கணம்தோறும் பிறக்கிறேன்
Thursday, October 26, 2023
நவராத்திரி அலப்பறைகள்
Sunday, October 8, 2023
குஷி(தெலுங்கு)
குஷி(தெலுங்கு)
கடவுள் நம்பிக்கை இல்லாத விஞ்ஞானியான ஒருவரின் மகனும், புராண பிரவசனங்கள் செய்யும், கடவுள் மற்றும் சடங்குகள் முடலியவற்றில் தீவிர நம்பிக்கை கொண்ட ஒருவரின் மகளும் காதலித்து மணமுடிக்கிறார்கள். சில காலம் வரை அவர்கள் எக்கச்சக்க முத்தங்களை பரிமாறிக் கொண்டு சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள். கதாநாயகியின் குழந்தை ஆசை நிறைவேறாத பொழுது தன் தந்தை கூறியபடி ஒரு பரிகார ஹோமம் அதுவும் மகன், தந்தை இருவரும் சேர்ந்து செய்ய வேண்டும் என்று ஆராத்யா(ஸமந்தா) வலியுறுத்த, “என் அப்பாவுக்கென்று சொஸைட்டியில் ஒரு மரியாதை இருக்கிறது, அவர் இப்படிப்பட்ட ஹோமங்களை ஒரு நாளும் செய்ய மாட்டார்” என்று விப்லவ்(விஜய் தேவரகொண்டா) மறுத்துவிட, இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு அதிகரித்து பிரிந்து விடுகிறார்கள். கடைசியில் இருவரும் இணைந்தார்களா? விப்லவ் அப்பா ஹோமத்திற்கு ஒப்புக் கொண்டாரா? என்பதுதான் மீதிக் கதை. விப்லவ் மிகவும் இறங்கி வந்து தன் காதலை வெளிப்படுத்திய பிறகும் ஆராத்யா ஏன் அத்தனை பிடிவாதமாக பிரிந்து போகிறாள் என்பது புரியவில்லை.
விஜய் தேவரகொண்டாவின் உயரதிகாரியாக ரோகிணி, அவர் கணவராக ஜெயராம், வி.தே.வின் அம்மாவாக சரண்யா, சமந்தாவின் பாட்டியாக லக்ஷ்மி, என்று நிறைய தெரிந்த முகங்கள். அப்பாக்களாக சச்சின் கேடேகர், முரளி ஷர்மா என்று எல்லோருமே தங்கள் பகுதியை குறைவின்றி செய்திருக்கிறார்கள். சரண்யா அப்பாவி, அம்மா என்னும் டெம்ப்ளேட்டிலிருந்து வெளி வந்தால் நல்லது. கண்ணுக்கினிய லொகேஷன், காதுக்கினிய பாடல்கள், படத்தோடு இணைந்த நகைச்சுவை, விஜய் தேவரகொண்டா, சமந்தாவின் நெருக்க்க்கமான காட்சிகள் படம் ஓடாமல் இருக்குமா? ரசிகர்களுக்கு குஷிதான்!
Sunday, September 24, 2023
போனேனே ஊர்கோலம் பேத்தியோடு – 4 (அரங்கன் ஆலயம்)
போனேனே ஊர்கோலம் பேத்தியோடு – 4 (அரங்கன் ஆலயம்)
![]() |
| படம் உபயம் கூகுள் |
என் பேத்தியோடு திருச்சி கோவில்களுக்குச் சென்றதை மூன்று பகுதிகளாக எழுதினேன். நிறைவுப் பகுதியானா ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்றதை எழுதுவதற்கு ஏனோ இத்தனை நாட்களாகி விட்டது
ஸ்ரீரங்கத்தில் பல வருடங்கள் இருந்திருந்தாலும் ஒவ்வொரு முறை அந்தக் கோவிலுக்குச் செல்லும்பொழுதும் மனம் விகசிக்கும். எத்தனையெத்தனை மகான்கள் இங்கு வந்து அரங்கனை தொழுதிருக்கிறார்கள்! இங்குதானே ஆண்டாளும், திருப்பாணாழ்வாரும் அரங்கனோடு கலந்தார்கள்! பன்னிரு ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில் அல்லவா? இங்கிருப்பது சாட்சாத் ராமபிரானின் முன்னோர்கள் வழிபட்ட, அவர்களின் குலதெய்வம் அல்லவா? என்றெல்லாம் நினைவுகள் அலைமோதும். என் பேத்தியோ முதல்முறையாக திருவரங்கம் வருகிறாள்.
![]() |
| இதை எடுத்தது என் பேத்தி |
நாங்கள் முதலில் 21 கோபுரங்களை தரிசித்து, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, கருடாழ்வாரை தரிசித்தோம். பிரும்மாண்டமான கருடாழ்வாரை பார்த்த அவள், “ஆ..! இவ்ளோ பெரிய கருடனா?” என்று வியந்தாள். “ஆமாம் இங்கு எல்லாமே பெரிசு. பெரிய கோவில், பெரிய பெருமாள், பெரிய திருவடி” என்றேன். அங்கிருந்த கோவில் யானையிடம் ஆசி வாங்க வேண்டும் என்றாள். ஆசி வாங்கிக் கொண்டு, கட்டண சேவைக்காக நுழைவு சீட்டு வாங்க காத்திருந்த நேரத்தில் அவளுக்கு ஸ்ரீரங்கம் கோவில் தல புராணம் சுருக்கமாக சொன்னேன். அப்போது பெருமாளுக்கு தைலக்காப்பு சாற்றியிருந்ததால் முகமண்டலம் மட்டுமே தரிசனம் செய்ய முடிந்தது. சன்னதியை விட்டு வெளியே வந்தவள் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டிருந்தாள். என்ன காரணம் என்று கேட்டதற்கு, “ஐ குட் நாட் சீ த ஸ்னேக், தே புஷ்ட் மி” என்றாள். “நெக்ஸ்ட் டைம் பார்க்கலாம்” என்று கூறி சமாதானம் செய்து விட்டு, தாயார் சன்னதிக்ககுச் சென்றோம்.
தாயார் சன்னதியில் பூ வாங்கிக் கொண்டோம். அங்கிருந்த வயது முதிர்ந்த அர்ச்சகர் ஒருவர், இவளிடமிருந்து பூவை வாங்கிக்கொண்டு, “இங்கு மூன்று பேர்கள் இருக்கிறார்கள், ரங்கநாயகி, பூமாதேவி, மஹாலக்ஷ்மி, இந்த மூவரில் யாருக்கு இந்த பூவை சாற்ற வேண்டும்? ஒன்? டூ? திரி?” என்றார். அவள் டூ என்றதும், மத்தியில் இருந்த தாயாருக்கு சாற்றி, எங்களுக்கு பிரசாதம் கொடுத்தார்.
*அங்கிருந்து கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றிய இடத்திற்கு வந்ததும், கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றிய பொழுது அவர் ராமாயணத்தில் நரசிம்ம அவதாரத்தை விவரித்திருந்த விதம் சரியில்லை என்று அங்கிருந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் கூறினாலும் மேட்டழகியசிங்கராகிய நரசிம்மர் கர்ஜனை செய்ததால் ஸ்ரீவைஷ்ணவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள்” என்று நான் சொன்னதும், “அரங்கேற்றம் என்றால் என்ன?” என்று கேட்டாள். “புக் பப்ளிஷ் பண்ணி, அதை லான்ச் பண்ணுவது” என்றேன். உடனே, எனக்கு அந்த நரசிம்மரை பார்க்கணும்” என்றாள்.
அந்த படிகளில் ஏறிச் சென்றால் அவரை தரிசிக்கலாம். நீ போய் தரிசனம் செய்து விட்டு வா. நேற்று மலைக்கோட்டையில் ஏறியதில் எனக்கு கால் வலிக்கிறது. நான் கீழே நின்றபடியே தரிசித்துக் கொள்கிறேன்” என்று அவளை மேலே அனுப்பினேன். மேட்டழகிய சிங்கரை தரிசித்துவிட்டு வந்தவள், “வென் ஐ ரோட் அ புக் அண்ட் பப்ளிஷ், யூ ஷுட் ஹெல்ப் மீ” என்று அவரிடம் சொல்லிவிட்டு வந்தேன்” என்றவள் தொடர்ந்து, “வில் ஹீ அண்டர்ஸ்டாண்ட் இங்க்லிஷ்? பிகாஸ் ஐ பிரேட் டு ஹிம் இன் இங்கிலிஷ் ஒன்லி” என்றாளே பார்க்கலாம்.
எனக்கு சிரிப்பு வந்தது. “தமிழ் கடவுள், சமஸ்கிருத கடவுள், என்றெல்லாம் நாம் பிரித்து பேசும் பொழுது கடவுளுக்கும் இப்படித்தான் சிரிப்பு வருமோ?
*கம்பர் ராமாயணத்தை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்ததற்கு முன் அவருக்கு ஏற்பட்ட தடைகள் பற்றியெல்லாம் நான் கூறவில்லை.
"
Wednesday, August 23, 2023
தாயுமானவராகிய ஜவந்தீஸ்வரர் தரிசனம்
முன்குறிப்பு: இது கோவில் பற்றிய பதிவு. இதில் ஈடுபாடு இல்லாதவர்கள் தயவு செய்து நகர்ந்து விடவும். நன்றி.
தாயுமானவராகிய ஜவந்தீஸ்வரர் தரிசனம்
தாயுமானவர் சன்னிதியில் அபிஷேக நேரம். அதற்குள் அம்பாள் சுகந்த கூந்தலாம்பாளை தரிசித்து விட்டு வந்தோம். தாயுமானவரை தரிசிக்கும் பொழுதெல்லாம் மனம் நெகிழும். ரத்னாவதிக்கு பிரசவம் பாரப்பதற்காக தாயாக வந்தவர் அல்லவா? என் மகளின் இரண்டாவது பிரசவம் கொரோனா காலத்தில் நிகழ்ந்ததால், என்னால் உதவிக்கு போக முடியவில்லை. அவளிடம், “தாயுமானவரை நினைத்துக்கொள்”என்றுதான் சொல்லிக் கொண்டே இருந்தேன். பேத்திக்கும் அந்த கதையைக் கூறினேன். தாயுமானவர் சன்னிதியில் வாழைத்தாரை வைத்து,அர்ச்சனை செய்து, வழிபட்டுவிட்டு, உச்சி பிளையாரை தரிசிக்கச் சென்றோம். வழியில் குளிர் பானங்கள், சிப்ஸ் போன்றவை விற்கும் சிறிய கடை வைத்திருப்பவர் ஐநூறு ரூபாய்க்கு சில்லறை இருக்கிறது என்று கூறி ஆச்சரியமூட்டினார். பே.டி.எம். வைத்திருந்தாலும், “சில்லறை இல்லை என்று கூறினால், வியாபாரம் பண்ண முடியாது, தினசரி இரவு பெட்ரோல் பங்கில் சில்லறை மாற்றிக் கொண்டுவிடுவேன்” என்றார். உச்சிப் பிள்ளையாரை வணங்கி, கீழே இறங்கினோம்.
![]() |
| ஊர்த்துவ தாண்டவ சிற்பம் |
![]() |
| இந்த சங்கிலி இரும்பினால் ஆன தில்லை, கருங்கல் சங்கிலி! |
கீழே இறங்கும் பொழுது, என் பள்ளி பருவத்தில் தோழிகளொடு பெட் வைத்து கீழே இறங்கியபொழுது கால் தடுக்கி விழுந்து, சுளுக்கிக் கொண்டு, கால் புசுபுவென்று வீங்கிக் கொண்டு, பள்ளிக்கு ஒரு வாரம் லீவு போட நேர்ந்ததை சொன்னதைக் கேட்டு, பயந்து விட்டாள். “யூ ஆர் டெல்லிங் ஸ்கேரி ஸ்டோரி” என்று மெதுவாக இறங்கினாள். சாரதாஸில் கொஞ்சம் பர்சேஸ் செய்து கொண்டு(திருச்சிக்கு போய் விட்டு சாரதாஸ் போகாமல் வர முடியுமா?), அவளுக்கு ஒரு பட்டர் ஸ்காட்ச் ஐஸ் க்ரீமும், நான் ஜிகிர் தண்டாவும் சாப்பிட்டு விட்டு வந்தோம். ஜிகிர் தண்டா சென்னையில் ஒரு மாதிரியாகவும் திருச்சியில் வேறு மாதிரியாகவும் இருக்கிறது. மதுரையில் எப்படி இருக்கிறது என்று சுவைத்து பார்க்க வேண்டும்.
தல புராணம்:
இப்போது தாயுமானவர் என்று அறியப்பட்டாலும், ஆதி காலத்தில் இவருக்கு ஜவந்தி நாதர், அல்லது ஜவந்தீஸ்வரர் என்றுதான் திருநாமம். ஜவந்தி பூக்கள் நிறைந்த காடாக இருந்ததால் அந்தப் பெயர். அம்பாள் மட்டுவார் குழலம்மை அல்லது, சுகந்தி கூந்தலாம்பாள். இந்த ஜவந்தீஸ்வரரிடம் பக்தி பூண்ட ரத்னாவதி என்னும் செட்டிப் பெண் தினசரி அவரை வந்து தரிசனம் செய்வாள். அவள் கருவுற்றபொழுது அவளுடைய தாயார் பிரசவ நேரத்தில் உதவி செய்வதற்காக புறப்பட்டு வருகிறாள். ஆனால், அந்த சமயம் கொள்ளிடத்தில் வெள்ளம் வந்துவிட, அவளால் வர முடியவில்லை. ரத்னாவதிக்கு பிரசவ வலி எடுத்து விடுகிறது. அவள் தினசரி சென்று வணங்கிய ஜவந்தீஸ்வரர் தானே ரத்னாவதியின் தாயாரைப் போல வந்து, பிரசவம் பார்த்து, அதற்குப் பிறகு அவளுக்கு பத்தியம் வடித்து போடுவது, குழந்தையை குளிப்பாட்டுவது போன்றவைகளை செய்கிறார்.
வெள்ளம் வடிந்த பிறகு, மகள் வீட்டிற்கு வருகிறாள் தாய். தூளியில் குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது. ஏதோ வேலையாக இருந்த மகள் வீட்டிர்க்குள் நுழையும் அம்மாவிற்கு முகமன் கூறி வரவேற்கவில்லை. தன்னை மகள் வரவேற்காததை விட, மகளின் வடிந்த வயிரும், தூளியில் தூங்கும் குழந்தையும் அதிர்ச்சி அளிக்கின்றது. “ என்னடி இது? குழந்தை பிறந்து விட்டதா? என்ன குழந்தை? எப்போது பிறந்தது?” என்று தாயார் கேட்டது மகளுக்கு ஆச்ச்ரயமாக இருந்தது. “ என்னம்மா? நீதானே பிரசவம் பார்த்தாய்? இப்போது புதுசா, எதுவும் தெரியாத மாதிரி கேட்கிறாய்?” “நான் வந்தேனா? ஆற்றில் வெள்ளம் வந்ததால், என்னால் வர முடியவில்லை, வெள்ளம் வடிந்த பிறகு இப்போதுதான் வருகிறேன்” என்று அம்மா சொன்னதும் அதிர்ச்சியடைந்த ரத்னாவதிக்கு தனக்கு தாயாக வந்து உதவியது அந்த ஜவந்தீஸ்வரர்தான் என்பது புரிய, “எனக்காக இறங்கி வந்தீர்களா?” என்று புளகாங்கிதம் அடைந்து கேட்கிறாள். சிவ பெருமானோ, நீ தினசரி என்னைப் பார்க்க மேலே ஏறி வந்தாயே? அதனால்தான் நான் உனக்காக இறங்கி வந்தேன்” என்றாராம். அது முதற்கொண்டே பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக நேர்ந்து கொண்டு தாயுமானவர் சன்னிதியில் வாழைத்தார் சமர்ப்பிக்கும் வழக்கம் உண்டு.
திருச்சி மலைக்கோட்டை இமயமலையை விட மூத்தது. கல் தோன்றி மண் தோன்றா காலத்து..’என்பார்களே அப்படி உலகில் முதலில் தோன்றிய கல் மலை இது. இதன் மேலிருக்கும் கோவில் மகேந்திரவர்மன் காலத்து குடைவரை கோவில். இங்கிருக்கும் லிங்கத் திருமேனி திருவுடைமருதூர் மஹாலிங்கத்திற்கு இணையாக பெரிதானது. பின்னாளில்தான் இவைகளை விட பெரிய தஞ்சை பெருவுடையார் கோவில் கட்டப்பட்டது. மூன்று முழமும் ஒரு சுத்து,முப்பது முழமும் ஒரு சுத்து என்னும் சொலவடைக்கு காரணமான கோவில்கள் இவை. அதாவது இறைவனுக்கு சாற்றும் ஆடை மூன்று முழமாக இருந்தாலும் ஒரு சுற்றுதான் வரும், முப்பது முழமாக இருந்தாலும் ஒரு சுற்றுதான் வரும் என்பது பொருள்.
தாயுமானவர் மீது அதீத பக்தி பூண்டவர் ஸ்ரீதர ஐயாவாள் அவர்கள். தாயுமானவரை தரிசிக்கும் பலர் தங்கள் தாயை நினைவு கூர்ந்து கண் பனிப்பதுண்டு.
நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறஎன்னுள்ளங் குளிரும்மே
Wednesday, August 16, 2023
குருவாயூர் கோவில் - முத்தரசநல்லூர், திருச்சி
முன் குறிப்பு: இது ஆலயம் சம்பந்தப்பட்ட பதிவு. இதில் ஈடுபாடு இல்லாதவர்கள் தயவுசெய்து நகர்ந்து சென்று விடுங்கள்
குருவாயூர் கோவில் - முத்தரசநல்லூர், திருச்சி
சமீபத்தில்
வாட்சாப், ஃபேஸ்புக், எல்லாவற்றிலும் திருச்சிக்கு அருகில் கரூர் மார்க்கத்தில் இருக்கும்
முத்தரசனல்லூர் என்னும் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் குருவாயூரப்பன் கோவிலைப்
பற்றி செய்திகள் வந்தது. அவைகளை படித்ததிலிருந்து அடுத்த முறை திருச்சிக்கு செல்லும்
பொழுது அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். என் மன்னிக்கும் அந்த விருப்பம்
இருந்ததால், நாங்கள் இருவரும் என் பேத்தியோடு அண்ணா வீட்டிற்கு தெரிந்த ஆட்டோவில் கிளம்பினோம்.
கரூர் டர்னிங்கில் வலதுபுறம் திரும்பி கரூர் சாலையில் பயணித்தால், முதலில் வருவது கம்பரசம்பேட்டை.
அதைக் கடந்ததுமே ஆங்காங்கே குருவாயூரப்பன் கோவில் 3கி.மீ., 2.கி.மீ என்ற அறிவிப்பு
பலகைகள் நாம் சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறோம் என்ற தைரியம் தருகின்றது.
முத்தரசநல்லூர் ஊருக்குள் நுழைந்ததுமே குருவாயூரப்பன் கோவில் வந்து விடுகிறது. கேரள பாணியில் கட்டப்பட்ட விஸ்தாரமானகோவில். உள்ளே நுழைந்ததும் கொடி மரத்தின் கீழே வேண்டிக்கொண்டு காணிக்கையாக செலுத்தப்பட வேண்டிய பொருள்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதைத்தாண்டி உள்ளே சென்றால் குழந்தை கண்ணனை தரிசிக்கலாம். உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அழகு! தரிசித்துக் கொண்டு வெளியே வந்தால் வெளிச்சுற்றில் ஐயப்பன், வேட்டைகொருமகன் சன்னதிகளும், துலாபாரம் பிரார்த்தனை செலுத்துவதற்காக பெரிய தராசும் இருக்கின்றன. உள் சுற்று சுவர்களில் குருவாயூர் கோவிலில் இருப்பது போலவே மியூரல் ஓவியங்கள் வரைந்து கொண்டிருக்கிறார்கள். மாலையில் விளக்கேற்றுவதற்காக வெளிப்பிரகார சுவற்றை ஒட்டி பித்தளை சட்டங்களில் விளக்குகள். அங்கு போலவே இங்கும் ஆண்கள் மேல் சட்டை அணிந்து கொள்ள அனுமதி இல்லை.
![]() |
| குளத்தின் முகப்பு |
கோவிலுக்கு
எதிரே அழகான பெரிய குளம். நிறைய மின்சார விளக்கு அலங்காரங்கள் இருந்தன. பக்கத்தில்
நாராயணீய மண்டபம் என்று பெரிய ஹால். விசேஷ நாட்களில் நாராயணீய பாராயணம், பஜனை போன்றவைகள்
நடத்தவும், பூணூல், ஆயுஷ ஹோoமம் போன்ற விசேஷங்களுக்கு வாடகைக்கும் விடப்படும் என்ற அறிவிப்பை
காண முடிகிறது.
![]() |
| நாராயணீய ஹாலின் மேடையில் இருக்கும் சிற்பம் |
குளத்தைச்
சுற்றி மஹாபெரியவருக்கும், ஷிர்டி சாய்பாபாவுக்கும் சன்னிதிகள் வரப்போகின்றன. மஹா பெரியவரின்
அனுக்ரஹத்தால்தான் இந்தக் கோவில் கட்டப்பட்டதாம். நாங்கள் பார்க்கவில்லை. அன்று கோவிலில்
இரண்டு குழந்தைகளுக்கு அன்னப்பிராஸனம் நடந்தது. ‘குருவாயூருக்கு வாருங்கள், ஒரு குழந்தை
சிரிப்பதை பாருங்கள். ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன் உட்கார்ந்திருப்பதை பாருங்கள்’
என்னும் கண்ணதாசன் பாடல் நினைவுக்கு வந்தது. இனி அதற்கு குருவாயூருக்கு போக வேண்டாம்,
திருச்சியிலேயே பார்க்க முடியும். பார்த்து அனுபவியுங்கள். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!
Sunday, August 13, 2023
போனேனே ஊர்கோலம் பேத்தியோடு…
போனேனே ஊர்கோலம் பேத்தியோடு…
வெளிநாட்டில்
வசிக்கும் என் மகள் வயிற்று பேத்திக்கு ஜூலையில் கோடை விடுமுறை தொடங்கியது. நான்கு
வருடங்களுக்குப் பிறகு இந்தியாவிற்கு வந்திருக்கும் பேத்தியை திருச்சிக்கு அழைத்துச்
சென்று கோவில்களை காண்பிக்க நினைத்தேன். ஏன் திருச்சி என்கிறீர்களா? திருச்சிதானே எங்கள்
ஊர், எங்கள் ஊர் பெருமையை பேத்திக்கு சொல்ல வேண்டாமா?
23.7.23
அன்று தேஜசில் திருச்சிக்கு புறப்பட்டோம். எங்கள் இருவருக்கும் அடுத்தடுத்த சீட் அமையாமல்,
முன்னும், பின்னுமாக அமைந்தது. ஆனாலும், நான் தனியாக உட்கார மாட்டேன் என்றெல்லாம் படுத்தாமல்,
தனியாக அமர்ந்து கொண்டாள். ஸ்ரீரங்கத்தில் என் சகோதரர் வீட்டிற்குச் சென்று, உணவருந்தி,
ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டு, மாலை அவளை திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு
அழைத்துச் சென்றேன். போகும் வழியில் அவளுக்கு அந்தக் கோவிலின் *தல புராணத்தை சொன்னேன்.
கதையை
கேட்டு விட்டு, “ஐ ஸ்டில் டோண்ட் அண்டெர்ஸ்டான்ட் வொய் டிட் த ஸ்பைடர் கில் த எலிஃபெண்ட்?”
என்று கொக்கி போட்டாள்.
“நம்ப,
சாமி மேல வெயில் படக்கூடாதுனு வெப் கட்டினா, அதை அந்த எலிஃபெண்ட் கலைத்து விடுகிறதேனு
யானை மேல ஸ்பைடருக்கு கோபம், அதான்”
“வொய்
இட் டுக் ரீ பர்த் ஆஸ் எ கிங்க்?”
“நாம
சாமிக்கு கொஞ்சமா ஏதாவது கொடுத்தால் கூட, அவர் அதை நமக்கு மல்டிபில்ஸா திருப்பி கொடுப்பார்.
ஸ்பைடரா இருந்தப்போ சாமி மேல வெயில் படக்கூடாதுனு அது வெப் கட்டித்து இல்லையா? தனக்கு
நிழல் கொடுத்த அந்த சிலந்தியை அடுத்த ஜென்மத்தில் ராஜாவா பொறக்க வெச்சார். அதுவும்
அந்த ஜென்மாந்திர ஞாபகத்தாலா ராஜாவா பொறந்ததும் நிறைய கோவில்களை கட்டினார்”.
என்னுடைய
இந்த பதில் அவளுக்கு எவ்வளவு தூரம் புரிந்தது என்று தெரியவில்லை. அதற்குப் பிறகு கேள்வி
எதுவும் வரவில்லை. அது மாலை நேரம் என்றதால் அகிலாண்டேஸ்வரி வெள்ளை ஆடை உடுத்தி சரஸ்வதி
ரூபத்தில் காட்சி. பேத்தியிடம்,”பார் இப்பொழுது அம்பாள் சரஸ்வதி ரூபத்தில் இருக்கிறாள்,
நன்றாக படிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்” என்றதும், “மொத்தம் எத்தனை ரூபம்?” என்றாள்.
“மூன்று,
காலையில் துர்கா, மதியம்(உச்சி காலத்தில்) லட்சுமி, மாலையில் சரஸ்வதி” என்றேன். தீபாராதனை
காட்டும் வரை நிற்க அனுமதித்தார்கள். தரிசித்துக் கொண்டு, பிரகாரத்தை வாம் வரும் பொழுது
அங்கிருக்கும் சுப்பிரமணியரின் போர்க்கோல சிற்பத்தின் அழகை அவளுக்கு இந்த வயதில் ரசிக்கத்
தெரியாமல் போகலாம், இருந்தாலும் காட்டினேன்.
ஸ்வாமி
சன்னதிக்குச் செல்லும்பொழுது அந்தக் கோவில் பஞ்சபூத தலங்களில் தண்ணீருக்கானது என்றதும்,
“அதனால்தான் என்ட்ரென்சில் தண்ணீராக இருந்ததா?” என்றாள். பிரதான நுழைவு வாயிலுக்கு
அருகில் தரையோடு பதிக்கப்பட்டிருந்த குழாயிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது.
அதைத்தான் குறிப்பிட்டாள். பிறகு, “ஃபயருக்கான டெம்பிள் எது?” என்று கேட்டாள். திருவண்ணாமலை
என்றதும், “வென் ஆர் யூ கோயிங் டு டேக் மீ தேர்?” என்றாள். “பார்க்கலாம்” என்றேன்.
ஜம்புகேஸ்வரரை வணங்கி, பிரகாரத்தை வலம் வந்து, நவகிரகங்களை வணங்கி, அழகான கால பைரவரை
வணங்கி, தட்சிணாமூர்த்தியை வணங்கி, வெளியில் கொடிமரத்திற்கு அருகில் இருக்கும் வெகு
அழகான சோமாஸ்கந்தர், சிவன் பார்வதி சிற்பங்களுக்கு முன் புகைப்படம் எடுத்துக் கொண்டு
வீடு திரும்பினோம்.
கோவில்
வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்த பிச்சைக்காரர்களின் யாசகத்தை நான் கண்டு கொள்ளாமல்
வந்ததும், “பாட்டி, வொய் யூ ஆர் நாட் மைண்டிங் த பெக்கர்ஸ்?” என்று கேட்டாள். “ஒருவருக்கு
கொடுத்தால், நிறைய பேர்கள் வருவார்கள்” என்றேன். “பட் தே ஆர் புவர் பெக்கர்ஸ்” என்றாள்.
குழந்தைகளோடு கோவிலுக்கு வரும்பொழுது சில்லறையாக மாற்றிக் கொண்டுவர வேண்டும் என்று
நினைத்துக் கொண்டேன்.
மறுநாள்
முத்தரசநல்லூர் குருவாயூர் கோவிலுக்கும், மலைக்கோட்டைக்கும் சென்ற அனுபவங்களை பார்க்கலாம்
*ஜம்புகேஸ்வரர்(ஆகிலாண்டேஸ்வரி)
கோவிலின் தல புராணம் சுருக்கமாக:
இந்த
இடம் வெண்நாவல் மரங்கள் நிறைந்த காடாக இருந்த பொழுது, சிவலிங்கம் ஒன்று நாவல் மரத்தினடியில்
இருந்தது. சிலந்தி ஒன்று அந்த சிவலிங்கத்தின் மேல் வெய்யில் படாமல் வலை கட்டும். அதே
சிவலிங்கத்திற்கு தன் தும்பிக்கையில் நீர் நிரப்பிக் கொண்டு வந்து, அதனால் அபிஷேகம்
செய்து, பூவை சாற்றி வழிபடும். அந்த யானை சிலந்தி வலையை அசிங்கம் என்று கருதி கலைத்து
விடும். மறு நாள் சிலந்தி மீண்டும் வலை பின்னும், யானை கலைக்கும். இது தொடர்ந்தது.
தான் பின்னிய வலையை யார் அழிக்கிறார்கள்? என்று கவனித்த சிலந்தி, அந்த வேலையை செய்வது
ஒரு யானை என்பதை தெரிந்து, ஒரு நாள் அதன் தும்பிக்கைக்குள் நுழைந்து கடித்து விடுகிறது.
அந்த போராட்டத்தில் இரண்டுமே இறந்து விடுகின்றன. அந்த சிலந்திதான் கோசெங்கட்ச்சோழனாக
மறு பிறவி எடுத்து, சிவபெருமானுக்கு 100 கற்றளிகளை எடுப்பித்தார். யானை முனிவராக பிறந்தது.
Sunday, August 6, 2023
விதியின் கைகள்
விதியின் கைகள்
“என்னங்க, இந்த வருஷம் லீவுக்கு பெங்களூர் போலாமா? சங்கர் கூப்பிட்டுக்கிட்டே இருக்கான்|” சந்திரா, கணேஷிடம் கேட்டாள்.
சோபாவில்
அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்த கணேஷ், தன் மடியில் தலை வைத்து உறங்கிய மகனை
தூக்கி கட்டிலில் கிடத்தி, குழந்தைக்கு போர்வையை போர்த்தி, மின் விசிரியை நிதானமாக
சுழலவிட்டு, மின்சார கொசு விரட்டியை ஆன் செய்து விட்டு மீண்டும் வந்து சோஃபாவில் அமர்ந்து,
“லீவு
எப்போ தொடங்குது?” என்றதும் சந்திராவை முந்திக் கொண்டு மகள், “அடுத்த வாரம்பா” என்றாள்.
மகளின்
ஆர்வத்தை ரசித்த கணேஷ், சிரித்துக் கொண்டே, “மொதல்ல உங்க மாமா அந்த சமயத்தில் பெங்களூரில்
இருக்கணுமே.? அவங்க எங்கேயாவது போகாம இருக்கணும்” என்றதும், சந்திரா, “ அவங்க எங்கேயும்
போகல, எனக்குத் தெரியும்” என்றாள்.
“எதுக்கும்
நீ அவங்ககிட்ட கேட்டுட்டு சொல்லு, டிக்கெட் பாக்கறேன்” என்றதும், ஆர்வக் கோளாறில் உடனே
செல்ஃபோனைக் கையில் எடுத்தாள்.
“என்ன
அவசரம்? கார்த்தால கேளேன்” என்றான். ஆனால் அவள் உடனே தம்பியை அழைத்து, அவர்களின் வசதியைக்
கேட்டு, “அவங்க அங்கதான் இருக்காங்க, நீங்க டிக்கெட் பாருங்க” என்றாள்.
“பாக்கறேன்,
ஆனா, என்னால பத்து நாள் இருக்க முடியாது. ஒரு மூணு நாள் இருந்துட்டு வந்துடுவேன். நீ
குழந்தைகளை அழைச்சுகிட்டு ஜாக்கிரதையா வந்துடுவதானே?”
“என்னங்க
இப்படி சொல்றீங்க? நீங்க இல்லாம நாங்க எப்படி ஊர் சுத்திப் பாக்கறது?
“நம்ப
ஊர் போனதும் மைசூர், சாமுண்டி ஹில் எல்லாம் பார்த்துடலாம். லோக்கலா பாக்க வேண்டிய இடங்களுக்கு
உன் தம்பி கூட்டிக்கிட்டு போக மாட்டானா?”
சந்திரா
பதில் சொல்லாமல் மௌனமாக இருக்க, அதை சம்மதமாகக் கொண்டு கணேஷ் பெங்களூருக்கு ரயிலில்
டிக்கெட் புக் பண்ணினான். தம்பி மனைவிக்கும், குழந்தைக்கும் உடைகள் வாங்கிக் கொண்டார்கள்.
அங்கு குளிருமோ என்று குழந்தைகளுக்கு ஸ்வெட்டெர் வாங்கினார்கள். இப்படி ஊருக்குச் செல்ல
வேண்டிய ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் பொழுது அவர்கள் குடியிருப்பில் இரண்டு திருட்டுகள்
நடந்தன.
அவர்கள்
இருந்தது கம்பெனி குடியிருப்பு. வாசலில் ஒரு செக்யூரிடி உண்டே தவிர, இப்போது போல செக்யூரிடி
காமிராக்கள் எல்லாம் வராத காலம். ஏன் ஆண்ட்ராய்டு ஃபோன்கள், ஓலா, ஊபர் போன்றவை வரவில்லை.
அவர்கள் குடியிருப்பில் இரண்டு திருட்டுகள் நடந்தது, இரண்டுமே பட்ட பகலில், வீட்டில்
யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு, கதவை லாகவமாக திறந்து, வீட்டிர்க்குள் வைத்திருந்த
நகைகளையும், பணத்தையும் எடுத்துச் சென்றிருக்கின்றனர். இந்த சம்பவங்கள் கணேஷ், சந்திரா
இருவரையுமே பயப்படுத்தியது.
எதற்கு
வம்பு என்று தங்களிடமிருந்த பத்து பவுன் நகைகளை வீட்டில் வைக்க வேண்டாம் என்று முடிவு
செய்து, அவைகளை தனியாக ஒரு குட்டி பையில் போட்டு, தங்கள் பெட்டியில் துணிகளுக்கு நடுவில்
வைத்து விட்டார்கள். அவர்கள் பெங்களூரை அடைந்து, ஒரு ஆட்டோ பிடித்து, சந்திராவின் தம்பியின்
வீட்டை அடைந்த பொழுது, இரவாகி விட்டது.
இறங்க
வேண்டிய இடம் வந்ததும் குழந்தைகளும், சந்திராவும் முதலில் இறங்கி விட்டார்கள். சந்திராவின்
தம்பியின் வீட்டு வாசலில் இருந்த மரம் தெரு விளக்கின் வெளிச்சத்தை குறைத்தது. பர்சிலிருந்து
பணத்தை எடுப்பதற்காக வெளிச்சம் தேடி சற்று நகர்ந்த கணேஷ் ஆட்டோவிலிருந்து பெட்டியை
இறக்காதது கவனப் பிசகா? அல்லது அதீத நம்பிக்கையா? அந்த ஆட்டோ டிரைவர் தன்னுடைய கூலியை
எதிர்பார்க்காமல் சட்டென்று யூ ட்ர்ன் எடுத்து இவர்கள் சுதாரிப்பதற்க்குள் பறந்து விட்டான்.
பெட்டிக்குள் வைத்திருந்த பத்து பவுன் நகை மட்டுமல்லாமல், மாற்றுடை கூட இல்லாமல் அத்தனையையும்
கண நேரத்தில் தவற விட்டார்கள். போலீஸ் கம்ப்ளெய்ண்ட் கொடுத்தாலும், ஆட்டோவின் ரிஜிஷ்ட்ரேஷன்
எண், ஆட்டோ டிரைவரின் பெயர், போன்ற தகவல்கள் இல்லாததால் பிடிப்பது கஷ்டம். என்றார்களாம்.
அந்த திருடன் அகப்படவேயில்லை. வீட்டில் வைத்தால் திருட்டுப் போய் விடுமோ என்று பயந்து,
கையோடு கொண்டு சென்ற பொருள், வெளியூரில் திருட்டுப் போக வேண்டும் என்பது விதி போலிருக்கிறது.
Friday, July 21, 2023
மாவீரன் (சினிமா விமர்சனம்)
மாவீரன் (சினிமா விமர்சனம்)
சிவகார்த்திகேயனின் பரம ரசிகையான என் பேத்தியின் ஆசையை நிறைவேற்ற அவளை மாவீரன் சினிமாவுக்கு அழைத்துச் சென்றேன்.
தினத்தீ என்னும் செய்தி தாளில் அறுபது வருடங்களாக வந்து கொண்டிருக்கும் மாவீரன் என்னும் தொடருக்கு படம் வரையும் சத்யா (SK) என்னும், யார் வம்புக்கும் போக விரும்பாத இளைஞன் எப்படி நிஜமாகவே மாவீரனாக மாறுகிறான் என்பதுதான் கதை.
சேரியில் வசிக்கும் பல குடும்பங்களை அடுக்கு மாடி குடியிருப்பில் குடியேற்றுவதாக கூறி ஆளும் கட்சியின் அடியாட்கள் வெளியேற்றுகிறார்கள். புது வீடு பார்க்க நன்றாக இருந்தாலும் குடியேறிய சில நாட்களிலேயே பாத்ரூம் தாழ்ப்பாள் கையோடு வருகிறது. சமைக்கும் பொழுது சாம்பாரில் மேல் சுவற்றிலிருந்து பூச்சு விழுகிறது. இதையெல்லாம் தட்டிக் கேட்க வீறு கொண்டு எழும் தாயை அடக்குகிறான். தங்கை குளிக்கும் பொழுது பாத்ரூமில் எட்டிப்பார்ப்பவனை கண்டிக்கும் தாய் தாக்கப்படும் போது அம்மாவின் இழிவான பேச்சால் மனம் நொந்து தற்கொலைக்கு முயல்கிறான். அப்போது காதில் அடிபட, அவனுக்கு ஒரு அமானுஷ்ய குரல் கேட்கத் துவங்குகிறது என்னும் ஃபேண்டஸி கதைதான். அதை ரசிக்கும்படி செய்திருக்கும் சுவாரஸ்யமான திரைக்கதை படத்தின் பலம்.
சிவகார்த்திகேயன் கச்சிதம். அவருடைய ஜோடியாக வரும், இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அசப்பில் சுப்ரமணியபுரம் ஹீரோயின் ஸ்வாதியை நினைவூட்டுகிறார். நிறைவான நடிப்பு. எஸ்.கே.யின் தங்கையாக வரும் பெண், பாத்திரத்தோடு கச்சிதமாக பொருந்தி, சிறப்பாக நடித்திருக்கிறார். அம்மாவாக சரிதா. எத்தனை நாட்களாயிற்று இவரைத் திரையில் பார்த்து? சரிதாவிடமிருந்து நடிப்பு பிரவாகமாக பொங்கி வரும், அதை கண்ட்ரோல் செய்ய இயக்குனருக்கு தெரிந்திருக்க வேண்டும். இந்த இயக்குனருக்குத் தெரிந்திருக்கிறது.
நடிக்க வந்திருக்கும் மற்றொரு இயக்குனர் மிஷ்கின்! இத்தனை நாட்களாக ஸ்டைலிஷாக நாம் பார்த்திருந்த மிஷ்கின் கதர் வேஷ்டி, சட்டை, காட்சியோடு அரசியல்வாதி வில்லனாக மிரட்டியிருக்கிறார்.
பாடல்கள் பெரிதாக கவரவில்லை. முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைகிறது. காதில் பூ தான், வாசமும் இருக்கிறது.
Tuesday, July 4, 2023
பதிலாகும் பதிவு! பிருந்தாவனமும் அதிஷ்டானமும்
பதிலாகும் பதிவு! பிருந்தாவனமும் அதிஷ்டானமும்
ஜெயகுமார் சாரின்
கேள்விக்கு பதில்: ஆம்! ஸ்ரீரெங்கம் கோவிலுக்குள் தசாவதார சன்னிதிக்குள்தான் ராமானுஜரின்
திருமேனி இருக்கிறது. ஆனால் அதை தரிசிப்பது அத்தனை சுலபம் இல்லை. என்னதான் மகானாக இருந்தாலும்,
ஜீவனைப் பிரிந்த உடல் இருக்கும் இடம் என்பதால் அங்கு சென்று விட்டு கோவிலுக்குள் செல்லக்
கூடாது என்றுதான் சொல்வார்கள். பெருமாளை ஏளப்
பண்ணும் பொழுது(ஊற்சவர் திருவீதி வலம் வருவதை வைணவர்கள் ஏளப் பண்ணுவது என்பார்கள்)
அந்த வழியாக வர மாட்டார். தவிர்க்க முடியாமல் அந்த சன்னதியை கடக்க நேர்ந்தால் வாத்தியங்கள்
இசைக்கப்படாது. பெருமாள் உள்ளே சென்றதும் தீர்த்தவாரி நடக்கும். தீர்த்தவாரி என்பது
அபிஷேகம். அதாவது பெருமாளே குளிப்பதாக ஐதீகம். இவையெல்லாம் கோவில் ரகசியங்களாக இருந்தவை.
அந்த ராமானுஜரின்
திருமேனிக்கு வருடத்தில் ஒரு நாளோ, அல்லது சில குறிப்பிட்ட நாட்களோ குங்குமபூவால் அபிஷேகம்
நடக்கும். சிலர் குங்குமப்பூவால் உடலை ஒத்தி எடுப்பார்கள் என்றும் கூறுகிறார்கள். அந்த
அபிஷேகத்திற்கு குங்குமப்பூ வாங்கித் தந்து, பிரசாதமாக அந்த குங்குமப்பூவை பெற்று,
நரம்பு சம்பந்தமான வியாதி உடையவர்கள் சாப்பிட, வியாதி குணமாகும் என்பது நம்பிக்கை.

ராகவேந்திர ஸ்வாமிகள் பிருந்தாவனம்
ராமானுஜரின் உடல் அடக்கம் செய்யப்படாமல் இருப்பதால்தான் அங்கு சென்று விட்டு பெருமாளை தரிசனம் செய்ய செல்லக் கூடாது என்பார்கள். மற்றபடி மகான்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்கள் பூஜிக்கத்தகுந்தவை. உதாரணமாக ராகவேந்திர ஸ்வாமிகளின் பிருந்தாவனம், கோவிந்தபுரம் போதேந்திராள் அதிஷ்டானம். நெரூர் சதாசிவ பிரும்மேந்திராள் அதிஷ்டானம் இவற்றைக் கூறலாம். ரமண மகரிஷி, சேஷத்திரி ஸ்வாமிகள், ஞானானந்தா, யோகி ராம்சூரத்குமார், அரவிந்தர், அன்னை, ஷிர்டி மற்றும் புட்டபர்த்தி சாயிபாபா போன்ற பல மகான்களின் சமாதிகள் வணங்கப்படுபவை. சமீபத்தில் நம்மிடையே வாழ்ந்து மறைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானதிற்கு ஒவ்வொரு மாதமும் அனுஷ நட்சத்திரதன்று வருகை சென்று வழிபடுவதை சிலர் வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளனர்.
மகான்களின் சமாதி மேல் துளசி
செடி வைக்கப்பட்டால் அது பிருந்தாவனம் என்றும், சாளகிராமம் வைக்கப்பட்டால் அதிஷ்டானம்
என்றும் அழைக்கப்படும்.
சன்னியாசிகள் மறைந்து,
அடக்கம் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள் அந்த இடத்தை தரிசிப்பது மிகவும் சிறப்பாம்.
எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு ஒரு முறை கிடைத்தது. ஸ்ரீரங்கதில் இருந்த அஹோபிலம் மடத்து
ஜீயர், மறைந்து ஒரு வாரத்திற்குள் அந்த இடத்தை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு கிட்டியது.
ஸ்ரீரெங்கதில் கொள்ளிடக்கரைக்கு அருகில் ஒரு தசாவதார சன்னிதி உண்டு. அங்குதான் ஜீயரின்
திருமேனி அடக்கம் செய்யப்பட்டிருந்தது. என் அப்பா அப்போது அங்குதான் இருந்தார். அவரைப்பார்க்கச்
சென்றிருந்த என்னை, அப்பாவின் நண்பர் அழைத்துச் சென்று, ஜீயரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த
இடத்தை சேவிக்க வைத்தார். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அன்று அங்கு வருகை
தரவிருந்தார். அவருக்காக, மரத்தில் சரிவு பாதை அமைத்து, அதன் மீது கம்பளம் விரிக்கும்
வேலை ஜரூராக நடை பெற்றுக் கொண்டிருந்தது. பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது, ஏகப்பட்ட
கெடுபிடி.. இருந்தாலும் அப்பாவின் நண்பருக்கு அங்கு பல பேரை தெரிந்திருந்ததால் என்னை
சுலபமாக அழைத்துச் சென்றார். எல்லாம் குருவருள்!. குரு பூர்ணிமாவாகிய இன்று இந்த கட்டுரையை
எழுத நேர்ந்ததும் ஒரு இனிய கோயின்சிடென்ஸ்!
Friday, June 23, 2023
குழந்தை சொன்ன பொய்...
குழந்தை சொன்ன பொய்...
சனிக்கிழமையன்று(17.6.23) தினசரியில்
படித்த ஒரு செய்தி மிகவும் அதிர்ச்சியளித்தது. பெங்களூரு, எலக்ட்ரானிக் சிட்டியில்
எட்டு வயது பெண் குழந்தை ஒன்றை வீட்டில் தனியாக விட்டு விட்டு, வீட்டை விட்டு எங்கும்
வெளியே செல்லக்கூடாது, ஆன் லைனில் படிப்பைத் தொடர வேண்டும் என்று எச்சரித்து விட்டு
அந்த்க் குழந்தையின் தாய் பள்ளியிலிருந்து மகனை அழைத்து வர சென்றிருக்கிறார்.
அம்மா அந்தப் பக்கம் சென்றதும்,
குழந்தை இந்தப் பக்கம் விளையாடுவதற்காக வெளியே ஓடி விட்டது. அம்மா, திரும்பி வந்த பொழுது
வெளியே நின்று கொண்டிருந்த மகளிடம், “ஏன் வெளியே நிற்கிறாய்?” என்று கேட்ட அம்மாவிடம்
உண்மையைச் சொன்னால் என்ன நடக்குமோ என்று பயந்த அந்தக் குழந்தை, அங்கு ஒரு வீட்டிற்கு
டெலிவரி கொடுக்க வந்த பையனை சுட்டிக் காட்டி, “இந்த ஆள் என்னை கடத்திப் போக முயற்சி
செய்தான். அவனிடமிருந்து தப்பித்து இங்கே நின்று கொண்டிருக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறது,
உடனே அந்தக் குழந்தையின் தாய், மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த டெலிவரிபாயை
அடித்திருக்கிறார்கள். ஆனால் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிரா ஃபுட்டேஜை பார்த்ததில்
அப்படியோரு சம்பவம் நடக்கவில்லை, என்று தெரிந்திருக்கிறது. பிறகு அந்த்ப் பையனிடம்
மன்னிப்பு கேட்டார்களாம்.
சாதரணமாக குழந்தைகள் பொய் சொல்லாது
என்பார்கள். இந்தக் குழந்தை பொய் சொன்னது மட்டுமல்லாமல், தான் செய்த தவறை மறைக்க ஒரு
பாவமும் அறியாத வெறொருவர் மீது பழி சுமத்தியிருக்கிறது. இதற்கு காரணம், அந்தக் குழந்தையை
அதன் பெற்றோர்கள் விளையாடவே அனுமதிக்க மாட்டார்களாம். அதனால் பெற்றோர்கள் வீட்டில்
இல்லாத பொழுது குழந்தை விளையாடுவதற்காக வெளியே ஓடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது. அன்று
அம்மாவைப் பார்த்ததும் பயத்தில் அந்த டெலிவரி பாய் மீது அபாண்டமாக பழி சுமத்தி விட்டது.
இதில் அந்த்க் குழந்தையை விட, அந்த தாயின் மீதுதான் அதிகம் தவறு இருப்பதாத தோன்றுகிறது.
குழந்தை பருவத்தில் விளையாட்டு என்பது மிகவும் முக்கியம். அதற்கு அனுமதிக்காமல் இருப்பது
சரி இல்லை. சாப்பாடு, தூக்கம், படிப்பு, இதர ஆக்டிவிடீஸ் எவ்வளவு அவசியமோ அவ்வளவு விளையாட்டும்
அவசியம். விளையாட அனுமதிக்காததே இந்தக் குழந்தையின் தவறுக்கு காரணம். குழந்தைகளை குழந்தைகளாக
இருக்க அனுமதிக்க வேண்டும். திரும்ப கிடைக்காத அந்த அழகான பருவத்தை பெற்றோர்கள் பறித்துவிடக்
கூடாது.
Wednesday, June 14, 2023
அருகி வரும் பழக்கங்கள்
அருகி வரும் பழக்கங்கள்
சென்ற திங்களன்று நெருங்கிய உறவில்
ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எனக்கு ஒரு பேரதிர்ச்சி! டிரஸ்ட் மீ அங்கு ஒரு பெண்
தாவணி அணிந்து கொண்டு வந்திருந்தாள். “பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?..” என்று ஒரு
பழைய பாட்டு உண்டு. இப்போது அதை, “பாவாடை தாவணியில் பார்க்க முடியுமா?..” என்றுதான்
பாட வேண்டும். தாவணி என்பது வழக்கொழிந்து போய் விட்டது. கிராமங்களில் கூட இளம் பெண்கள்
தாவணி அணிவதில்லை. சூடிதார்தான்”. என்றேன்.
அந்தப்
பெண்ணின் தாய், “ஆமாம், கடைகளில் தாவணி கிடைப்பதில்லை. ஒன்று மிகவும் ட்ரான்ஸ்பரெண்டாக
இருக்கும் அல்லது ஜகஜகவென்று இருக்கும். நான் புடவை வாங்கி, அதை தாவணியாக கிழித்துத்
தருகிறேன். உங்களுக்கு ஏதாவது தாவணி கிடைக்கும் கடை தெரிந்தால் சொல்லுங்கள்” என்றார்.
யாரவது தெரிந்தால் சொல்லுங்கள்.
அப்படி
வழக்கொழிந்துகொண்டே வரும் ஒரு நல்ல பழக்கம் பெரியவர்களை வணங்குவது. என் அம்மாவுக்கு
பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டுமே ஒரே ஊர். தெற்குத் தெருவில் பிறந்த வீடு, வடக்குத்
தெருவில் புகுந்த வீடு. ஆனாலும், புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்குச் செல்லும்
போதெல்லாம் இங்கிருக்கும் பெரியவர்கள் எல்லோரையும் நமஸ்கரித்து விட்டுதான் செல்வார்.
அம்மா நமஸ்காரம் பண்ணும் பொழுது, கூடவே நாங்களும் நமஸ்காரம் செய்வோம்.
தீபாவளி
அன்று, எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு, புத்தாடை அணிந்து கொண்டதும், ஸ்வாமிக்கு
நமஸ்காரம் செய்து விட்டு, வீட்டு பெரியவர்களை வணங்கிய பிறகுதான் பட்டாசு வெடிக்கச்
செல்வோம். கார்த்திகை அன்று விளக்கேற்றியதும் பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்வோம்.
காரடையான் நோன்பு அன்றும் நோன்பு சரடு கட்டிக் கொண்டதும் பெரியவர்களுக்கு நமஸ்காரம்
செய்வதுண்டு. கனுப்பொங்கல் அன்று மஞ்சள் கீறிக் கொண்டதும், மஞ்சள் கீறி விடுபவர்களுக்கு
நமஸ்காரம் செய்வோம். பிறந்த நாள், திருமண நாட்களில் நிச்சயம் நமஸ்காரம் செய்வோம். வெளியூர்களுக்குச்
செல்லும்பொழுது ஸ்வாமிக்கும், வீட்டுப் பெரியவர்களுக்கும் நமஸ்காரம் செய்து விட்டுதான்
கிளம்புவோம். என் அக்காவின் ஸ்நேகிதியின் வீட்டில் தினமுமே அம்மாவிடம் தலை பின்னிக்
கொண்டதும் நமஸ்கரித்து விட்டுதான் எழுந்திருப்பார்கள்.
நம் வீட்டுக்கு
வரும் பெரியவர்களுக்கும், நாம் செல்லும் வீடுகளில் உள்ள பெரியவர்களுக்கும் நமஸ்காரம்
செய்வதுண்டு. எங்கள் அத்தைப்பெண் வேடிக்கையாக, “ யாரோ கல்யாணத்தில் என் அப்பா, தூரத்து
சொந்தக் காரரை அறிமுகப்படுத்தி, அவருக்கு நமஸ்காரம் பண்ணச் சொல்றார், அது சரியா தாலி
கட்டும் நேரம், எல்லோரும் தூவும் அட்சதையெல்லாம் என் தலையில் விழுகிறது” என்பாள்.
இப்போது
நமஸ்காரம் செய்யும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. இதற்கு காரணம் நாம்தானோ? நாம்
நடுத்தர வயதில் இருக்கும்பொழுது யாராவது நமஸ்கரிக்க வந்தால், “சீ சீ! நமஸ்காரமெல்லாம்
வேண்டாம்” என்று மறுத்து, அந்த நல்ல பழக்கத்தை வேரறுத்து விட்டு, எல்லோரும் ஹை, ஹை
என்று மாடு மேய்க்கிறோம் வட இந்தியயர்களிடம் பெரியவர்களை வணங்கும் பழக்கம் இன்னும்
இருக்கிறது.
Tuesday, May 30, 2023
Mrs Chatterjee vs Norway(திரை விமர்சனம்)
Mrs Chatterjee vs Norway
(திரை விமர்சனம்)
நார்வேயில்
வசிக்கும் இந்திய இளம் தம்பதியினர் அனிருத்தோவும், தீபிகாவும். அவர்களுக்கு சுபா என்னும்
மகனும், சுசி என்னும் ஐந்து மாத பெண் குழந்தையும் இருக்கின்றன. அவர்கள் வீட்டிற்கு
அடிக்கடி விஜயம் செய்யும் நார்வீஜிய குழந்தைகள் நல அமைப்பின் உறுப்பினர்கள் திடீரென்று
ஒரு நாள் தீபிகா,அனிருத்தாவின் வீட்டில் குழந்தைகள் வளருவதற்கான சரியான சூழல் இல்லை
கூறி குழந்தைகளை தூக்கிச் சென்று விடுகின்றனர். அதற்கு காரணமாக அவர்கள் “தீபிகா குழந்தைகளுக்கு
கையால் உணவூட்டுகிறாள் அது ஆரோக்கியமான பழக்கம் கிடையாது, அனிருத்தா வீட்டு வேலைகளில்
எந்த உதவியும் செய்வது கிடையாது, சுபாவுக்கு ஆடிஸம் பாதிப்பு இருப்பது போலத் தோன்றுகிறது
ஆனால் அதை குணப்படுத்த எந்த நடவடிக்கையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை” என்றெல்லாம்
குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள். அவர்களுக்காக வாதாடிய இந்திய வக்கீல், முதலில்
ஜெயித்தாலும், அவர் இந்தியராக இருப்பதால் இந்த கேஸை உணர்வு பூர்வமாக அணுகுகிறார் என்று
ஸ்டே ஆர்டர் வாங்குகிறது குழந்தைகள் நல வாரியம். அதற்குப் பிறகு அந்த நாட்டைச் சேர்ந்த
ஒரு வக்கீலை அரசாங்கமே நியமிக்கிறது. அந்த சமயத்தில் குழந்தைகள் நல வாரியம் என்ற போர்வையில்
இப்படி அப்பாவி தம்பதியரிடமிருந்து குழந்தைகளை பறித்து, குழந்தை இல்லாதவர்களுக்கு விற்று
விடுகிறார்கள், அரசாங்கம் நியமிக்கும் வக்கீலும் அதன் கையாள் என்ற விவரங்கள் அவளுக்குத்
தெரிய வருகின்றன. ஒரு கட்டத்தில் அவள் கணவனே அவளுக்கு எதிராக திரும்பி விடுகிறான்.
தீபிகா குழந்தையை மீட்டெடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அவளுக்கு வெற்றியை தந்ததா?
என்பதே திரைப்படம்.
தீபிகாவாக ராணி முகர்ஜி. அவரது பூனைக் கண்ணும், கரகர குரலும் எனக்குப் பிடிக்கும். கொஞ்சம் பூசினார்போல் ஆகி விட்டார், அதனால் என்ன? மத்தியத்தர குடும்பத் தலைவி பாத்திரத்திற்கு நன்றாகவே பொருந்துகிறது அந்த தோற்றம். நடிப்பிலும் குறை வைக்கவில்லை. நீதிபதியிடம் வார்த்தைக்கு ஒரு சார் போட்டு பேசும் இடத்தில் மனதை உருக்குகிறார். அவரது கனவராக அனிர்பன் பட்டாசார்யா, வெளியுறவுத் துறை அமைச்சராக நீனா குப்தா.
கதாநாயகன் பாத்திரம் சற்று வீக்காக இருக்கிறது. கதையில் நந்தினி என்றொரு பாத்திரம், அவள்தான் தீபிகாவிடம் குழந்தை நல வாரியம் என்ற பெயரில் நடக்கும் மோசடியை தெரியப்படுத்துகிறாள், ஆனால் அவள் பெயரைச் சொன்னாலே அநிருத்தோவுக்கு எல்லையில்லா கோபம் வருகிறது. தன் மனைவி அவளோடு பேசக்கூடாது என்று தீவிரமாக தடுக்கிறான். யார் இந்த நந்தினி? அவள் மீது அநிருத்தோவுக்கு ஏன் இத்தனை வன்மம்? என்பதெல்லாம் சரிவர தெளிவு படுத்தப்படவில்லை.
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் ஏதோ புண்ணியம் செய்தவர்கள் என்று ஒரு எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு, வெளிநாட்டு வாழ்க்கையின் கடினமான இன்னொரு பக்கத்தை காட்டியிருக்கும் படம். இப்படி ஒரு கதையை எடுத்துக்கொண்டதோடு அதை சண்டை, நகைச்சுவை போன்ற இடைச்செருகல்கள் இல்லாமல், பெரும்பாலும் வெளிநாட்டில் படமாக்கப் பட்டிருந்தாலும் ஃப்ளாஷ் பேக்கில் கூட ஒரு டூயட்டை சேர்க்காமல் கதையில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கும் இயக்குனரை பாராட்டலாம்.
இந்த ஒரு கேஸ் படமாகி விட்டது. இதைப்போல இன்னும் 150 வழக்குக\ள் நிலுவையில் இருக்கிறதாம். கேட்கவே சங்கடமாக இருக்கிறது.
Saturday, May 20, 2023
ஒடிஷா யாத்திரை – 6
ஒடிஷா யாத்திரை – 6
கோனார்க், லிங்கராஜ், பிமலாம்பாள் கோவில்கள்
எங்கள் பயணத்தின் மூன்றாம் நாள், கடைசி நாளும் கூட என்பதால் காலை சிற்றுண்டி சாப்பிட வந்த பொழுதே அறையை காலி செய்து பெட்டிகளை கீழே கொண்டு வந்து விட்டோம். சிற்றுண்டியை சாப்பிட்டு விட்டு எல்லோரும் சொன்னபடி எட்டு மணிக்கெல்லாம் கிளம்பி விட்டோம். அங்கிருந்து கிளம்பி, ஒரு பெட்ரோல் பங்கில் வண்டிக்குத் தேவையான டீசலை நிரப்பிக்கொண்டு ஹைவேயில் விரைந்தது வண்டி. திடீரென்று வண்டியின் அடி பாகத்திலிருந்து ஏதோ சப்தம் வந்தது. டயர் பஞ்சராகியிருக்கும் என்று நினைத்தோம். வண்டியை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு, டிரைவர் இரங்க, வண்டியிலிருந்த சில ஆண்களும் இறங்கினார்கள். அவர்கள் சொன்ன தகவல் அதிர்ச்சி அளித்தது. டயர் எதுவும் பஞ்சராகவில்லை, டீசல் நிரப்பியிருந்த டீசல் டாங்கை தாங்கி பிடித்திருந்த க்லாம்பின் திருகாணி கழன்று விட்டதால், டீசல் டாங்க் கீழே விழுந்து டீசலை சிந்தியபடியே உருண்டிருக்கிறது. கிட்டத்தட்ட ½கி.மீ. உருண்ட டீசல் டாங்க் தீ பிடிக்காமல் இருந்தது இறையருள்தான். பஸ் கம்பெனிக்கு ஃபோன் பண்ணி வேறு ஒரு பேருந்து வரவழைத்தார்கள். இதில் ஒரு மணி நேரம் வீணானது. வெய்யிலுக்கு முன்னால் கோனார்க் சென்று விடலாம் என்று நினைத்தது நடக்கவில்லை. ஆனால் இங்கும் தலைக்கு குல்லா, செல்ஃபி ஸ்டிக் போன்றவை வாடகைக்கும், விலைக்கும் கிடைக்கின்றன.
மெயின் கேட்டிலிருந்து கோனார்க் சூரியன் கோவிலுக்கு செல்லும் வழியில் இரண்டு பக்கங்களிலும் பூங்கா, அழகான சிலைகள்.. ஆனால் அவற்றையெல்லாம் நிதானமாக ரசிக்கவோ, புகைப்படமெடுக்கவோ முடியவில்லை. ஏனென்றால் நல்ல கும்பல், கைடு வந்து விட்டார். எல்லோரும் சேர்ந்து வாருங்கள் என்றார்கள், உள்ளே செல்ல நுழைவு டிக்கெட் உண்டு. அதிலும் இரண்டு பேர் புகைப்படமெடுக்க சற்று நேரம் எடுத்துக் கொண்டதில் எங்களோடு உள்ளே வர முடியாமல் போய் விட்டது. பிறகு எங்கள் குழுவில் ஒருவரை தொடர்பு கொண்டு, டூர் ஆபரேட்டர் போய் அழைத்துக் கொண்டு வந்தார்.
![]() |
| சபா மண்டபம் |
சூரியன் கோவிலுக்கு முன்பு ஒரு மண்டபம் இருக்கிறது. அதை சபா மண்டபம் என்கிறார்கள். அந்த காலத்தில் தேவதாசிகள் எனப்பட்ட நடனமாதர்களின் நடனம் இங்குதான் நடைபெறுமாம். அதைத் தாண்டி பிரதானமான சூரியன் கோவில். பன்னிரெண்டு சக்கரங்கள் மற்றும் ஏழு குதிரைகள் பூட்டிய பிரும்மாண்டமான தேர் வடிவ கோவிலின் மத்தியில் உள்ளே சூரிய பகவான் திருவுரு இருக்குமாம். ஆனால் கோவிலுக்குள் நுழையும் வாசல்கள் போர்ச்சுகீசியர்களால் அடைக்கப்பட்டு விட்டதாம். காரணம் இந்தக் கோவில் தஞ்சை பெரிய கோவிலைப் போல எந்த பூச்சு வேலை இல்லாமல் கற்கள் ஒன்றோடொன்று பொருத்திக் கொள்ளும்படி(inter-locking system) கட்டப்பட்டது. இடையில் இரும்புத் துண்டுகளும், கோபுரத்தின் மேலே 50 டன் எடையுள்ள காந்தமும் பொருத்தப் பட்டிருப்பதால் அந்த காந்தத்தின் ஆகர்ஷணத்தால் கோவில் சிதையாமல் காக்கப்படுகிறதாம். இந்த காந்த சக்தியால் கடலில் சென்ற கப்பல்கள் திசை தவறின. இதனால்தான் போர்ச்சுகீசியர்கள் இந்த கோவிலின் வெளிப்புரத்தை சிதைத்தார்களாம். ஆனால் கருவரைக்கு மேலே இருக்கும் பெரிய 50 டன் காந்தம் அப்புறப்படுத்த பட்டால் கோவில் இடிந்து விடும் என்பதால் அங்கு யாரும் நுழைய்க் கூடாது என்று வாயில்கள் அடைக்கப்பட்டதாம்.
கோவில் முழுவதும் கருப்பு நிற கிரானைட் கற்களாலும், சிவப்பு நிற பாறைகளாலும் கட்டப் பட்டிருக்கிறது. கோணம்+அர்க்கன் = கோனார்க் என்று பொருள் கூறுகிறார்கள். அர்க்கன் என்பது சூரியனின் மற்றொரு பெயர். சூரியனுக்கான இந்த கோவில் முழுக்க முழுக்க ஜியானெண்ட்ரி அடிப்படையில் அமைக்கப் பட்டுள்ளதால் இந்த பெயர். சூரியனின் சுழற்சி, அதன் விளைவான நேரம், வாரம், மாதம், அயணம் இவைகளை குறிக்கும் விதமாகத்தான் இங்கு சக்கரங்கள், அதில் இருக்கும் ஆரங்கள் எல்லாம் அமைக்கப்பட்டிருக்கின்றன.
தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் மனித வாழ்க்கை சம்பவங்களை விளக்கும் சிற்பங்கள். ஒரு பக்கத்தில் மனிதனின் வாழ்க்கையில் மூன்று பருவங்களான குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவ காலங்களில் அவர்கள் ஈடுபடும் செயல்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டிருக்கின்றன. குழந்தை பருவ விளையாட்டுகளை குறிக்கும் சிற்பங்கள் கீழ் பகுதியிலும், இளமைப் பருவ (காம)கேளிக்கைகள் சிற்பங்கள் நடுப் பகுதியிலும், முதுமைப் பருவ இறை வழிபாடுகளை காட்டும் சிற்பங்கள் மேற் பகுதியிலும் செதுக்கப்பட்டுள்ளன. இவைகளில் இளமைப் பருவ கேளிக்கை சிற்பங்களே சுலபமாக பார்க்கக் கிடைக்கின்றன. இதற்கு அந்த கைட் கூறிய காரணம், கலிங்கப் போரில் நிறைய உயிரிழப்புகள். ஜனத்தொகை மிகவும் குறைந்து விட்டது. மக்களின் உணர்வைத் தூண்டி மக்கள் தொகையை அதிகரிப்பதற்காகவே இந்த சிற்பங்கள் இப்படி அமைக்கப்பட்டிருக்கின்றனவாம்.
இன்னொரு பக்கம் பெண்களின் வாழ்க்கை முறை, அம்மியில் அரைப்பது, உரலில் இடிப்பது, துணி துவைப்பது போன்ற சிற்பங்கள் ஏன் மாமியார் மருமகள் சண்டை கூட சிற்பமாக.
கொனார்கிலிருந்து புவனேஷ்வர் செல்லும் வழியில் பிப்பிலி என்னும் கிராமத்தில் ஷாப்பிங் செய்வத்ற்காகவே ஒரு மணி நேரம் நிறுத்துவதாக இருந்தது. அங்கு வரிசையாக கடைகள், எல்லாவற்றிலும் ஒடிஷாவின் கைவினை பொருள்கள். ஆனால் காலையில் டீசல் டாங்க் கீழே விழுந்ததால் ஒரு மணி நேரம் வீணாகி விட்டது. எனவே இங்கு, 15 நிமிடம் மட்டுமே கொடுத்தார்கள். முடிந்த அளவு ஷாப்பிங் செய்து கொண்டோம். வழியில் மதிய உணவை முடித்துக் கொண்டு புவனேஷ்வரில் லிங்கராஜ் கோவிலுக்குச் சென்றோம்.
![]() |
| லிங்கராஜ் ஆலயம் |
லிங்கராஜ் கோவில் புவனேஷ்வரில் அமைந்திருக்கும் பழமையான கோவில். இங்கு இருக்கும் சிவலிங்கம் சுயம்பு லிங்கம் எங்கிறார்கள். அது மட்டுமில்லை, சிவனும்,விஷ்ணுவும் சேர்ந்த அம்சம் என்கிறார்கள். பூரியில் பிரசாதம் தயாரிக்க ஏழு பானைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி சமைப்பது போல இங்கு ஐந்து பானைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி சமைப்பார்களாம். அங்கு போலவே இங்கும் மேலே இருக்கும் பானையில் இருக்கும் உணவுதான் முதலில் வேகுமாம். கோவிலில் எக்கச்சக்க கும்பல். ஜெகன்னாதர் கோவிலைப் போலவே இங்கும் கும்பலில் நசுங்கி வெளியே வந்தோம்.
![]() |
| கேதார்நாத்,விமலாம்பாள் கோவில் |
அங்கிருந்து கேதார்நாத் கோவிலுக்குச் சென்றோம். அங்கு குடிகொண்டிருக்கும் அம்மன் விமலாம்பாள், அவர்கள் பிமலாம்பாள் என்கிறார்கள். அது ஒரு சக்தி பீடம். அம்மனின் சுண்டுவிரல் விழுந்த இடமாம். அம்மன் அழகாக சான்நித்தியதோடு விளங்குகிறாள். தரிசனம் செய்து கொண்டோம். வெய்யில், அலைச்சல், லிங்கராஜ் கோவிலின் தள்ளு முள்ளு, எல்லோரும் மிகவும் ஓய்ந்து விட்டோம்.
வழியில் ஒரு பாலாஜி கோவில் இருந்தது. தரிசனம் செய்யலாம் என்றால் அங்கு திரை போடப்பட்டிருந்தது. நடை திறக்க காத்திருந்தால் விமான நிலையம் செல்ல நேரமாகிவிடும் என்பதால் கிளம்பி விட்டோம். இரவு உணவை கையில் கொடுத்து விட்டார்கள். விமான நிலையத்தில் ரசகுல்லா வாங்கிக் கொண்டேன். விமானம் ½ மணி நேரம் தாமதம். வீடு செல்ல இரவு 12 மணி ஆகி விட்டது. அக்காவும், அவர் கணவரும் கவலையோடு காத்திருந்தார்கள்.
ஒடிஷா யாத்திரையில் கலந்து கொண்டவர்கள்:
இந்த குழுவில் பல் டாக்டராக ஹைதராபாத்தில் பணியாற்றும் சேலத்தை சேர்ந்த ஒரு பெண்ணும், பெற்றோர்களோடு வந்திருந்த ஒரு இளைஞனையும் தவிர பெரும்பான்மையோர் 60+, சிலர் 50+. நான் தனியாக செல்லப் போகிறேன் என்றதும் கேட்ட எல்லோரும், “தனியாகவா?” என்றார்கள். ஆனால் அப்படி தனிமையாக உணரவில்லை. இந்த பயணத்திற்குப் பிறகு உறவினர்களோடு செல்வதை விட, இப்படி தெரியாதவர்களோடு செல்வதே மேல் என்று தோன்றியது. யாரும் யாரையும் காக்க வைக்காமல் நேரத்திற்கு ரெடியாகி விட்டோம். எல்லோருக்கும் ஒரு கமிட்மெண்ட் இருந்தது.
இங்கு வந்திருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் அருணாசலம் என்னும் தொழில் முனைவர். நல்ல கலகலப்பாக இருந்தார். அடுத்ததாக திருமதி சுவர்ணா ஜெகன்னாதனும் அவர் கணவர் ஜகன்னாதனும். ஜ்கன்நாதன் பொதுவுடைமை வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி ஓய்விற்குப் பிறகு நிறைய பயணிக்கிறார்களாம். அதைப் போல கிருத்திகா, சுரேஷ் தம்பதிகளும் நிறைய பயணம் செய்வார்களாம். அதிலும் இந்த யாத்ரிகா டிராவல்ஸ் மூலம்தான் உள் நாடு, வெளி நாடு சுற்றுலாக்கள் செல்வார்களாம். நிர்ப்பவர்களில் நடுவில் நீல நிறத்தில் கட்டம் போட்ட சட்டை அணிந்தவரும், அவருக்கு அருகில் வெள்ளை நிற டி ஷர்ட் அணிந்தவரும் சகோதரர்கள். ஒருவருக்கு மனைவி இல்லை, இன்னொருவரின் மனைவி வெளியே எங்கேயும் வர மாட்டாராம், எனவே சகோதரர்கள் மட்டும் வந்திருந்தார்கள். மே மாதம் ஆஸ்திரேலியா செல்லப் போகிறார்களாம். ஹைதராபாத்தில் பணிபுரியும் பல் டாக்டர்தான் பேபி ஆஃப் த டீம். அவருடைய தாயாரோடு வந்திருந்தார். சேலத்திலிருந்து வந்திருந்த பவானி என்பவரின் பெண்ணும் இந்தப் பெண்ணும் ஒரே வகுப்பில் படித்தார்களாம். அதைப்போல என்னோடு அறையை பகிர்ந்து கொண்ட பத்மஜா என்பவருக்கு நம் ஆன்சிலாவைத் தெரியும் என்றார்(ஒரே வங்கி). எங்கள் இருவருக்கும் நன்றாக ஜெல் ஆகி விட்டது.
அவரவரை அறிமுகபடுத்திக் கொள்ளுங்கள் என்றபோது, நான்,”மத்யமரில் ஆக்டிவ் மெம்பர்” என்றேன், உடனே, சிவகாமி என்பவர், “மத்யமரில் இருக்கிறீர்களா? ராதை சாய்ராமைத் தெரியுமா?” என்றார். நான் உணர்சிவசப்பட்டு, “குஜராத்தில் இருக்கிறாரே, அவர்தானே?” என்றேன், “அது ராதா ஸ்ரீராமாக இருக்கும், இவள் பெங்களூரில் இருக்கிறாள், என் தங்கைதான்” என்றார். “நன்றாக ஓவியங்கள் வரைவாரே, அவர்தானே?” என்றதும் ஆமாம் என்று ஆமோதித்ததோடு என்னோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு தங்கைக்கு அனுப்பினார். அவரிடமிருந்து ராதையின் காண்டாக்ட் நம்பரை வாங்கிக் கொண்ட நான் தற்சமயம் ஃபோனில் பேசிக்கொண்டிருக்கிறேன், விரைவில் நேரில் சந்திப்பேன் என நினைக்கிறேன். சென்னையிலிருந்து வந்திருந்த ஒரு பெண்மணி, அவரது சகோதரி இருவரும் திருச்சி இந்திராகாந்தி கல்லூரியில் படித்தார்களாம். அங்கு பணி புரிந்த என் அத்தை பெண்ணை தெரியும் என்றார்கள். ஒரு நாள் இரவு உணவருந்தும் பொழுது சுரேஷ் என்பவர், மாயவரத்திர்கு அருகில் இருக்கும் பெரம்பூர்தான் எங்கள் பூர்வீகம்” என்றார், “அட! எங்கள் சம்பந்திக்கு அந்த ஊர்தான்” என்றேன். World is small, isn’t?
இவ்வளவும் சொல்லிவிட்டு, யாத்ரிகா டூர்ஸ் பற்றி சொல்லாமல் விடலாமா? எல்லா ஏற்பாடுகளையும் நன்றாக செய்து, நல்ல ஹோட்டலில் தங்க வைத்து, அருமையான, வயிற்றை பாதிக்காத சாப்பாடு போட்டு அழைத்துச் சென்ற யாத்ரிகா ட்ராவல்சுக்கு தாராளமாகா ஒரு ஜே போடலாம். சென்னை அண்ணாநகரிலிருந்து இயங்குகிறது இந்த நிறுவனம். இந்த பதிவுகளை தொடர்ந்து வாசித்து கருத்திட்ட அன்பர்களுக்கு நன்றி.

.jpeg)







.jpeg)


.jpeg)
























