கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, June 14, 2020

மசாலா சாட் - 18

மசாலா சாட் -18

எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டு. சில ஜோசியர்களிடமும் நம்பிக்கை உண்டு. ஆனால் ரிஷப ராசிக் காரர்களுக்கு இன்று பதவி உயர்வு கிடைக்கும், பிரிந்த உறவினர்கள் சேர்வார்கள், புதிதாக வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு என்று பொத்தாம் பொதுவாக அடித்து விடும் ராசி பலன்கள் நிகழ்ச்சியில் நம்பிக்கை இல்லை. இருந்தாலும்  தினசரி தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ராசி பலன்கள் நிகழ்ச்சியை பார்ப்பேன்,கேட்பேன் காரணம், ராசி பலன்களுக்கு இடையே அவர்கள் கூறும் ஐந்தாம் வீட்டில் ராகு இருந்தால் புகழ் கிடைக்கும் போன்ற ஜோதிட டிப்சுகளை  கேட்பதற்காக.  இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் சன் டி.வி., ஜீ டி.வி., ஜெயா டி.வி. மூன்றிலும் அடுத்தடுத்து ராசி பலன்கள் நிகழ்ச்சி வரும். மூன்றிலும் மூன்று விதமாக கூறுவார்கள். இதில் ஜெயா டி.வி.யில் ராசி பலன்கள் நிகழ்ச்சியை வழங்கும் குமரவேல் பரிகாரமாக சில மந்திரங்களை கூறி விட்டு, ஜெய மோகன் எழுதியிருக்கும் இந்த புத்தகத்தைப் படியுங்கள், பால குமாரன் எழுதியிருக்கும் அந்த புத்தகத்தைப் படியுங்கள், எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கும் உப பாண்டவர்கள் என்னும் நூலை வாசித்துப் பாருங்கள், சாரு நிவேதிதாவின் இணைய பக்கங்களை வாசித்துப் பாருங்கள் என்பார். நல்ல வேளை ரஜினியின் அந்த படத்தை பாருங்கள், கமலின் இந்தப் படத்தை பாருங்கள் என்றெல்லாம் கூறாமல் இருக்கிறாரே!

***********************************************************************************

எங்கள் ஊருக்கு பக்கத்தில் வரகூர் என்னும் சிறு கிராமம் . அங்கிருக்கும்  பெருமாள் கோவிலும் அதில் கிருஷ்ண ஜெயந்தியின் பொழுது நடக்கும் உறியடி உற்சவமும் மிகவும் பிரசித்தி பெற்றவை. சமீபத்தில் அங்கு ஒரு திருமணம் நடந்திருக்கிறது. திருமண பெண்ணிற்கு அலங்காரம் செய்ய சென்னையிலிருந்து ஒரு பெண்ணை வரவழைத்திருக்கிறார்கள்(ரொம்ப அவசியம்) வந்த பெண்ணிற்கு கொரோனா இருப்பது தெரிய வந்திருக்கிறது. இப்போது மணப்பெண் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறாளாம். ஊரில் எல்லோருக்கும் டெஸ்ட் செய்து கொண்டிருக்கிறார்களாம், ஊரே பீதியில்.  கடவுளே! சப்கோ சன்மதி தோ பகவான்.

***********************************************************************************

  கீழே இருப்பவை என் அக்காவின் பேரன் ஆறு வயதே ஆன அர்ஜுன் வரைந்தவை:










அர்ஜுன் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்றாலும், முக 
பாவங்களை சிறப்பாக சித்தரித்திருப்பதாக தோன்றியதால் பகிர்ந்திருக்கிறேன்.




 

Thursday, June 4, 2020

நூல் விமர்சனம்

நூல் விமர்சனம் 




புஸ்தகா மூலம் இரண்டு மின் நூல்களை படித்து முடித்தேன். ஒன்று சாவியின் 'கனவுப் பாலம்' மற்றது  கடுகு சாரின் 'கேரக்டரோ கேரக்டர்' . 

நான் 'வாஷிங்டனில் திருமணம்' தவிர சாவியின் எழுத்துக்களை அதிகம் படித்ததில்லை. அது கூட மிகவும் சிறு வயதில் படித்தது. அவருடைய விசிறி வாழையை நிறைய பேர் சிலாகித்து கேட்டிருக்கிறேன். சமீபத்தில் பசுபதிவுகளில் 'பெங்களூர் மெயில்' படித்து வியந்தேன். கல்கி பாணியில் அருமையான நகைச்சுவை சிறு கதை. 

கனவுப் பாலம் க்ரைம் த்ரில்லர். சாவியின் அபிமான தேசமான ஜப்பானில் நிகழ்வதாக கதை அமைக்கப்பட்டிருக்கிறது.  காதலும், க்ரைமும் கலந்த கதையில் நகைச்சுவைக்கு இடம் இல்லை. சம்பவங்களும் அத்தனை த்ரில்லாக இல்லாதது ஒரு குறைதான். நடையில் ஆங்காங்கே சுஜாதாவின் சாயல் தெரிவது ஒரு ஆச்சர்யம்.



கேரக்டரோ கேரக்டர் கடுகு என்னும் அகஸ்தியன் அவருக்கே உரிய நகைச்சுவை எல்லா கட்டுரைகளிலும் இழையோடுகிறது. முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கும் பாட்ஸ்மானைப்  போல முன்னுரையிலேயே விளாசித்தள்ளுகிறார்.

 "இந்தப் புத்தகத்தை படிக்காதவர்கள் பாராட்டுகிறார்கள், புத்தகம் அபாரம் போங்கள்"

"எப்பவும் 200 மில்லி போட்ட மாதிரி ஆடிக்கொண்டேயிருந்த என் வீட்டு மேஜையின் கீழ் உங்கள் புத்தகத்தை வைத்தேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள் மேஜை ஆடுவது நின்று விட்டது"   

கடுகு சாரின் நகைச்சுவை போட்டு உடைக்கும் ரகமோ, அல்லது மற்றவர்கள் மனதை காயப்படுத்தும் ரகமோ இல்லை. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போன்ற நாசூக்கான நகைச்சுவை. 

ராவ் பகதூர் ராமேசம் பற்றி, இவர் மாத்ருபூதத்திடம் பேசுவதும் ஒன்றுதான், தன்  கருத்துக்களை தன்னிடமே உரக்க பேசிக் கொள்வதும் ஒன்றுதான். மாத்ருபூதத்தின் பங்கு 5% என்றால்,மீதி 95% இவருடையதுதான்!

மாணிக்கம் என்னும் கொல்லத்துக்காரர் பற்றி பாவம் மாணிக்கம், நாலடி உயரத்துக்கு இவர் மேடை கட்டினால் அது அரை அடி சாய்ந்து இருக்கும்.அதைச் சரி செய்ய வேறு ஒரு கொல்லத்துக்காரர் தேவைப்படுவார். 

ஜெயம் என்னும் கேரக்டரைப் பற்றி, "ரைட்டர் லட்சுமி வந்திருக்காங்க,பை தி பை அவர் கவிதை எழுதுகிறவரா? நான் எங்கப்பா மேகசீன் படிக்கிறேன்?" என்பது மாதிரி பலரைப் பற்றி பல சமயங்களில் கேட்பார். சீர்காழியிடம், "ஓரம் போ பாட்டு பாடினது நீங்கள்தானே?" என்று கேட்பார். ஏன் சிவாஜியிடமே, 'என்ன சார் ஒரு அம்பது படத்திலாவது நடித்திருப்பீங்களா?' என்று கேட்டிருக்கிறார்.

கனகாம்பரம் என்னும் கேரக்டரைப் பற்றி எழுதும் பொழுது, இவரது நகைச்சுவை உணர்வு கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறது.  எப்படியாவது ஒரு பிரபல எழுத்தாளராகிவிட வேண்டும் என்ற துடிப்பில் கனகாம்பரம் செய்யம் காரியங்களை எப்படி விவரிக்கிறார் பாருங்கள். "அந்த இலக்கிய பத்திரிகையில் வரும் அர்த்தமற்ற வாக்கியங்களை படித்து ரசிப்பார். (இந்த உத்வேகத்தின் எழுச்சியின் பரிணாம ஆழத்தில் உள்ள யதார்த்த வேகத்தில் உள்ள தளை பிரதிபலிப்பாக எழும் பாசிடிவிசமே இடை நிலவரத்தின் கருத்தாகும்.) சந்தடி சாக்கில் ஸோ கால்டு இலக்கிய பத்திரிகைகளுக்கும் ஒரு குத்து. 

பத்திரிகை ஜோக்குகளில் எழுத்தாளரை ஜில்பா, ஜிப்பா ஆசாமியாக யாரோ ஒரு ஆர்ட்டிஸ்ட் போட்டாலும் போட்டார், கனகாம்பரம் அப்படியே தன்னை மாற்றிக்கொண்டு எழுத்தாளராகி விட்டார். 

ஒரு கட்டுரை எழுதி விட்டால், அது பிரசுரமானால் ஒழிய அடுத்த கட்டுரை எழுத மாட்டார். இதனால் ஒரு கட்டுரைக்கும் அடுத்த கட்டுரைக்கும் இடையே இரண்டு,மூன்று வருட இடைவெளி கூட ஏற்பட்டு விடும். அடிக்கடியா கல்கத்தாவிற்கு தமிழ் பத்திரிகை ஆசிரியர்கள் வருகிறார்கள்?

அஞ்சாம் பிளாக் மாமியைப் பற்றி எழுதும் போது, மாமிக்கு தலைவலி, மாமி சினிமா போறேன், மாமி இன்று உபவாசம் என்ற ரீதியில்தான் பேசுவாள். ஏன் சொந்தக் கணவனிடம் பேசும் போது கூட," உங்களை கல்யாணம் பண்ணிக்க கொண்டதில் என்ன லாபம்? மாமிக்கு ஒரு நகை நட்டு உண்டா? இல்லை சினிமாதான் உண்டா?" என்பாள்.

இவர் சித்தரித்திரிக்கும் கேரக்டர்களை பற்றி படிக்கும் பொழுது,  ஒரு வருத்தம் படருகிறது. அப்போதெல்லாம் இப்படி விதை விதமான, தனித்தன்மை கொண்ட மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு நமக்கு வாய்த்தது. அவர்கள் இயல்பாகவே தங்களை வெளிப்படுத்திக் கொண்டார்கள், இப்போது குறிப்பாக நகரங்களில் நெருங்கி பழகினாலே ஒழிய மற்றவர்களின் சுய ரூபம் தெரிவதில்லை. எல்லோரும் ஒரு முகமூடியோடுதான் திரிகிறார்கள். 

அதிலும் " உன் தலையில் இடி விழ, நீ காலரா வந்து போய் விட" என்று திட்டிக் கொண்டேதான் உதவி செய்யும் பட்டம்மா என்னும் 
கேரக்டரையும், ராமசேஷு என்னும் காரெக்டரையும், தபால்காரர்  அல்லா பக்ஷ் ஐயும் பற்றி படிக்கும் பொழுது இப்படிப்பட்ட கேரக்டர்களை நாம் இனிமேல் பார்க்கவே முடியாதோ என்றுதான் தோன்றுகிறது.  தீபாவளி, பொங்கல் என்றால் அல்ல பக்ஷ் யார் வீட்டிலும் போய் இனாம் கேட்க மாட்டார். அவர்களாகவே ஐந்து,பத்து என்று கொடுத்து விடுவார்கள். இல்லாவிட்டால் பண்டிகை கொண்டாடிய திருப்தியே அவர்களுக்கு இருக்காது. என்று அவர் எழுதியிருப்பதை படிக்கும் பொழுது, எப்படியிருந்த தேசத்தில் இன்று பிரிவினை தோன்றி விட்டதே என்னும் வருத்தம் மேலிடுவதை தவிர்க்க முடியவில்லை. 

கடைசியில் தன்னையும் ஒரு கேரக்டராக அவர் வர்ணித்திருக்கும் சிறப்பை நீங்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அவருடைய வர்ணனைக்கு தன் ஓவியத்தில் உயிர் கொடுத்திருக்கிறார் கோட்டோவிய மன்னன் கோபுலு.

நம் சேமிப்பில் இருக்க வேண்டிய புத்தகம்.    

இது ஒரு மீள் பதிவு.  

Sunday, May 31, 2020

சில கோவிட்-19 கற்பனைகள்

சில கோவிட்-19 கற்பனைகள் 

இந்த வருடம் நாம் பண்டிகைகளை எப்படி கொண்டாடப் போகிறோம் என்று தெரியவில்லை. கோகுலாஷ்டமி அன்று குட்டி கண்ணனை வரவேற்க முறுக்கு,சீடை, அப்பம், என்று பட்சணங்கள் செய்து வைத்து விட்டு கூடவே சானிடைசரும் வைக்க வேண்டுமோ? 

நவராத்திரியின் பொழுது தினமுமே வீட்டிற்கு வருகிறவர்களுக்கு வெற்றிலை, பாக்கு கொடுக்கும் பழக்கம் மாறி, வாரத்தில் ஒரு நாளோ, இரண்டு நாட்களோ அழைப்பு அனுப்பி வெற்றிலை பாக்கு தரும் வழக்கம் வந்து விட்டது. இந்த வருடம் அதிலும் சோஷியல் டிஸ்டென்ஸ் மெயின்டைன் செய்வதற்காக நேரமும் குறிப்பிடப்படுமோ? அதிலும் நவராத்திரி கிஃப்ட்டை ஒரு பையில் போட்டு ஒரு கழியில் மாட்டி எடுத்துக் கொள்ளச் சொல்வார்களோ?

தீபாவளிக்கு டிரஸ் வாங்கும் பொழுது கண்டிப்பாக மேட்சிங்காக மாஸ்க்கும் வாங்கப்படும். 

மார்கழியில் கோலம் போடும்பொழுது சிலர் ஸ்கார்ஃப் கட்டிக்கொள்வார்கள். அதோடு சேர்ந்து மாஸ்க்கும் அணிந்து கொண்டால் கொஞ்சம் பயமுறுத்துவது போலத்தான் இருக்கும். 

போகி அன்று கொரோனாவை கொளுத்தி விட்டு, புத்தாண்டை புது மலர்ச்சியோடு வரவேற்கலாம். 

*கொரோனவை கொளுத்தி விட்டு என்றதும் வட கர்நாடகாவில் ஒரு கிராமத்தில் நடந்திருக்கும் ஒரு வினோதமான நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. எப்போதெல்லாம் ஊரில் உயிர்கொல்லி வியாதிகள் பரவுகிறதோ அப்போதெல்லாம் அந்த வியாதியையே ஒரு பெண் தெய்வமாக பாவித்து, வேப்பிலைகளால் அலங்கரித்து, பூஜித்து, இனிப்புகள் படைத்து எங்கள் ஊரை விட்டு வெளியேறு என்று வேண்டி, ஊரின் எல்லையில் கொண்டு விட்டு விடுவார்களாம். இதற்கு முன்னால் சிக்கன் குனியா வந்து பொழுதும் இப்படி செய்தார்களாம். இப்போது கொரோனமாவுக்கு(பெயரை கவனியுங்கள்) இந்த பூசை நடந்திருக்கிறது.   


கொரோனாவால் வியாபாரம் படுத்து விட்டது, வியாபாரிகளுக்கு நஷ்டம் என்றுதான் எல்லோரும் சொல்கிறோம். டாபர் கம்பெனி மட்டும் இதற்கு விதிவிலக்கு. கடந்த இரண்டு மாதங்களில் இதன் தயாரிப்பான தேன், மற்றும் ஸ்யவனபிராஷ் லேகியம் நிறைய விற்றிருப்பதால் டாபர் கம்பெனி லாபம் ஈட்டியிருக்கிறதாம்.  பலருக்கு துன்பம், சிலருக்கு இன்பம். 
--------------------------------------------------------------------------------------------------------------------------
சில கோவிட்-19 ஜோக்குகள்:

முதலாமவர்: என்னது லேப்டாப் சர்வீஸ் பண்ண போனவனை குவாரண்டைன்னுக்கு அனுப்பி விட்டார்களா?

இரண்டாமவர்:ஆமாம், எங்கே போற என்று கேட்ட போலீசிடம், வைரஸ் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறான், முழுமையாக கேட்காமல் குவாரன்டைனுக்கு அனுப்பி விட்டார்கள். 
--------------------------------------------------------------------------------------------------------------------------
மணப்பெண்ணின் அப்பா: என்ன ஐயரே, தாலிக் கயிறா? தாம்புக் கயிறா?  இவ்வளவு நீளமா வாங்கியிருக்கீங்க?

ஐயர்: நாத்தனார் தாலி முடியும் பொழுது சோஷியல் டிஸ்டென்ஸ் மெயின்டைன் பண்ண வேண்டாமா? அதுக்குத்தான் 

வாய் விட்டு சிரியுங்கள் நோய் விட்டுப் போகட்டும். 


* நன்றி Times of India




Monday, May 25, 2020

இரு கதைகள்

மத்யமரில் வெளியான என் இரு கதைகள் அங்கு வாசிக்கத்தவர்களுக்காக:

அவள் வருவாள் 

அலைபேசியை துண்டித்த பாலாவிற்கு சந்தோஷம் கரை புரண்டது.
"மண்டே கிரிஜா வராளாம்.." 
"ஓ அப்படியா? வெரி குட்" ராதா என்னும் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த சந்தோஷம் தொற்றிக் கொண்டது. 
ஞாயிறு மாலையிலிருந்தே பாலா பரபரப்பானாள். 
திங்கள் காலை டிகாஷன் போடும்பொழுது, கிரிஜா நினைவுதான். அவள் வந்ததும் நல்ல காபியாக கொடுக்க வேண்டும். காபி  கிரிஜாவுக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைத்துக் கொண்டாள். 
எட்டு மணி ஆனதும் தவிப்பாகி விட்டது. "இத்தனை நேரம் வந்திருக்க வேண்டுமே? ஏன் இன்னும் வரவில்லை?
செல்போனில் கிரிஜாவை தொடர்பு கொண்டபொழுது அவள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக ரிக்கார்ட் செய்யப்பட்ட  குரல் கூறியது. 
பாலா வாசலுக்கும், உள்ளுக்கும் நடப்பதைப் பார்த்து ராதா,"ஏன் டென்ஷனாகுற? கிரிஜா வருவாள் .." என்றார். 
பால்கனியிலிருந்து எட்டிப்பார்த்த பொழுது கிரிஜா தன் வண்டியை நிறுத்தி விட்டு இறங்குவது தெரிந்தது. 
தோ! கிரிஜா வந்துட்டாளே! குடுகுடுவென்று வாசலுக்கு ஓடி கதவை திறந்தாள்.
"வாவா! ஏன் இவ்வளவு நேரமாயிடுச்சு?.. இந்தா காபியை  குடிச்சுட்டு அப்புறம் வேலையைப் பார். "
சரிம்மா, இத்தனை நாளா எல்லா நீங்களே தனியா பாத்துக்கிட்டீங்களா?" என்றாள் லாக் அவுட் முடிந்து வேலைக்கு வந்திருக்கும் வேலைக்காரி கிரிஜா. 

Saturday, May 23, 2020

மசாலா சாட் -18

மசாலா சாட் - 18 

என் மகள் ஒப்போஸ்(OPOS) குக்கிங் பற்றி ரொம்ப சொன்னாளே என்று அதைப் பற்றி யூ டியூபில் தேடினேன். முதலில் சிம்பிளாக ஏதாவது செய்து பார்க்கலாம் என்று தேடியதில் இஞ்சி பூண்டு விழுது செய்முறை கண்ணில் பட்டது.

Wednesday, May 13, 2020

என்ன என்ன பாவங்களோ..?

என்ன என்ன பாவங்களோ..?


கம்பராமாயணத்தில், ராமனை காட்டிற்கு அனுப்பி விட்டு தான் பட்டத்தை ஏற்றுக் கொண்டால் தான் எப்படிப்பட்ட பாவியாவேன் என்று கௌசல்யாவிடம் கூறும் பரதன் என்னென்ன பாவங்கள் இருக்கின்றன என்று ஒரு லிஸ்ட் கொடுக்கிறான்.

Friday, May 8, 2020

திக் திக் நேரம் (ஒரு கதையும் ஒரு நிஜமும்)

திக் திக் நேரம் 
(ஒரு கதையும் ஒரு நிஜமும்)

கதை: 

முரளி அலுவலகத்திலிருந்து கிளம்பி, அம்மா சொல்லியிருக்கும் சாமான்களை வாங்கிக் கொண்டு ஊருக்கு கிளம்பும் பொழுது மணி ஏழாகி விட்டது.  அவன் அலுவலக பியூன் அவனோடு பஸ் ஸ்டாண்ட் வரை வந்து பஸ்ஸில் ஏற்றி விட்டான். 

"இருட்டடிச்சே சார், கையில் பூவெல்லாம் எடுத்துக்கிட்டு போறீங்க.."

"ஊருல குல தெய்வம் கோவிலில் நாளைக்கு பூஜை. அதுக்குத்தான் பூ".

"கொஞ்சம் முன்னாள் கிளம்பியிருக்கலாமே சார். இருட்டின பிறகு மல்லிகைப் பூவெல்லாம் எடுத்துக்கிட்டு போகக் கூடாது"

"ஏன்?"

அது வந்து.. மோகினி.. சென்று தொடங்கியவன், "அதெல்லாம் சும்மா சார். நீங்க தகிரியமா  போங்க..  வீடு ரோடு மேல தான இருக்கு? 

"இல்ல ரோட்டிலிருந்து உள்ள ஒரு முக்கா மைல் நடக்கணும்." என்று முரளி கூறியதும்,"அப்படியா? என்றவன் கொஞ்சம் சுரத்து குறைந்து
கந்த சஷ்டி கவசம் தெரியும்ல? சொல்லிகிட்டே போய்டுங்க..  ஒண்ணும் பயமில்ல.." என்று பய விதையை மனசுக்குள் விதைத்தான்.

முரளியின் சொந்த ஊருக்கு திருச்சியிலிருந்து இரண்டு பஸ்கள்  மாறிச் செல்ல வேண்டும். கடைசி பஸ் இரவு எட்டு மணிக்கு. அவர்கள் ஊரின் மெயின் ரோடில் இறங்கி அங்கிருந்து முக்கால் மைல் நடக்க வேண்டும். இரண்டு புறமும் வயல்கள் இருக்க, ஒத்தையடி பாதை. ஊரின் ஆரம்பத்தில் ஒன்றும், நடுவில் ஒன்றுமாக இரண்டே விளக்குகள்தான். அதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல்தான் இருந்தான். ஆனால் அவனை ரோட்டில் இறக்கி விட்டு விட்டு பேருந்து நகர்ந்ததும்  பொட்டென்று தெரு விளக்குகள் அணைந்து  சாலை  கும்மிருட்டாகியது.  

"எங்க போறீங்க?' என்று ஒரு குரல் வந்ததும் கொஞ்சம்  திடுக்கிட்டான். இருட்டுக்கு கண்களை பழக்கிக் கொண்டு  பார்த்தபொழுது அந்தக் குரலுக்குரியவர் பக்கத்திலிருந்கும் குடிசை வாசலில் நின்றிருப்பது தெரிந்தது.

"பட்டாமணியர் வீட்டுக்கு".

"பார்த்து போங்க, இன்னிக்கு காலையிலிருந்து கரெண்டு போயிட்டு போயிட்டு வருது."

முரளி நடக்க ஆரம்பித்தான். செல் ஃபோனில் டார்ச் லைட்டை  போட்டுக் கொண்டான். கொஞ்ச தூரம் போனதும் டார்ச் ஒளியிழந்து நின்றது. வேலை பளுவில் சார்ஜ் செய்ய மறந்தது நினைவில் வந்தது. வேரு வழியில்லை. இருட்டில்தான் நடக்க வேண்டும். 

சுற்றிலும் கண்ணை ஓட்டிய பொழுது சற்று தொலைவில்  குபீரென்று ஏதோ பற்றி எரிந்தது. கொள்ளிவாய் பிசாசு..? சீ ! அப்படியெல்லாம் ஒன்று கிடையவே கிடையாது. அது மீத்தேன் வாயு. 

கால்கள் சற்று எட்டிப் போட, வாய் கந்த சஷ்டி கவசத்தை முணுமுணுக்க ஆரம்பித்தது. தன்னை யாரோ தொடர்கிறார்கள் என்பது போல் உணர்ந்தான். 

பிரமை இல்லை, நிஜம்தான். தனக்குப் பின்னால் சரக் சரக்கென்று காலடி ஓசை சீராக கேட்பதை உணர்ந்தான்.  அவன் வேகமாக நடக்கத் துவங்க அந்த காலடியும் வேகமாக தொடர்ந்து வந்தது. 

பாதி தூரம் கடந்து விட்டோம், இன்னும் பாதிதான், வேறு வழியில்லை, ஓட ஆரம்பித்தான். அவனைத்துரத்தி வந்த அதுவும் ஓடி வந்தது. 

மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடினான். அப்பாடா! இதோ ஊரு துவக்கத்தில் இருக்கும் சந்திக்கரை பிள்ளையார் கோவில் கண்ணில் படுகிறது.  வேகத்தை மட்டுப்படுத்தினான். 

கோவிலை நெருங்கி கன்னத்தில் போட்டுக்கொண்டு கும்பிட்ட பொழுது, 

"வா முரளி, ஏன் இவ்வளவு நேரமாயிடிச்சு? " மாமா தோளைத் தொட்டார். 

"என்ன இது? உடம்பெல்லாம் இப்படி வேர்துருக்கு?"
 
"நடந்து வந்ததால இருக்கும்." பேசிக் கொண்டே வந்த வழியை உற்றுப் பார்த்தான். எதுவும் தென்படவில்லை. 

வீட்டிற்குப் போய் குளித்து, சாப்பிட்டு, படுக்கும் பொழுது கூட பயம் முழுமையாக விலகவில்லை. நடந்த அசதி, ஜில்லென்று காற்று எல்லாமுமாக சேர்ந்து ஆழ்ந்த தூக்கம் வந்தது. காலையில் தாத்தா யாரிடமோ சத்தம் போட்டுக் கொண்டிருப்பது கேட்டு கண் விழித்தான். பல் துலக்க கொல்லைப்புறம் சென்ற பொழுது, அங்கு மாட்டுக் கொட்டிலில் ரெங்கனும், அனுசுயாவும் பேசிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது.  

"நேத்து ராத்திரி சினிமாவுக்கு போயிட்டு எத்தனை மணிக்கு வந்த?"
அதையேன்  கேக்குற? ஒன்பது மணிக்கு ரோட்டுல வந்து எறங்கினா கும்மிருட்டு. மெதுவா நடந்தேன். முன்னால யாரோ போய்கிட்டிருந்தாங்க, சரி தொணையாச்சுன்னு நானும்  பின்னலேயே வந்தேன், அவன் என்ன நினைச்சானோ..திடீர்னு ஓட ஆரம்பிச்சுட்டான்.."

"அப்புறம்?"

அப்புறம் என்ன? நானும் அவன் பின்னாலேயே ஓடியாந்துட்டேன்.."

ரங்கன் சொன்னதைக் கேட்டு அனுசுயா கலகலவென்று சிரிக்க, முரளி எதுவும் காதில் விழாதது போல் உள்ளே வந்தான்.  
*********************************************************************************
நிஜம்:

அப்போது எங்கள் அக்கா செயின்ட் மேரீஸ் சாலையில் வசித்து வந்தார். அவர் வீட்டுக்கு எதிரே ஒரு இடுகாடு உண்டு. பல திரைப்படங்களில் வந்திருக்கிறது அந்த இடுகாடு. 

என் சகோதரியின் கணவர் வேலை பார்த்த தொழிற்சாலையில் வேலை நேரம் காலை, மதியம், இரவு என்று ஷிஃப்ட் மாறி  மாறி வரும். அவர் இரவு நேர ஷிஃப்ட் பார்க்கச் சென்றிருந்த ஒரு நாள் நாங்கள் இரவு உணவை முடித்து விட்டு பேசிக் கொண்டிருந்தோம். அப்போது 'ஜல் ஜல்'  என்று சலங்கை ஒலி கேட்டது. முதலில் சற்று அசிரத்தையாக இருந்த நாங்கள் அந்த ஒலி வீட்டைச் சுற்றி வருவது போல் கேட்டதும் கொஞ்சம் பயந்தோம். தினமும் இரவு 9:30க்கு மேல் கேட்கத் தொடங்கும் அந்த சலங்கை சத்தம் பத்து அல்லது பத்தே காலுக்கு அடங்கி விடும். 

ஒரு தனி வீட்டின் போர்ஷனான அதில் குழாய், பாத்ரூம், டாய்லெட் எல்லாம் வெளியேதான் இருந்தன. ஒரு நாள் இரவு சாப்பாடு,மற்றும் வேலைகளை முடித்து கதவை சாத்தியாகி விட்டது. திடீரென்று பாத்ரூமில் விளக்கெரிந்து குழாயில் தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டதும், நானும் என் அக்காவும் மிகவும் பயந்து விட்டோம். பாத்ரூமில் யாரு? என்ற எங்கள் கேள்விக்கு பதில் இல்லை. சற்று நேரம் கழித்து வாசல் அழைப்பு மணியை யாரோ அழுத்தினார்கள். தயக்கத்தோடும், பயத்தோடும் மெள்ள கதவைத் திறந்து பார்த்தால் வெளியே எங்கள் சகோதரர்! வரும் வழியில் எதையோ மிதித்து விட்டதாகவும், அதனால் நேராக பாத்ரூமுக்குப் போய் காலை கழுவிக் கொண்டு வந்ததாகவும் சொன்னார். எங்களை பயமுறுத்தவே வேண்டுமென்றே எங்கள் கேள்விக்கு பதில் அளிக்கவில்லையென்றும் சொன்னார்.   

அதோடு தினசரி ஜல் ஜல் என்று சப்தம் வருகிறதே அது என்ன தெரியுமா? என்று கேட்டார். அவரே சொல்லட்டும் என்று நாங்கள் பேசாமல் இருந்தோம். 

"ஒரு ரிக்ஷாகாரன் தன்னுடைய வண்டியின் முன் சக்கரத்தில் சலங்கையை கட்டி வைத்திருக்கிறான். அவன் சவாரிக்காக இந்த தெருவை சுற்றி சுற்றி வரும்பொழுது எழுப்பப்படும் ஒலிதான்  நம்மை இத்தனை நாட்களாக பயமுறுத்தியிருக்கிறது".என்று கூறியதும் "சே! இவ்வளவுதானா?" என்று நினைத்துக் கொண்டோம். பயம் விலகி விட்டதாலோ என்னவோ எங்களுக்கு அதன் பிறகு அந்த சலங்கை சத்தம் காதில் விழவில்லை.  


Monday, May 4, 2020

மசாலா சாட்

மசாலா சாட் - 17 

லாக் அவுட் தொடங்கிய முதல் வாரம்:

காசுக்கு கேடா ஒரு வேலைக்காரியை வைத்துக் கொண்டிருக்கிறோம். என்னவோ வீட்டைப் பெருக்கி,  மெழுகினேன் என்று பேர் பண்ணிவிட்டு செல்கிறாள். இப்போது நாமே செய்து கொள்ளும் பொழுது, வீடு பளிச்சென்று இருக்கிறது. பாத்திரங்கள் மின்னுகின்றன.

லாக் அவுட் தொடங்கிய இரண்டாம் வாரம்:

நேற்றுதான் வீட்டை மெழுகினோம். நாளை மெழுகிக் கொள்ளலாம். 

லாக் அவுட் தொடங்கிய மூன்றாவது வாரம்:

ஐயோ! சிங்கில் இவ்வளவு பாத்திரம் கிடக்கிறதே? வீட்டை செவ்வாய், வெள்ளி மெழுகினால் போதும். 

தற்சமயம்:

முடியல, தோள் வலிக்கிறது. லாக் அவுட் எப்போது முடியும்? பார்ஷியல் லிஃட்ல வேலைக்காரர்களை அனுமதிக்கலாம். அதுவும் எசென்ஷியல் சர்வீஸ்தானே? 

லாக் அவுட் பீரியட்டில் பலரும் அவர்கள் பார்த்த திரைப்படங்களை பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள்.  நான் யூ டியூபை சரணைடைந்தேன். குறும்படங்கள், உபன்யாசங்கள், பிரபலங்களின் பேட்டிகள் என்று பார்க்கிறேன்.

யூ ட்யூபில் பல பழைய தமிழ்ப் படங்கள் காணக்  கிடைக்கின்றன. தனிகுடித்னம் சினிமா கொஞ்சம் பார்த்தேன். நாடகத்தை ரசிக்க முடிந்தது போல் திரைப்படத்தை ரசிக்க முடியவில்லை. காமு என்னும் முக்கிய பாத்திரத்தை ஏற்று நடித்த கே.ஆர். விஜயா மடிசார் கட்டிக்கொண்டு காபியை தூக்கி குடிக்காமல் எச்சில் பண்ணி குடிக்கும் காட்சியை பார்த்த பிறகு தொடர்ந்து பார்க்க பிடிக்காமல் நிறுத்தி விட்டேன்.

சி.வி. ராஜேந்திரன் இயக்கத்தில் சித்ராலயா கோபு கதை வசனத்தில் லட்சுமி,ஜெய்சங்கர், முத்துராமன், வெண்ணிற ஆடை நிர்மலா, நாகேஷ்,
வி.கே. ராமசாமி முதலியவர்கள் நடித்திருந்த 'வீட்டுக்கு வீடு' படம் பார்த்தேன்.
பாடல்களை ஓட்டி விட்டால் படம் ரசிக்கும்படி இருந்தது. எனக்குத் தெரிந்து ஜெய்சங்கர் நடித்திருந்த படங்கள் இரண்டுதான். ஒன்று வீட்டுக்கு வீடு, மற்றது  தளபதி.

இந்தக் கதையை அப்படியே ராம்கி,விவேக் போன்றவர்கள் நடித்து ஒரு படம் வந்தது. ஏன் கமலஹாசனின் 'காதலா காதலா' கூட இதே கதைதான்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களும் காணக் கிடைக்கின்றன. அவற்றுள் கே. பாலச்சந்தரின் 'ஜன்னல்' சீரியல்கள் எனக்கு மிகவும் பிடித்தன. அதிலும்  லட்சுமியும், எஸ்.பி.பி.யும் நடித்திருந்த 'அடுத்த வீட்டு கவிதை' என்னும் சீரியல் மிகவும் பிடித்தது. எஸ்.பி.பி. சற்று மிகை நடிப்பை கொடுத்திருந்தாலும், லட்சுமியின் நடிப்பு பிரமாதம்! கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்பே லிவிங் ரிலேஷன்ஷிப் பற்றி எந்த வித ஆபாசமும் இல்லாமல் கன்வின்சாக எடுத்திருக்கும் பாலச்சந்தர் ஜித்தன்தான். சேத்தன் பகத் எழுதியிருந்த 'ஒன் இந்தியன் கேர்ள்' நாவலை படித்த பொழுதும் எனக்கு இப்படித்தான் தோன்றியது. ஒரு பெண், மூன்று ஆண்கள் என்னும் கருவை எழுபதுகளிலேயே படமாக எடுத்திருக்கிறாரே பாலச்சந்தர் என்று வியந்தேன்.

சரி இப்போது ஒரு பழைய பாடல்.




Saturday, May 2, 2020

சொல்லாமல் விட்டவை ....

சொல்லாமல் விட்டவை ....


பெங்களூரை பெண்களூர் என்று குறிப்பிடுவதைக்க குறித்து கீதா அக்கா எழுதியிருந்தார்.

Wednesday, April 29, 2020

கொரோனா பயங்கள் தேவையா?

கொரோனா பயங்கள் தேவையா?


நான் பிறந்ததும் இதே போல் ஒரு சார்வரி வருடத்தில்தான். அந்த வருடத்திலும் இப்படி ஏதாவது பாதிப்பு இருந்ததா? என்று என் பெரிய அக்காவிடம் கேட்டேன்.

Monday, April 27, 2020

ஜே.கிருஷ்ணமூர்த்திக்கு ஜே!


ஜே.கிருஷ்ணமூர்த்திக்கு ஜே!



SECURITY IS A PRISON என்பது ஜே.கிருஷ்ணமூர்த்தி கூறியது. இதை வைத்து பாலகுமாரன் கூட தனது இரும்பு குதிரைகள் நாவலில் 'விஸ்வநாதனுக்கு பின்னால் ஒரு வலுவான குடும்பம் இருந்தது, அவனை முன்னேற விடாமல் தடுத்தது' என்று எழுதியிருப்பார். சமீபத்தில் நான் பார்த்த பல தமிழ் வெப் சீரிஸ்கள் என்னை ஜே.கிருஷ்ணமூர்த்திக்கு ஜே போட வைக்கின்றன.

இந்த வெப் சீரிஸ்கள் பலவும் திறமையுள்ள இளைஞர்களால் எடுக்கப்படுகின்றன.  ஆனால் இந்த திறமையை வைத்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதுதான் மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

Friday, April 17, 2020

விடுமுறை விளையாட்டுகள்

 விடுமுறை விளையாட்டுகள் 


இப்போது லாக் அவுட் பீரியட். எல்லோரும் வீட்டில் இருக்க வேண்டிய நிர்பந்தம். இந்த வருட கோடை  விடுமுறையை  வீட்டிற்குள்ளேயே கழிக்க வேண்டிய நிர்பந்தம் குழந்தைகளுக்கு. இல்லாவிட்டால் அவர்களை ஏதாவதொரு சம்மர் வகுப்பில்  சேர்த்து விட்டிருப்பார்கள். 

Saturday, April 4, 2020

வரமா? சாபமா?

வரமா? சாபமா 

வரங்களே சாபங்களானால் 
தவங்கள் இங்கே 
யாருக்காக? 
என்று அப்துல் ரஹ்மானின் புதுக்கவிதை ஒன்று உண்டு.

Saturday, March 28, 2020

நம்புவதே வழி

நம்புவதே வழி   

21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு. அத்தியாவசிய பொருள்கள் கிடைக்கும் என்கிறார்கள். ஆனாலும் மக்கள் மனதில் ஒரு பீதி. இதையெல்லாம் பார்க்கும் பொழுது இப்படி பீதியூட்டிய வேறு சில தருணங்கள் நினைவுக்கு வந்தன.

Thursday, March 19, 2020

நிழலும், நிஜமும்


நிழலும், நிஜமும்

பொது இடங்களைப் பற்றி நமக்கு கிடைக்கும் பல பிம்பங்களை சினிமாக்கள்தான் உருவாக்குகின்றன. ஆனால் நிழலுக்கும் நிஜத்திற்கும் நிறைய வித்தியாசங்கள். உங்களில் யாராவது போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றிருக்கறீர்களா? எனக்கு அந்த சான்ஸ் கிடைத்தது. 

Wednesday, March 4, 2020

மசாலா சாட் - 16 சில நிகழ்வுகள், சில செய்திகள்

மசாலா சாட்  -  16  
சில நிகழ்வுகள், சில செய்திகள்

என்னுடைய சென்ற சென்னை விஜயத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கல்யாண மாலை நிகழ்சிக்கான பேச்சரங்கம் ஒன்றில் கலந்து கொண்டேன்.

சென்னையில் நடை பெற்ற ஆன்மீக பொருட்காட்சியில்தான் அது நிகழ்ந்தது. நிகழ்ச்சி ஐந்து மணிக்கு துவங்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், நாங்கள் நாலு முப்பதுக்கே அரங்கத்திற்கு சென்று விட்டோம்.  அப்போதுதான் மேடையை தயார் செய்து கொண்டிருந்தார்கள்.

Monday, February 17, 2020

ஒன்றைப் படித்தேன், ஒன்றை ரசித்தேன்.

ஒன்றைப் படித்தேன், ஒன்றை ரசித்தேன்.



அதெல்லாம் ஒரு காலம், தீபாவளி என்றால் புத்தாடை, பட்டாசு, பட்சணங்கள், இதோடு தீபாவளி மலர்களும் இடம் பிடித்த காலம். தீபாவளி மலர்கள் விலை அதிகம் என்பதால் வீட்டில் வாங்க மாட்டார்கள். யார் வாங்குகிறார்களோ அவர்கள் வீடுகளில் அதைப் பார்க்கும் பொழுதே கை துறுதுறுக்கும். அவர்களோ அதை தொட விட மாட்டார்கள். அவர்கள் கவனிக்காத பொழுது, நைசாக புரட்டி விட்டு கீழே வைத்து விட வேண்டும். அவர்கள் வீட்டில் எல்லோரும் படித்த பிறகுதான் படிக்க கொடுப்பார்கள். சில சமயங்களில் ஒரு மாதம் கூட ஆகி விடும்.