."

அது சரி, பையன் உத்யோகத்துல இருக்கணுமா? கிராமத்துல விவசாயம் பார்த்ததுண்டு இருந்தா பொண்ணு குடுப்பியா?"

"அதுக்கென்ன..? நீங்க பாத்து நல்ல பையன்னு சொன்னா போதாதா..?"

பக்கத்து ஊரு பட்டாமணியர் மஹாதேவன் என்னோட சிநேகிதன்தான். அவன் கடைசி பையனுக்கு பொண்ணு தேடிண்டிருக்கான், அவனுக்கு மூணு பசங்க, பெரிய பையன் தஞ்சாவூரில் வக்கீல், அடுத்தவன் பட்டணத்துல வேலையா இருக்கான். இவன் ஊரோடு தங்கி விவசாயம் பாக்கறான். அவாளுக்கு நூறு வேலி நிலம். மாமி நல்லவ, நம்பி கொடுக்கலாம்"

"நீங்க இவ்வளவு தூரம் சொல்றது போதாதா? நான் ஊருக்கு போய் ஜாதகம் அனுப்பறேன்.."

"அனுப்பறயா..?" என்ன யாருக்கோ மாதிரி பேசற? ஒரு நல்ல நாளாக பாத்து  கையோடு எடுத்துண்டு வா..
நாம நேர பாத்து ஜாதகத்தை குடுத்துட்டு பையன் ஜாதகம் வாங்கிட்டு வரலாம். பையனையும் நேர பாத்த மாதிரி இருக்கும். அப்புறம் பகவான் சித்தம்.." அவர் சொல்லி முடிக்க, கூடத்தில் மாட்டப்பட்டிருந்த நூறு வருட கடிகாரம் யாரென்று மணியடித்தது. 

"பாத்தியா? மணி அடிக்கிறது" என்றதும் சீதாராமனுக்கு சந்தோஷமாக இருந்தது.  ராமசுப்பு சொன்னபடியே ஒரு நல்ல நாளில் தன் பெண் சகுந்தலாவின் ஜாதகத்தை எழுதிக் கொண்டு, வெற்றிலை பாக்கு, ஒரு சீப்பு ரஸ்தாளி வாழைப்பழம், கல்கண்டு, ஒரு பந்து மல்லிகைப்பூ இவைகளோடு ராமசுப்பு  வீட்டிற்கு வந்தார். அங்கிருந்து இருவரும் வில் வண்டியில் புறப்பட்டனர். 

"வில் வண்டி புதுசா வாங்யிருக்கேளா அத்திம்பேர்?"

"நம்ம மைனரோடது, சம்பந்தம் பேசப் போறோம், கொஞ்சம் கெளரவமா இருக்க வேண்டாமா?"

இவர்களைக் கண்ட பட்டாமணியம் ஆரவாரமாக வரவேற்றார். வாசலில் பளிச்சென்று கோலம் போடப்பட்டு செம்மண் இடப்பட்டிருந்தது. ஸ்வாமி அலமாரியில் பெரிய தஞ்சாவூர் ராமர் பட்டாபிஷேக படம். வெள்ளி குத்து விளக்குகள் எரிந்து கொண்டிருக்க, உள்ளிருந்து பட்டாமணியத்தின் மனைவி போர்த்திய தலைப்போடு வந்து, " வாங்கோ.. செளக்கியமா? மீனாட்சி குழந்தைகள் செளக்கியமா?" என்று சம்பிரதாயமாக விசாரித்து விட்டு சென்றாள்"

"எல்லாரும் செளக்கியம், ஒரு தாம்பாளம் கொண்டு வா"

அவள் கொண்டு வந்த பித்தளை தாம்பாளம் நன்றாக தேய்க்கப் பட்டு பளிச்சென்று மின்னியது. அதில் இவர்கள் கொண்டு சென்ற வெற்றிலை, பாக்கு, பழம், பூ  இவைகளை எடுத்து வைத்து அதன் மீது சீதாராமன் மகள் சகுந்தலாவின் ஜாதகத்தை எடுத்து வைத்து, "இவன் என் மச்சினன், இவன் பொண்ணு சகுந்தலாவை நம்ம விச்சுவிற்கு பார்க்கலாம்னு தோண்றது, இது சகுந்தலா ஜாதகம்" என்று தட்டை நீட்ட, அவர் அதை வாங்கி சாமிக்கு முன்னால் வைத்து விட்டு, "உட்காருங்கோ.." என்று ஊஞ்சலைக் காட்டினார். 
வந்தவர்கள் ஊஞ்சலில் அமர, அதற்கு எதிரே இருந்த பெஞ்சில் பட்டாமணியம் உட்கார்ந்தார். அவர் மனைவி மூன்று தட்டுகளில் கேசரியும், தட்டையும், ஒரு வெங்கல கூஜாவில் குடிக்க தண்ணீர் மற்றும் வெங்கல டம்ளர் கொண்டு வைத்தாள். 

"சாப்பிடுங்கோ.. " என்று வந்தவர்களை உபசரித்தவர் "ரொம்ப சந்தோஷம்! நீங்க ஜாதகம் கொண்டு வந்திருக்கேள், ஆனா நான் ஜாதகம் பார்க்கற வழக்கம் இல்லை.. ஸ்வாமி ட்ட உத்தரவு கேட்பேன், உத்தரவு கிடைக்கணும். என் மூணு பொண்கள், இரண்டு பசங்களுக்கும் அப்படித்தான் பண்ணினேன்"

"உத்தரவுனா எப்படி? பூக்கட்டி பார்க்கிறதா?"

"இல்லை யில்ல.. உனக்கு தெரியாதா ராமு, எனக்கு பேச்சியம்மன்தான் எல்லாம். நான் இந்த ஜாதகத்தை பிரிச்சு கூட பார்க்க மாட்டேன். கொண்டு போய் அம்பாள் காலடியில் வெச்சு அர்ச்சனை பண்ணுவேன். பிரகாரம் சுத்தி வரும்போது எனக்கு ஒரு மட்டை தேங்காய் கிடைச்சா உத்தரவு கொடுத்தூட்டாள்னு அர்த்தம்"

"மட்டைத் தேங்காயா..?" சீதாராமன் அவநம்பிக்கையோடு கேட்க, 

"ஆமாம், கிடைக்கும், கிடைச்சிருக்கே.." என்றார் அழுத்தமாக. "உங்களுக்கு ஜாதகம் பார்க்கணும்னா தாராளம பாருங்கோ.  அப்புறம் எனக்கு சொல்லுங்கோ, இப்போ இந்த காபியை குடிங்கோ, விச்சு உரம் வாங்க போயிருக்கான்.  இப்போ வந்துடுவான்.

காபியை குடித்து விட்டு அவர்களுக்கு வீட்டை சுற்றிக் காண்பித்தார். மூன்று  கட்டு வீடு, கொட்டில் நிறைய கறவை மாடுகளும், காளை மாடுகளும். 
மாப்பிள்ளை பையனாக விஸ்வநாதனாகிய விச்சுவையும் அவர்களுக்குப் பிடித்தது. 

திரும்பி வரும்பொழுது, "என்ன அத்திம்பேர் என்னவோ சாமி உத்தரவு என்கிறாறே..?" 

"நீ முதலில் ஜாதகப் பொருத்தம் பாரு. யார்கிட்ட காட்டுவ?"

"நம்ம வேம்பு கிட்டதான்" 
பார்த்து ஜாதகம் பொருந்தி யிருக்கிறது என்று தகவல் அனுப்பினார்.

பட்டாணி யம் மஹாதேவன், "ரொம்ப சந்தோஷம். வர புதன் நாள் நன்னா இருக்கு. அன்னிக்கே பேச்சி அம்மன் கோவிலில் உத்தரவு கேட்டு விடுகிறேன். நீங்கள் யாராவது வர வேண்டும் என்றாலும் வரலாம்"  என்று கூற, ராமசுப்பு அவரோடு செல்வதாக முடிவாயிற்று. 

ராமசுப்பு நேராக கோவிலுக்கு வந்து விடுவதாக கூறிவிட்டு, மஹாதேவன் வருவதற்கு சற்று முன்னதாகவே கோவிலை அடைந்து விட்டார். கோவில் வாசலில் பூக்கடை வைத்திருந்த சண்முகம் பண்டாரத்திடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். 
மஹாதேவன் வண்டி வருவது தெரிந்ததும்,  "பார்த்துக்கோ" என்று விட்டு நகர்ந்து கோவில் வாசலுக்கு சென்று நின்று கொண்டார். 

இருவரும்  சேர்ந்து கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து விட்டு வெளியே வந்து பிரகாரத்தை சுற்றத் தொடங்கினர். ராமசுப்பு தெரிந்தவர் ஒருவரோடு பேசியதில் கொஞ்சம் பின் தங்கினார், பிரகாரம் முடியும் தருவாயில் மஹாதேவன் கண்ணில் அந்த தேங்காய் பட்டது. வளைந்து நின்றிருக்கும் தென்னை மரத்தை ஏறிட்டார். பின்னர் அந்த தேங்காயை எடுத்துக் கொண்டு ராமசுப்பு வர காத்திருந்தார். 

"ராமு இங்க பார் மட்டை தேங்காய், இப்போதுதான் மரத்திலிருந்து விழுந்திருக்கிறது, அம்பாள் உத்தரவு கொடுத்துட்டா" என்று மகிழ்ச்சியோடு கூற, அம்பாள் சன்னதியை நோக்கி கும்பிடு போட்டவர் சண்முகம் பண்டாரத்தையும் பார்த்து லேசாக சிரித்தார். மனசுக்குள் "ஏதோ இந்த மட்டும் மஹாதேவன் மட்டை தேங்காய் கிடைக்கணும்னு சொன்னான், நானே ஒரு தேங்காயை போட்டு வைத்து, அதை வேறு யாரும் எடுத்துக் கொண்டு போய் விடாமல் பண்டாரம் சண்முகத்தையும் காவலுக்கு போட்டு சமாளித்து விட்டோம், அவன் மட்டும் கருட தரிசனம் கிடைக்க வேண்டும் என்று சொல்லியிருந்தால் கதை கந்தலாகியிருக்கும்" என்று நினைத்துக் கொண்டார்.

பிறகு என்ன, விச்சு என்னும் விஸ்வநாதனுக்கும், சக்கு என்னும் சகுந்தலாவிற்கும் சுபயோக, சுப தினத்தில் திருமணம் நடந்து, அறுபது வருடங்களை கடந்து விட்டது. 

பி.கு: மத்யமரில் ஆயிரம் பொய் சொல்லி என்னும் தலைப்பில் நம் திருமணத்தில் சொல்லப்பட்ட பொய் பற்றி எழுதச் சொல்லியிருந்தார்கள். அதற்காக நான் கதை போல எழுதியிருந்தாலும் எங்கள் ஊரில் நிஜமாகவே நடந்த சம்பவம்.